நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!
BBTAMIL 8: DAY 46: சாச்சனாவின் ஓவர் ரியாக்ஷன்; போர்.. ஆம்.. போர் - எரிச்சலான தளபதி மஞ்சரி!
உலக வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சி மலர ஆரம்பித்ததின் குறியீட்டு அடையாளம் அது. அதைப் போலவே பிபி தர்பாரிலும் ராஜா - ராணி டாஸ்க் முடிந்த போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அந்தளவிற்கு சுவாரசியமற்ற போட்டி.
ஆண்கள் அணிக்கு இந்த வாரம் அதிர்ஷ்ட யோகம் போல. அரியணை முதற்கொண்டு தொட்ட இடமெல்லாம் வெற்றி.
“அவங்களோட நகையை கொஞ்சம் எடுத்து வைச்சுக்கலாம். நம்மளோடதையும் சேர்த்து கொஞ்சம் எடுத்துக்கலாம். அப்பத்தான் பொதுவா காணாமப் போச்சுன்னு சொல்ல முடியும்” என்று சதியாலாசனை செய்து கொண்டிருந்தார் மஞ்சரி. அப்படியே செய்தார்கள். “டாஸ்க் முடிஞ்சப்புறம் இதைச் செஞ்சது சரியில்லையே?” என்று நேர்மையாக ஆட்சேபித்தார் சவுந்தர்யா. “இல்ல.. ஒரு மாதிரி பிளாட் செட் பண்ணிப்போம்” என்று சமாளித்தார் மஞ்சரி.
“நாம ஒரு மாதிரி நல்ல ப்ளோல போயிட்ருக்கம்ல. இந்த வாரத்துல நம்மளோட டீம் வொர்க் நல்லா செட் ஆச்சு” என்று விஷால் சொல்ல “ஆமாம்.. நல்ல கோ ஆர்டினேஷன் இருந்தது” என்று ஆமோதித்தார் சத்யா. இப்படியாக ஆண்கள் தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் வழங்கி மகிழ்ந்தார்கள்.
சாச்சனா தந்த தண்டனை படி நூறு தோப்புக்கரணம் போட்ட ஜெப்ரிக்கு உடம்பு வலியை விடவும் மனதுதான் அதிகம் வலிக்கிறதாம். இதைச் சொல்லிக் கொண்டிருந்த அன்ஷிதா “அவன் ரொம்ப ரொம்ப நல்ல பையன்” என்று ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார். இந்த தோப்புக்கரண மேட்டர் வார இறுதியில் நிச்சயம் பஞ்சாயத்தாகும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக சாச்சனாவிற்கு அட்வைஸ் செய்த ஜாக்குலின் “எல்லாத்தையும் பர்சனலா எடுத்துக்காத. ஜெப்ரிக்கு தந்த தண்டனை ஓவர்” என்று சொல்ல “நான் கோபத்துல கொடுத்தேன்.. ஓகே.. ஆனா முடியலைன்னா அவன் செய்யாம போயிருக்கலாம்ல.. யாரு செய்யச் சொன்னது. செஞ்சுட்டு.. உடம்பு வலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்தா..” என்று மழுப்பலாகச் சமாளித்தார் சாச்சனா.
ராணி மஃப்டி உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, மஞ்சரிக்கு திடீர் ஞானோதயம். திருடிய பொருட்களை அவர்களிடமே தந்து விடலாம். முதலில் இருந்து ஆரம்பிப்போம் என்று ரயானிடம் மஞ்சரி சொல்ல அதன்படியே செய்தார்கள். டாஸ்க் முடிந்த பிறகு செய்த இந்த திருட்டு முறையானதல்ல என்று அவருக்கு தோன்றியிருக்க வேண்டும்.
டாஸ்க் ஆரம்பிப்பதற்கான ஒலி கேட்டது. இரண்டு நாட்டில் உள்ள ராஜகுருக்களுக்கும் பிரத்யேகமான டாஸ்க் தந்தார் பிக் பாஸ். 1, 3, 6, 9 ஆகிய நேரங்களை சரியாக கணித்துச் சொல்ல வேண்டுமாம். ‘இதை இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அரியணை வெற்றிக்கு இது முக்கியமான அம்சமாக இருக்கும்” என்று எச்சரித்தார் பிக் பாஸ்.
