BB Tamil 8 Day 48: `காதல்... காதல்...' ராணவ் செய்யும் அலப்பறை; சட்டென்று பொறுமையை இழக்கிறாரா விசே?
இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்த விதம் அத்தனை ஜாலியாக இருந்தது. போட்டியாளர்களை சுவாரசியமாக போட்டு வாங்கினார். ஆனால் இது முதல் பகுதியில் மட்டுமே. பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. இழுவையான விசாரணை.
போட்டியாளர்கள் மழுப்பி மழுப்பி பதில் சொல்லி சொதப்புகிறார்களா அல்லது விசே எளிதில் பொறுமையை இழந்து விடுகிறாரா என்பதில் இரு தரப்பிற்கும் இடையே ஒரு போட்டியே நடக்கிறது எனலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 48
கண்ணாடி அணிந்து ஸ்மார்ட்டான லுக்கில் அரங்கிற்கு வந்தார் விசே. “இந்த வாரம் வீடு மாறியிருக்கு. அதிகாரமும் மாறியிருக்கு. ஆனா அந்த அதிகாரம் எப்படி கையாளப்பட்டது?.. வாங்க விசாரிப்போம்” என்றபடி உள்ளே சென்றார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ஒரு சாக்லேட் விளம்பரம். ‘Do nothing’ என்கிற தலைப்பில் உருவாக்கப்பட்டிருந்த போட்டியாளர்களின் புகைப்படங்களும் வீடியோ தொகுப்பும் சுவாரசியமாக இருந்தது. விசே அனுப்பியிருந்த விதம் விதமான உணவுகளை மக்கள் பரவசத்துடன் ரவுண்டு கட்டி அடித்தார்கள். (இப்படி அனுப்புவதற்கு முன்னால் ஒரு தகவல் சொன்னால், போட்டியாளர்கள் சமைக்கும் உணவு வீணாகாமல் போகுமே என்கிற சமூக அக்கறை வந்து போனது!)
ரவுண்டு கட்டி சாப்பிட்ட பிறகு பொழுது போகாமல் truth or dare விளையாடினார்கள். இதில் விஷால் - தர்ஷிகா லவ் டிராமா அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. விஷாலை காப்பிடியத்து முன்னேறத் துடிக்கும் ராணவ், தானும் அப்படியொரு காதல் ஒப்பந்தத்தை பவித்ராவுடன் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் இவையெல்லாம் ஆர்கானிக்காக இல்லாமல் செயற்கையாக இருக்கின்றன.
பார்வையாளர்களுடன் சேர்ந்து விசே நடத்திய ‘கைத்தட்டல்’ டிராமா
வழக்கம் போல் பார்வையாளர்களுடன் உரையாடத் துவங்கினார் விசே. “நாடு டாஸ்க் எப்படியிருந்தது, இப்படியொரு நாட்ல நீங்க இருப்பீங்களா?” என்று அவர் கேட்டதற்கு “ஆதார் கார்டை கேன்சல் பண்ணிட்டு போயிடுவோம்’ என்று ஒருவர் குறும்பாக பதில் அளித்தார். “ நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா.. நான் யார் பெயரைச் சொன்னாலும் நீங்க பயங்கரமா கைத்தட்டணும்.. அப்பதான் அவங்க கன்ஃப்யூஸ் ஆவாங்க.. ஒகே .. ரெடியா ” என்று அவர்களிடம் ஒரு டீல் போட்ட விசே, “ஒருத்தரை சிந்திக்காம இருக்க வெக்கணும்னா.. அவங்களை தேவைக்கு அதிகமா பாராட்டணும்” என்கிற சொன்ன பன்ச் வசனம், சதுரங்க வேட்டைக்கு நிகரானது.
உள்ளே சென்றதும் அனைவரும் எழுந்து நிற்க, பார்வையாளர்கள் ஓவர் டைமில் கைத்தட்டி பட்டையைக் கிளப்பினார்கள். “எட்டாவது சீசன்ல நீங்க பண்றது இருக்கே.. செம” என்றபடி விசேவும் கையைத் தட்ட ‘இதையெல்லாம் நம்பறதா.. வேண்டாமா” என்கிற மாதிரி போட்டியாளர்கள் பரவசத்தில் பூரித்துப் போனார்கள். இதுவொரு சர்காஸ விளையாட்டு என்பதை ஜாக்குலின் முதலில் புரிந்து கொண்டதாகத் தோன்றுகிறது. ரியாலிட்டி ஷோக்களில் இருந்த அனுபவம்.
