தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
BB TAMIL 8: DAY 57: அம்பலமான ஜாக்குலின், சவுந்தர்யா சுயரூபங்கள் - ஒதுக்கப்படுகிறாரா ராணவ்?!
ஒருவரை பலரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் அவர் வலிமையாகிக் கொண்டே போகிறார் என்று பொருள். பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல, உலக நடைமுறைக்கும் இது பொருந்தும். மஞ்சரியின் கதை அப்படித்தான் செல்லும் போலிருக்கிறது. வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர், எதிர்ப்பின் மூலமாகவே பழைய போட்டியாளர்களை முந்திச் செல்கிறாரோ?!
‘பிரச்னையிடம் பிறப்பிடம்’ என்று மஞ்சரியை சொல்கிறார்கள். தனக்கான உரிமையைக் கோருபவரை பிரச்னையாளர் என்று திரிக்க முடியுமா? இந்த எபிசோடில் ஜாக்குலின், சவுந்தர்யா போன்றவர்களின் சுயரூபங்கள் அம்பலமாகின. இந்த இருவரும் மஞ்சரியை ரவுண்டு கட்டி கிண்டல் செய்த காட்சி காணவே அருவருப்பானதாக இருந்தது. போலவே மஞ்சரி மீதான அன்ஷிதாவின் வன்மமும் கூடுதலாக வெளிப்பட்டது ஆச்சரியம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 58
தர்ஷிகாவின் ‘so called’ லவ் டிராக்கிற்குப் பிறகு தனது நண்பர்களை அவர் மெல்ல இழந்து வருகிறார். ஆனந்தி, பவித்ரா, அன்ஷிதா போன்றவர்களிடமிருந்து விலகல் ஏற்பட்டு வருகிறது. ஷாப்பிங் விஷயத்தில் தர்ஷிகா மீது அன்ஷிதாவிற்கு வருத்தம். “நமக்குப் பிடிச்ச விஷயங்களில் இருந்து தள்ளி நிக்கறதுதான் நல்லது’ என்று விஷாலிடம் தத்துவமாகப் பேசி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
நாள் 58.
மளிகைப் பொருட்கள் இன்னமும் வராத சூழலில், அருண் பால் கேட்க “மிஸ்டர் அருண், இங்க வாழக் கத்துக்கங்க” என்று விஷால் ஜாலியாக சொல்ல “வாழ கத்துக்கங்க. தென்ன கத்துக்கங்கலாம்.. வேண்டாம்’ என்று அருண் அடித்த கமெண்டைக் கேட்டு ‘பழைய ஜோக்’ தங்கதுரையே மிரண்டு போயிருப்பார். சவுந்தர்யா, ஜெனிலியா மோடிற்கு மாறி வீடெங்கும் நடனமாடிக் கொண்டிருக்க “இதுக்கு பசில ஏதோ ஆயிடுச்சு போல. சரி பண்ணுங்கப்பா” என்று கிண்டலடித்தார் அருண்.
‘இந்த வீட்டில் யார் உண்மையாக வேலை செய்கிறார், வேலை செய்வது போல் பாவனை செய்கிறார், வேலையே செய்யவில்லை’ என்று மூன்று கேட்டகிரியில் சொல்ல வேண்டும். “எதுக்கு வந்திருக்கோம்ன்றதையே மறந்துட்டு சமையக்காரன் கேரக்ட்டராவே மாறிட்டம்ப்பா” என்று அரண்மணை படத்தில் சந்தானம் ஒரு டயலாக் சொல்வார். அது போல வீட்டு வேலைகளைச் செய்வதில் பவித்ராதான் அதிக முனைப்பு காட்டுகிறாராம்.
ஆனால் எபிசோடின் கடைசியில் சத்யா இதையே வேறு மாதிரி ரஞ்சித்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். “சார்… பவித்ரா வேற மாதிரி கேம் ஆடுது.. பயங்கர கிளவர் அது என்னத்த வேலை செய்யுது?” என்று சத்யா சொல்ல “அப்படியா.. பொம்மை டாஸ்க்ல சார் (விஜய் சேதுபதி) சொல்லும் போதே யோசிச்சேன்.” என்று வியந்து கொண்டிருந்தார் ரஞ்சித். (சப்பையும் ஒரு ஆம்பளைதான். எல்லா ஆம்பளையும் சப்பைதான்’ என்கிற ஆரண்ய காண்டம் திரைப்பட ஹீரோயின் மாதிரி பவித்ரா செயல்படுகிறாரோ?!)