“எங்களுடைய ஒற்றன் போதிய துப்புகள் தரவில்லை. மாற்ற அனுமதி கிடைக்குமா?” என்று பிக் பாஸிடம் கேட்டுக் கொண்டிருந்தார் சாச்சம்மா தேவி. ஜாக்குலினுக்கும் மஞ்சரிக்கும் இடையே ஒரு சிறு மோதல். வாட்டர் இன்சார்ஜாக தன்னை நியமித்து விட்டு அந்தப் பொறுப்பிலும் மஞ்சரி தலையிடுவதால் எரிச்சலானார் ஜாக்குலின். “இல்ல மச்சான்.. டாஸ்க் போயிட்டிருக்கறப்ப.. நீ மக்கள்ல ஒருத்தரா இருப்ப” என்று அபத்தமான லாஜிக் சொன்னார் மஞ்சரி. டாஸ்க் நடக்கும் போது அவர் கேப்டனாகவும் தளபதியாகவும் மாறி மாறி அவதாரம் எடுக்கும் போது மற்றவர்களுக்கும் அதே விதிதானே பொருந்தும்?!
இவர்கள் சண்டை போடும் கேப்பில் ராஜா அணியினர், ராணியின் வாளை சுட்டு விட்டார்கள். “ஏங்க.. இன்னமும் டாஸ்க் ஆரம்பிக்கலை.. அதுக்குள்ள எப்படி எடுப்பீங்க?” என்று கேள்வி எழுப்பினார் மஞ்சரி. டாஸ்க் ஆரம்பிக்காததற்கு அவர் சொன்ன காரணம்தான் காமெடியானது. “எனக்கு இன்னமும் டிரஸ் வரலை”. “ஹலோ… உங்க டிரஸ் வராததுக்கு நாங்க பொறுப்பா… டாஸ்க் ஆரம்பிச்சு.. பாட்டு எப்பவோ போட்டாச்சு” என்று லாஜிக்காக பேசினார் ரயான்.
நேரத்தைக் கணிப்பதற்காக கார்டன் ஏரியாவிற்கு சென்ற ராஜா அணியினர், துண்டை விரித்து வானத்திடம் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். சூரியன் இருக்கும் திசை பார்த்து நேரம் கணிக்கலாம் என்று கணக்கு. இதன்படி முதன் முறையாக இரண்டு ராஜகுருக்களும் நேரத்தை கணித்து சொன்னார்கள். நேரம் மதியம் ஒன்று என்பதை 01:13-ல் ரயான் சொன்னார். ஆனால் பவித்ராவோ 02:05-ல் சொன்னார். ஒவ்வொரு முறை நேரம் சொல்லும் போதும் பவித்ரா பேசிய தமிழ் தாறுமாறாக இருந்தது. ‘இப்படியாக நாங்கள் நேரத்தை முடிவு செய்திருக்கிறோம்” என்று இஷ்டத்திற்கு அடித்து விட்டார்.
“என்னா.. இது .. பெரிசா சண்டையே நடக்கலையே?” என்று யோசித்த பிக் பாஸ், அடுத்த பிராப்பர்ட்டியை உள்ளே இறக்கினார். பல்லக்கு. ராஜா மற்றும் ராணியை இரு அணியினரும் பல்லக்கில் வைத்து தூக்கியபடி அழைத்துச் செல்ல வேண்டுமாம். பல்லக்கு இரு நாட்டவர்க்கும் பொதுவானது என்று சொல்லப்பட்டிருந்தாலும் ஆண்கள் அணி இதை வைத்துக் கொண்டு அழும்பு செய்தது. ராணுவ கேரிசியை.. மன்னிக்கவும் ராணவ கேசரியை பல்லக்கில் அள்ளிப் போட்டுக் கொண்டு வாழ்த்தொலியுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்தச் சமயத்தில் ராணவ்வைப் பார்க்க, ஒரு சாயலில் கைலாசா நாட்டின் அதிபர் போலவே இருந்தார்.
“எங்களுக்கு பல்லக்கு தாருங்கள். ராணியாரை அழைத்து வர வேண்டும்’ என்று பெண்கள் அணி கோர, “முடியாது. எங்கள் ஏரியாவிற்குள் வர வேண்டுமென்றால் டாஸ்க் செய்ய வேண்டும்” என்று அழிச்சாட்டியம் செய்தது ஆண்கள் அணி. “எனில் சமைப்பதற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம்” என்று தளபதி பதில் கெத்தைக் காட்ட ராணியோ வாசலில் அம்போவென்று பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.