“கடந்த சீசன்களோடு ஒப்பிடும் போது உங்களின் இந்த எட்டாவது சீசன் எப்படியிருக்கு.. என்ன வித்தியாசத்தை உணர்றீங்க? முந்தைய சீசன்களை விடவும் சவால் விடுவது போல என்ன சுவாரசியம் நடந்தது?” என்பதுதான் விசே கேட்ட கேள்வி. “நாங்க வெளிய போன பிறகு ஒண்ணு மண்ணா இருப்போம்” என்பது போல் சத்யா சொல்ல “முதல் பால்லயே அவுட்டா.. உக்காருங்க சத்யா.. உங்க தன்னடக்கம் பிடிச்சிருக்கு.” என்று சர்காஸம் செய்த விசே “அருண்.. உங்க சட்டையைப் பார்க்கறதுக்காகவே ஒவ்வொரு வாரமும் நான் ரொம்ப ஆவலா வரேன்” என்று யாருக்கோ ஜாலியாக பன்ச் வைத்தார்.
“என்னைப் பத்தி நாலு வார்த்தை நல்லதா சொல்லுங்க” - விசே சர்காஸம்
“நீங்க சொல்லுங்க தீபக்.. இங்க என்ன எடிட் பண்ணி போடறாங்கன்னு எனக்குத் தெரியல.. “உக்காருங்க’ ன்னு உங்களை அதிகமா சொல்லி பேச விடாம பண்றார்ன்னு என்னைப் பத்தி வெளில பேசிக்கிறாங்க.. அது இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன்” என்று விசே சொன்னதும் “எங்கள் சேது அண்ணன் எங்களைப் பாதுகாக்கிறார்… பேச விடாமல் செய்வதில்லை. அண்ணன் நல்லவர், வல்லவர்’ என்பது போல தீபக் முழக்கமிட்டதும் “ரொம்ப நன்றி சார். அப்பத்தான் என்னை வேலையை விட்டு அனுப்ப மாட்டாங்க’ என்று விசே பாவனையாக பம்மிய காட்சி சுவாரசியம். ஒவ்வொரு போட்டியாளரும் எழும் போது பார்வையாளர்கள் கைத்தட்டி இந்த நாடகத்தின் சுவாரசியத்தைக் கூட்டினார்கள்.
கடந்த சீசன்களோடு ஒப்பிடும் போது இந்த சீசன் எப்படி போகிறது என்பதை போட்டியாளர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்களின் வாயாலேயே வரவழைப்பதுதான் இந்த டாஸ்க்கின் நோக்கம். ஆனால் என்ன பிரச்சினையென்றால், மைதானத்தில் ஆடும் வீரர்களால் தாங்கள் எப்படி ஆடினோம் என்பதை உத்தரவாதமாக சொல்ல முடியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களால்தான் ஒட்டுமொத்த அனுபவத்தையும் உள்வாங்கி சொல்ல முடியும். அந்த வகையில் போட்டியாளர்கள் பெரும்பாலும் இந்த சீசனின் ப்ளஸ் பாயிண்டுகளைச் சொன்னது இயல்பான விஷயம்.
ஆனால் ஒரு பார்வையாளனாகவும் இருக்கிற போட்டியாளனுக்கு உள்ளூற இதற்கான விடை தெரிந்து விடும். முத்து, ஆனந்தி போன்றவர்கள் இந்த விடையை ஏறத்தாழ எட்டி விட்டார்கள். எனவே நேர்மையாக பதில் சொன்னார்கள். “முந்தைய சீசனில் போட்டியாளர்கள் இருந்தாங்க. இந்த சீசனில் எல்லோரும் புனிதர்களா இருக்காங்க.. முந்தைய சீசனில் பத்து கேரக்டர்கள் இருந்தாங்க. இந்த சீசனில் ஒவ்வொருத்தருக்குள்ளும் பத்து கேரக்டர் இருக்காங்க. நல்லா விளையாடறவனை முதல்ல முடிச்சு விட்டு வீடு அமைதியா இருக்கட்டும்ன்னு நெனக்கறாங்க” என்று நையாண்டியான மொழியில் முத்து சொன்னது சுவாரசியம்.