தொடரும் சவுந்தர்யாவின் ரியாக்ஷன்ஸ்
‘வேலை செய்வது மாதிரி பாவனை செய்கிறார்’ கேட்டகிரியில் மஞ்சரிக்கும் சவுந்தர்யாவிற்கும் இரண்டு புள்ளிகள் கிடைத்தன. சவுந்தர்யாவின் பெயரை மஞ்சரி சொன்ன போது தலையை உதறுவது, முகத்தைக் கோணுவது என்று வழக்கமான சேட்டைகளை சவுந்தர்யா செய்து கொண்டிருந்தார்.
‘வேலையே செய்வதில்லை’ கேட்டகிரியில் ராணவ் மற்றும் சாச்சனாவின் பெயர்கள் வந்தன. ‘என்னைத்தாண்டா ஈஸியா அடிச்சிப்புடறீங்க’ என்கிற மாதிரி மந்தகாசமாக உட்கார்ந்திருந்தார் ராணவ். ஆனால் டாஸ்க் முடிந்த பிறகு ‘ராணவ்தான் எப்பவுமே என் ஹெல்ப்புக்கு கூப்பிட்டா வருவான்’ என்று அவருக்கு ஆதரவாக சாட்சி சொன்னார் ஆனந்தி. “இப்ப என்ன சொல்றீங்க?” என்று ராணவ்வால் முனக மட்டுமே முடிந்தது.
“ரயான் ஒரு கூட்டுக்குள்ள பாதுகாப்பா உக்காந்திருக்கான்” என்றார் சத்யா. இதை இவர் சொல்வதுதான் வேடிக்கை. “ஆமாம்.. ஜாக்.. சவுந்தர்யா என்பவர்களின் பாதுகாப்பிற்குள் இருக்கிறான். Pampered kid” என்று சத்யாவின் கமெண்ட்டை ஆமோதித்தார் தர்ஷிகா.
அடுத்ததாக ஒரு டாஸ்க். அது வீக்லி டாஸ்க்கிற்கான முன்னேற்பாடு என்பதை யாரும் அப்போது யூகித்திருக்க மாட்டார்கள். இந்த டாஸ்க்கின் விதிகள் முரணாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதைப் போல தந்திரமாகவும் இருந்தன.
‘அன்பை மட்டுமே வெளிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்துவதாக நினைப்பது, தான் எந்தவிதத்திலும் தன் கோபத்தைக் காட்டி சுயரூபத்தை வெளிக் கொண்டு வரக்கூடாது என்று நினைப்பது முதல், தன்னை அன்பின் உருவமாக காட்டிக் கொள்பவர்கள் என்கிற அடிப்படையில் 8 நபர்களை வரிசைப்படுத்த வேண்டும். “புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள். இதன் முடிவு போகப் போகத் தெரியும்” என்கிற தூண்டில் வாக்கியத்தையும் பிக் பாஸ் இணைத்திருந்தார்.
மஞ்சரி மீது வன்மத்தை வெளிப்படுத்திய அன்ஷிதா
முதலில் டாஸ்க்கின் விதியைச் சரியாகப் புரிந்து கொண்டு பிறகு அனைவரும் பதிலளிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ‘இந்த வீட்டில் யார் மிகவும் அன்பாக இருக்கிறார்’ என்பதை தேர்வு செய்யும் டாஸ்க் அல்ல இது. ‘அப்படியாக நடித்து தன்னுடைய சுயரூபத்தை ஒளித்துக் கொண்டிருக்கும் போலியான ஆசாமி’ என்கிற பொருளும் உள்ளே அடங்கியிருக்கிறது. இந்த உட்பொருளை மொழி தெரியாத அன்ஷிதா முதலில் கண்டுபிடித்ததுதான் சுவாரசியமான முரண்.
‘அன்பின் திருவுருவம்’ என்று ரஞ்சித்தின் பெயரை அவசரக்குடுக்கையாக சொல்ல ஆரம்பித்தார் ராணவ். எனவே பெரும்பான்மையோர் அதையே சொன்னார்கள். இரண்டாவதாக அன்ஷிதாவும் மூன்றாவதாக சத்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காவதாக ஆனந்தியின் பெயர் வரும் போதுதான் அன்ஷிதாவிற்கு சந்தேகம் வந்தது. ‘டாஸ்க்கை மீண்டும் படியுங்கள்’ என்று சொல்ல மஞ்சரி மீண்டும் அதைப் படிக்க முத்து வியாக்கியானம் வேறு செய்தார்.
“இதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆனந்தி பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துட்டுதான் இருக்கு.” என்று எதிர்ப்பைப் பதிவு செய்தார். முத்து உட்பட பலருக்கும் இந்த டாஸ்க் குழப்பமாக இருந்தாலும் ஒரு மாதிரியான ரூட்டில் தொடர்ந்தார்கள். நான்காவதாக ஆனந்தி, ஐந்தாவதாக விஷால், ஆறாவதாக பவித்ரா, ஏழாவதாக ரயான், எட்டாவதாக ஜெப்ரி ஆகியோர் ‘அன்பின் திருவுருவ’ டாஸக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த டாஸ்க்கில் மஞ்சரியின் மீதுள்ள வெறுப்பை ஒவ்வொரு தேர்விலும் வெளிப்படுத்தினார் அன்ஷிதா. அந்த வெறுப்பை வன்மம் என்று கூட சொல்லி விடலாம். ‘தீபக் பொம்மை உள்ளே போகறதுதான் முக்கியம்’ என்று பொம்மை டாஸ்க்கில் அன்ஷிதா சொன்னது பொய் என்பது இப்போது அழுத்தமாக நிரூபணம் ஆயிற்று. ஒவ்வொரு முறையும் மஞ்சரியின் பெயரைத்தான் சொல்லுவேன் என்கிற முன்தீர்மானத்துடன் அன்ஷிதா ரிப்பீட்டாக சொல்ல சபையில் சிரிப்பொலி எழுந்தது.
அன்பின் திருவுருவப் பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சித்
ஆனால், எதிராளியை தனது சேஷ்டைகளின் மூலம் வெறுப்பேற்றுவதில் கைதேர்ந்த சவுந்தர்யா, தலையைக் குலுக்கி உடம்பை ஆட்டி மிகையாக சிரித்தது அருவருக்கத்தக்க காட்சியாக இருந்தது. “ஒருத்தரை சர்காஸம் பண்ணா சிரிப்பீங்களா.. அப்ப அதையே இங்க நிரந்தரமாக்கிடலாமா?” என்று தன் ஆட்சேபத்தை சரியாக பதிவு செய்தார் மஞ்சரி. இந்தச் சமயத்தில் பொறுப்பான கேப்டனாக நடந்து கொண்டார் ஜெப்ரி. “இந்தச் சபைக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதைக் காப்பாத்த மாட்டீங்களா?” என்று சவுந்தர்யாவை அவர் கண்டனம் செய்தது பாராட்டுக்குரியது. ஜெப்ரியாக இருந்ததால் மட்டுமே சவுந்தர்யா அந்தக் கண்டனத்தை ஏற்றுக் கொண்டார். பிடிக்காத நபராக இருந்தால் எகிறிக் கொண்டு வந்து அவரது கோரமான முகத்தைக் காண்பித்திருப்பார்.
அன்பின் திருவுருவங்களாக எட்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மலர் கிரீடங்கள் சூட்டப்பட்டன. “இதுல ஏதோ டிவிஸ்ட் இருக்கு” என்று சத்யா சொல்ல ‘Angels Vs Demons’ டாஸ்க்கா இருக்கும்” என்று முதலில் சரியாக யூகித்தவர் தீபக்.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கலைக்கப்பட்டதன் நோக்கமே ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆட வேண்டும் என்பதுதான். ஆனால் தங்களை ‘கோவா கேங்க்ஸ்” என்று சிலர் வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்கள். அந்தக் குழுவின் தலைவியாக ஜாக்குலினைச் சொல்லலாம். ரயான், ஜெப்ரி, சவுந்தர்யா, ரஞ்சித் ஆகியோர் இதர உறுப்பினர்கள். ‘ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கக்கூடாது’ என்கிற உறுதியேற்புகளைச் செய்து கொண்டு தங்களின் குழு ஒற்றுமையை அவர்கள் காட்டிக் கொண்டது ரசிக்கத்தக்க காட்சியல்ல.
கோவா கேங்க்ஸின் ‘அன்பு வெல்லும்’ அலப்பறைகள்
பிக் பாஸ் ஆட்டத்தில் இதர உறுப்பினர்களின் ஆதரவு இன்றி தொடர முடியாது என்பது நிதர்சனம்தான். ஆனால் அந்த ஆதரவை தனது நேர்மை, உண்மையான நட்பு, சகிப்புத்தன்மை, உழைப்பு போன்றவற்றின் மூலம்தான் ஈட்ட வேண்டுமே தவிர அணியாக இணைந்து கொள்வது முதுகெலும்பில்லாதவர்களின் செயல். இந்த வகையில் ஜாக்குலினின் செயற்பாடுகள் பச்சோந்தித்தனத்தை வெளிப்படுத்துகின்றன. ‘அன்புதான் வெல்லும்’ என்கிற கோஷத்தின் மூலம் குழு மனப்பான்மையை வளர்த்த அர்ச்சனாவை (சீசன் 4) ஜாக்குலின் நினைவுப்படுத்துகிறார்.
வீக்லி டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது. அதேதான். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏஞ்செல்ஸ் ஆக இருப்பார்கள். மற்றவர்கள் டெவில்கள். தேவதைகள் உண்மையிலேயே தேவதைத்தன்மை கொண்டவர்களா அல்லது அவ்வாறாக நடிப்பவர்களா என்பதைச் சோதிக்கும் டாஸ்க். அந்த அளவிற்கான டார்ச்சர்களை டெவில்கள் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதற்கான அரங்க அமைப்புகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன.