எரிச்சலான ராணி, “அவர்களின் எல்லைக்கு உள்ளே சென்று பல்லக்கை கைப்பற்றி வாருங்கள்” என்று உத்தரவு போட, தளபதி தலைமையில் நாலைந்து பெண்கள் உள்ளே பாய்ந்தார்கள். அந்தச் சமயத்தில் ரஞ்சித் மட்டுமே இருக்க, அவருடன் ராஜாவும் களத்தில் இறங்கி பல்லக்கைக் கைப்பற்றுவதற்காக போராடினார்கள். இரண்டு அணியினரும் பல்லக்கிற்காக சண்டை போட்டதில் நாட்டின் மானம் ஊர்வலம் போனது. மன்னரை தூக்கி பல்லக்கில் அமர்த்திய ஆண்கள் அணி “முடிஞ்சா.. இப்ப தூக்குங்க.. பார்க்கலாம்” என்று சவால் விட்டார்கள். (மன்னரை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்துகிற அரிமா தேசம்!)
பெண்கள் தங்களின் எல்லைக்குள் வந்து விட்டதால் முத்துவும் பக்கத்து நாட்டுக்குள் ஓடிச் சென்று “நீங்க பண்ணா.. நாங்களும் பண்ணுவோம்” என்று ஒழுங்கு காட்டினார். “நீங்கள் இப்படி விதியை மீறுவது நான்காவது முறை” என்று தளபதி தீபக் கம்பீரமான குரலில் குற்றம் சாட்ட”உங்கள் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்” என்று காண்டானாார் சாச்சம்மா தேவி. “ஒரு மகாராணி இப்படியா பேசுவது.. அய்யகோ.. வெட்கம்” என்று ராஜாவும் களத்தில் இறங்கி சண்டை போட்டார். (அது மகாராணியா.. அரசியா.. இளவரசியா). வந்த கோபத்தில் சாச்சம்மா தேவியின் கால் கிடுகிடுவென ஆடிக் கொண்டே இருந்தது.
‘தளபதிகளின் கவனத்திற்கு.. அரிமா தேசத்தி்ன் மணிமகுடத்தை எடுத்து நான்காவது படியில் வைக்கவும்” என்று பிக் பாஸ் அறிவிக்க “அரிமா தேசம் வாழ்க.. நாங்கள் நான்காவது நிலைக்குச் சென்று விட்டோம்” என்று கம்பீரமாக அறிவித்தார் தீபக். “நான் சொன்னது கீழிருந்து நான்காவது படியில்” என்று பிக் பாஸ் சொல்லவும் தீபக்கிற்கு பல்பு கிடைத்தது. இவர்கள் பரவாயில்லை. கோமகள் கோட்டையின் கிரீடம் ஐந்தாவது படிக்கும் கீழே. அதாவது தரையில் வைக்க வேண்டும். இதற்குப் பதிலாக தூக்கி வெளியில் கடாசி விடலாம். அவமானம்!.
பல்லக்கு தூக்க வந்து எல்லை தாண்டி மாட்டிக் கொண்ட ராணியின் பிரஜைகள் ‘ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்கிற திருக்குறளைச் சொல்ல வேண்டும்’ என்கிற டாஸ்க்கை ராஜா தந்தார். இதற்கிடையில் தட்டு கழுவ எல்லை மீறிச் சென்ற முத்து, தளபதியால் சிறை வைக்கப்பட்டார். மற்றவர்களிடம் கறாராக பேசுகிற பெண்கள் அணி, ரஞ்சித்திடம் மட்டும் “என்னங்க. இப்படிச் செஞ்சிட்டீங்க?” என்று சாஃப்ட்டாக சிரித்துப் பேசுகிறார்கள். இந்த முறை அவரும் கைது செய்யப்பட்டு லாக்ப்பின் ஓரத்தில் குந்த வைக்கப்பட்டார். இதைப் போலவே தளபதியைப் பார்த்து நக்கலாக சிரித்த ஆனந்தியும் கைது.
தங்கள் நாட்டின் பிரஜைகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டதால் காண்டான தளபதி தீபக், திருக்குறள் டாஸ்க்கை ரத்து செய்தார். “மன்னா.. எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கேட்க வேண்டுமாம். அல்லது பிணைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமாம். அப்போதுதான் பல்லக்கு தருவார்களாம். “அப்படியொன்றும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. எனக்கும் பல்லக்கும் தேவையில்லை” என்று உரத்த குரலி்ல் கோபத்துடன் கட்டளையிட்டார், சரோஜா தேவி.. மன்னிக்கவும் சாச்சம்மா தேவி.