சர்காஸம் முடிந்து சீரியஸ் டோனுக்கு மாறிய விசே
“இந்த சீசன்லதான் விதம் விதமா சாப்பாடு கிடைச்சது” என்று அந்த மெனுவின் வரிசையைச் சொன்ன சிவக்குமார் “முந்தைய சீசன்களை விட இதில்தான் நிறைய பாத்திரங்களைக் கழுவினோம் ” என்றார். “பிக் பாஸ் ஹோட்டல் ஆரம்பிக்கும் போது இந்த மெனு யூஸ் ஆகும்” என்று நக்கலடித்தார் விசே. ஒருவேளை சிவக்குமார் சொன்னதும் நையாண்டிதானோ என்னவோ?! சவுந்தர்யா, ஜாக் போன்றவர்களை மறைமுகமாக கலாய்த்த விசே ஜாலியான மூடில் இருந்தது பாராட்டத்தக்கது.
“ராஜா -ராணி டாஸ்க்கில் எனக்கு சில ஐடியாக்கள் தோன்றியது.. ஆனால் வேண்டாம் என்று தடுத்து விட்டனர்” என்று அருண் சொன்ன போது “ஏன் பண்ணித்தான் பாருங்களேன்.. என்ன ஆயிடப் போகுது. பண்ணாதானே தெரியும்.. இப்ப நீங்க மீடியால இருக்கீங்க.. அதுவே பெரிய ரிஸ்க்தான். என்னவாகும்ன்னு தெரியாது. நான் முதல் படம் ஹீரோவா ஆனதே பெரிய சவாலா இருந்தது. ஆனாலும் ரிஸ்க் எடுத்தேன். முடிச்சப்புறம் ஹீரோவா ஆயிட்டோம்ன்னு நிறைவா இருந்தது. அந்த மாதிரி செஞ்சாதானே தெரியும்?” என்று விசே சொன்ன அட்வைஸ் சிறப்பு.
விசேவின் சர்காஸம் காரணமாக இந்த முதல் பகுதி நையாண்டிக் குத்தலாக நடந்து முடிந்தது. பிரேக் முடிந்து திரும்பிய விசே ‘இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிந்தன’ என்கிற ரேஞ்சிற்கு வேறு அவதாரம் எடுத்தார். அது பெண்களின் கைக்கு மாறியிருக்கும் அதிகாரம் பற்றியது.
இதில் இரண்டு வழக்குகள் மிக நீளமாக விசாரணை செய்யப்பட்டன. ஒன்று, முத்துவிற்கு மஞ்சரி தந்த உடற்பயிற்சி டாஸ்க். இன்னொன்று, ஜெப்ரிக்கு சாச்சனா தந்த தோப்புக்கரண டாஸ்க். “இதுவரைக்கும் எல்லாத்துக்கும் டாஸ்க் தந்து நம்மள சாகடிச்சாங்க. இது நம்ம நேரம். திருப்பித் தருவோம்’ என்கிற ரேஞ்சில் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களோ “என்ன டாஸ்க் தரலாம்ன்றதுதான் உண்மையான டாஸ்க். இப்பவாவது பெண்கள் அதை உணரட்டும். நாங்க தந்தது சுவாரசியமா இல்லன்னு சொல்லிட்டு இருந்தாங்க” என்கிறார்கள்.
யாரிடம் கிடைக்கிறது என்பதில்தான் அதிகாரத்தின் பயன் இருக்கிறது
ஒருவரிடம் அதிகாரம் வந்து சேரும் போது அவர் என்னவாக மாறுகிறார்? அவர் செய்யும் காரியங்களின் மூலம் எப்படி அவர் அம்பலப்படுகிறார் என்பதுதான் இந்த விசாரணையின் மையம். இந்த நோக்கில் மஞ்சரி, சாச்சனா ஆகிய இருவருமே பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டார்கள் என்பது வெளிப்படுகிறது. இவற்றை அவர்கள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செய்தார்கள் என்று பொருள் இல்லை. தன்னிச்சையான விளையாட்டுடன் கூட அவர்கள் செய்திருக்கலாம். ஆனால் அதிகாரம் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதைத்தான் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதற்காக ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். கிராமத்துப் பஞ்சாயத்துக்களில், எளிய சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் தவறு செய்து விட்டதாக கருதப்பட்டால், அவர்களால் கட்டவே முடியாத பெரிய தொகையை அபராதமாக விதிப்பார்கள். “அய்யா.. சாமி.. தாங்காதுய்யா..” என்று குற்றம் சாட்டப்பட்டவர் குடும்பத்தோடு பஞ்சாயத்தாரின் காலில் விழுவார்கள். பிறகு பஞ்சாயத்தார் மனம் இரங்கி (?!) தொகையை சற்று குறைப்பார்கள். மீண்டும் “அய்யா.. தாங்காதுய்யா…” என்று காலில் விழும் பரிதாபம் தொடரும். இப்படியே பல முறை விழுந்து எழுந்த பிறகு ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். அது கூட அந்த எளிய நபருக்கு சுமையாகவே இருக்கும்.
இந்த டிராமாவின் அவுட்லைனைப் பார்த்தால், குற்றவாளிக்கு பஞ்சாயத்தார் மனமிரங்கி அபராதத் தொகையை குறைத்துக் கொண்டே வந்ததைப் போல் தோன்றும். ஆனால் இதற்குப் பின்னால் இருப்பது கருணையுணர்வு அல்ல. ஆதிக்க உணர்வு. சாதியத் திமிர், பணக்கார அகம்பாவம். அதிகார துஷ்பிரயோகம். “நீ எங்கள் காலில் விழ வேண்டியவன். நாங்களாக பார்த்துதான் உனக்கு சௌகரியப்பட்ட கருணையை வழங்குவோம்” என்பதுதான் இதிலுள்ள செய்தி.
இந்த விஷயத்தை அப்படியே பிக் பாஸ் விதிகளுக்குப் பொருத்திப் பார்க்கலாம். முத்துவிற்கும் ஜெப்ரிக்கும் தரப்பட்ட தண்டனை மிகையானது, எளிதில் செய்ய முடியாதது என்று முறையே மஞ்சரிக்கும் சாச்சனாவிற்கும் உள்ளூற தெரியும். என்றாலும் ஏன் தந்தார்கள்? புதிய அதிகாரம் கண்ணை மறைத்து விட்டது. பழிவாங்கும் உணர்வு முன்னால் வந்து விட்டது. “முடியாதுன்னு சொல்லியிருந்தா தந்திருக்க மாட்டேன்” என்று சாச்சனா சொல்வதும் “முத்து பிரெண்டுன்றதால விளையாட்டா தந்தேன்” என்று மஞ்சரி சொல்வதும் முறையான செயல் அல்ல.
மக்களுக்குத் தேவை கருணையுள்ள அதிகாரம்
ஒரு மனிதனிடம் அதிகாரம் வந்து சேரும் போது அவன் கருணையுள்ளவனாகவும் மற்ற மனிதர்களின் துயரங்களைப் புரிந்து கொள்பவனாகவும் நீதிமானாகவும் இருக்கும் போதுதான் அந்த அதிகாரம் பயனுள்ள வகையில் செலவாகும். மாறாக மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிற அதிகாரம் மோசமானது என்பதை உலக வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது.
‘சாச்சனா தந்த தண்டனை மூலம் அடைந்த உடல்வலியை விடவும் “வேணும்ன்ட்டுதான் கொடுத்தேன்” என்று சொன்ன வார்த்தையின் மூலம் கிடைத்த மனவலி அதிகமாக இருந்தது” என்று ஜெப்ரி சொன்னதைப் புரிந்து கொள்ள முடிகிறது. “ஒரு டாஸ்க் கொடுக்கறதுக்கு முன்னாடி அதன் பொறுப்பை உணர்ந்து யோசிக்கணும். அதனாலதான் ஃபுல்லா பண்ண டிரை பண்ணேன்” என்று முத்து சொல்வதும் யோசிக்க வைக்கிறது. தண்டனை தந்தவர்களையே அது எத்தனை கொடுமையானது என்பதை யோசிக்க வைக்கும் யுக்தி இது. மாறாக “இதை நாங்க பண்ண மாட்டோம்” என்று அவர்கள் சொல்லியிருந்தால் வெறும் வம்பாக முடிந்திருக்கும். “டாஸ்க் தந்தா பண்ண மாட்றாங்க” என்கிற அவப்பெயராக நிலைத்திருக்கும்.