பல்லக்கை வைத்து நீண்ட நேரம் வெறுப்பேற்ற வேண்டாம் என்று நினைத்த ராஜா அணியினர், அதைக் கொண்டு வந்து நடுவில் வைத்து ‘அரிமா. தேசம்.. பண்புள்ள தேசம்’ என்று அவர்களாகவே சொல்லிக் கொண்டனர். என்றாலும் பல்லக்கில் ஏற ராணியார் ஒப்புக் கொள்ளவில்லை. கௌவரப் பிரச்னை. எனவே அடுத்த டாஸ்க் அறிவிப்பின் போது லிவ்விங் ஏரியாவிற்கு ராணியை இருவர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பள்ளிக்குச் செல்லாமல் அடம்பிடிக்கும் குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் காட்சி போலவே அது இருந்தது.
‘பொருட்களின் எடையை சரியாகக் கணிக்க வேண்டும்’ என்பதுதான் டாஸ்க். இதற்காக வெங்காயம், வைக்கோல், பஞ்சு, சாக்பீஸ் துண்டுகள், டீஸ்பூன் என்று பல பொருட்கள் தரப்பட்டன. ஆனால் இரு அணியினருமே இதில் பயங்கரமாக சொதப்பினார்கள். ஆனால் போகும் போது ‘பிக் பாஸ்.. தர்பூசணி பழம் எடுத்துக்கட்டுமா?” என்று கேட்க மட்டும் தவறவில்லை. ஆண்கள் அணியினர் டாஸ்க் செய்யச் சென்ற நேரத்தில் பெண்கள் அணியினர் ராஜாவின் சிம்மாசனத்தையே திருடிக் கொண்டு ஓட “நடத்துங்க.. நடத்துங்க.. பார்க்கலாம்” என்று காண்டானார் ஜெப்ரி.
எடை கணிக்கும் போட்டியை முடித்து விட்டு ஆண்கள் வெளியேறும் போது ‘இந்த டாஸ்க்கைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது” என்று பிக் பாஸ் அறிவி்க்க, “அய்யா.. நீங்களும் இதை வெளியில் சொல்லாதீர்கள். அத்தனை கேவலமாக நாங்கள் தோற்றிருக்கிறோம்” என்று முத்து சொன்னது சுவாரசியம். இந்தப் போட்டியில் ஆண்கள் அணி குத்துமதிப்பாக வெற்றி பெற்றதால் அரியணை டாஸ்க்கின் அடுத்த சுற்றுக்கு நகர்ந்தார்கள்.
ராஜகுருக்கள் நேரத்தைக் கணித்ததின் முடிவுகள் வந்தன. இதில் ஆரம்பத்தில் காற்று ஆண்கள் அணியின் பக்கமே அடித்ததால் ரயான் துள்ளிக் குதித்தபடி இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பவித்ராவின் பக்கம் காற்று அடிக்க, குனிந்து அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து சிரிக்க ஆரம்பித்தார். இந்தப் போட்டி டை ஆனதால் “இப்போது என்ன நேரம்.. கணித்துச் சொல்லுங்கள்” என்று பிக் பாஸ் அறிவிக்க பவித்ரா சொன்ன நேரம், சரியான விடைக்கு அருகில் இருந்ததால் பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி.
பிக் பாஸிற்கே இந்த டாஸ்க் போரடித்ததோ, என்னவோ. “அரியணையைக் கைப்பற்றும் டாஸ்க்கில் அரிமா தேசம் வெற்றி பெற்றிருக்கிறது” என்று முடிவை அறிவித்தார். ஆண்கள் அணி துள்ளிக் குதிக்க பெண்கள் அணி காண்டாகி உட்கார்ந்திருந்தது. சாச்சம்மா தேவி வெறுப்பின் எல்லையில் இருந்தார். கிரீடம் வரவழைக்கப்பட்டு ராஜாவிற்கு சூட்டப்பட்டது. “எனது ராஜ்ஜியத்தில் பாதியைத் தருகிறேன்” என்று ராணியை அழைத்தார் ராணவ். “வேணாம் போ..” என்று முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொண்டார் சாச்சனா.
“நீதான் ஒற்றன் என்று எப்போதோ நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். நடிப்பது நீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா, நாங்கள்தான் நடித்துக் கொண்டிருந்தோம்” என்று சிவக்குமாரிடம் அருண் சொல்ல வேறு வழியில்லாமல் சிவா சிரித்தார். பெண்கள் அணியால் தங்களுக்குள் ஊடுருவியிருக்கும் ஒற்றனை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜாக்குலினும் ஒற்றன் வேலையை சரியாகச் செய்தது போல் தெரியவில்லை.
வீடு மாறியது முதலே பெண்களுக்கு தோல்விகளாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. வாஸ்து சரியில்லை.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...