‘ஸாரி சொல்லலை” என்று ஜெப்ரி சொன்னது, ‘ஸாரி சொன்னேன்’ என்று சாச்சனா சொன்னது ஆகிய இரு தரப்பிலான வாக்குமூலங்களைக் கவனித்தால் ‘ரஷோமான்’ திரைப்படத்தின் காட்சியைப் பார்த்தது போலவே இருந்தது. இரண்டிலுமே உண்மையும் இருந்தது, பொய்யும் இருந்தது. ஏனெனில் உண்மை என்பது அத்தனை எளிதில் கண்டுபிடிக்க முடியாத விநோதமான வஸ்து. உண்மையும் பொய்யுமான கலவையில் இருந்துதான் உண்மையைப் பிரித்தெடுக்க முடியும். அதை சமநிலை தவறாத நீதிமானால் மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் இந்தச் சமூகத்தில் நீதிபதிகள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள். ‘மை லார்ட்’ என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த விசாரணையின் மனச்சுமை தாங்காமல் குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதார் சாச்சனா. பெண்கள் அத்தனை பேரும் தந்த அரவணைப்பை விட்டு ‘எனக்கு அண்ணா வேணும்’ என்று முத்துவைத் தேடியது நெகிழ்வான காட்சி. சாச்சனாவிற்குள் ஒரு குழந்தை பத்திரமாக இருக்கிறார் என்பதற்கான உதாரணம் இது. சமயங்களில் மிக முதிர்ச்சியான ஆலோசனைகள் தரும் சாச்சனா, பல சமயங்களில் ஆர்வக்கோளாறு, பழிவாங்கும் குணம் என்று சிறுமியாக மாறி விடுகிறார். சுனிதா சொன்னது போல இரட்டைப் படகு சவாரி.
சட்டென்று பொறுமையை இழக்கிறாரா விசே?
முதல் பகுதியை சர்காஸமாக நடத்திச் சென்ற விசே, முழு எபிசோடிற்கு அதையே தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். போட்டியாளர்கள் தரும் பதில்கள், சுருக்கமாகவும் தெளிவாகவும் நேரடியாகவும் இருக்க வேண்டும் என்று விசே எதிர்பார்க்கிறார். அது நிகழாத போது சட்டென்று பொறுமையை இழந்து ‘சரி.. போ’ என்று விலகி விடுகிறார். “மக்களே.. பார்த்துக்கங்க. இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல” என்பதையும் கவனமாக பதிவு செய்து விடுகிறார்.
ஹோஸ்ட் எதிர்பார்க்கும் அதே பாணியில் எல்லோராலும் பேச முடியாது. முத்து, ஆனந்தி, மஞ்சரி, தர்ஷிகா போன்றவர்கள் சற்று சுதாரித்து விடுவார்கள். ஆனால் சவுந்தர்யா, ஜாக்குலின் போன்ற ஆர்வக்கோளாறுகள் வளவளவென்று பேசி சொதப்பி விடுவார்கள். போட்டியாளர்கள் ஆயிரம் சொதப்பினாலும் அவர்களின் தரப்பில் நிறைய அசுவாரசியங்கள் இருந்தாலும் அவற்றை ஒழுங்குப் படுத்தி சுவாரசியமாக்குவதில் தொகுப்பாளரின் பங்கும் இருக்கிறது. ‘பாருங்க.. மக்களே. இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல .’ என்று கை கழுவி விட முடியாது. ஏனெனில் கடந்த சீசன்களிலும் போட்டியாளர்கள் இப்படி கலவையான குணாதியங்களுடன்தான் இருந்தார்கள். ஆனால் கமல் நடத்திய ஹோஸ்டிங்கில் ‘சரி உக்காருங்க’ என்று அவர் பொறுமையை இழந்ததில்லை. இந்த விஷயத்தை விசே சரி செய்து கொண்டால் வாரஇறுதி எபிசோடுகள் மேலும் சுவாரசியமாக அமையும்.
இந்த வாரம் வெளியேற்றப்படவிருக்கிறவர் யார்? வழக்கம் போல இதற்கான விடை கசிந்து விட்டது. ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரிதான். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.