உணவு தொடர்பான ஒரு பிரச்னை வெடிக்கிறது என்றால் அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாச்சனாதான் ஆரம்பப்புள்ளியாக இருக்கிறார் என்பது இந்த சீசனின் ஒரு வேடிக்கையான தற்செயலாக இருக்கிறது. இப்போதும் அப்படி ஒன்று ஆரம்பித்தது. ‘உபயோகிக்காத சர்க்கரையை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு வேறு காரணத்திற்காக பயன்படுத்தலாமா?’ என்கிற மாதிரி சாச்சனா கேட்க ‘அது நடைமுறையில் சாத்தியம் இல்லை’ என்று விளக்கினார் கிச்சன் இன்சார்ஜ் தர்ஷிகா. வழக்கமல்லாத முறையில் அவரது கோபம் அப்போது வெளிப்பட்டது. சாச்சனா கேட்ட எதிர்க்கேள்வி அப்படி.
மஞ்சரியை bullying செய்த ஜாக்குலினும் சவுந்தர்யாவும்
மஞ்சரிக்கும் அதே போல் ஒரு தேவை இருந்தது. பால் அருந்தும் வழக்கம் இல்லாததால் அதைச் சமன்படுத்த தயிர் சாப்பிடும் போது சர்க்கரை தருவீர்களா? என்பதை ஒரு வேண்டுகோளாக அவர் தர்ஷிகாவிடம் முன்வைத்தார். ‘கிடைத்தால் ஓகே.. இல்லையென்றால் சரி. கிச்சன் டீமின் முடிவு’ என்பதாக அவரது தோரணை இருந்தது.
ஆனால் மஞ்சரியின் மீது வெறுப்பு கொண்டிருக்கிற ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யா இந்த விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைத்து அடித்த கிண்டல் அருவருப்பானது. “நான் கூட இன்னிக்கு சாம்பார் சாப்பிடலைன்னா.. கொஞ்சம் பருப்பை எடுத்து தனியா வெச்சுக்கட்டுமா?” என்று விதண்டாவாதம் பேசினார் ஜாக்குலின்.
“என்னோட தனிப்பட்ட ரெக்வெஸ்ட்டில் ஏன் நீங்க தலையிடறீங்க?” என்று மஞ்சரி ஆட்சேபித்த போது சவுந்தர்யா தனது கோணங்கித்தனமான சேஷ்டைகளால் செய்த mocking பார்க்கவே அருவருப்பாக இருந்தது. கூடுதலாக நாய் போல் குரைத்தும் காட்டியது அராஜகத்தின் உச்சம். ‘உங்களது ரியாக்ஷன்கள் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துகின்றன’ என்கிற எச்சரிக்கை ஏற்கெனவே வழங்கப்பட்டும் அதை சவுந்தர்யா உற்சாகமாகத் தொடர்வது ஆணவத்தின் வெளிப்பாடு.
‘பார்க்க க்யூட்டாக இருக்கிறது’ என்று சவுந்தர்யாவின் சேஷ்டைகளை ரசிப்பவர்களின் மனநிலையை நாம் நிச்சயம் சந்தேகப்பட்டாக வேண்டும். ஒரு மனிதக்கூட்டத்தில் கூடி வாழும் சகிப்புத்தன்மையோ, இணக்கமோ, அறிவோ, பயிற்சியோ, உழைப்போ என்று எந்தவித திறனும் அற்றவர் சவுந்தர்யா. தனக்குப் பிரியமானவர்கள் என்றால் ஒரு மாதிரியாகவும் பிடிக்காதவர்கள் என்றால் இன்னொரு மாதிரியாகவும் நடத்தும் இரண்டிற்கும் மேற்பட்ட மனநிலை கொண்ட போட்டியாளராக சவுந்தர்யா நீடிக்கிறார்.
அருவருக்க வைக்கும் சவுந்தர்யாவின் சேஷ்டைகள்
ஆரம்பத்தில் ‘டம்மி பீஸாக’ கருதப்பட்ட சவுந்தர்யா, ஒரு கட்டத்தில் தனது சேஷ்டைகள் காரணமாகவே தனித்துக் கவனிக்கப்பட்டார். அதில் கிடைக்கும் பாராட்டும் வரவேற்பும் அவரை புத்திசாலியாக கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ‘நீ சுத்த வேஸ்ட்டு’ என்று ராணவ் போன்றவர்களை கீழே இறக்கி இகழும் துணிச்சலைத் தந்திருக்கிறது. இந்தப் போட்டியில் தொடர்வதற்கு எந்தவித தகுதியும் இல்லாத போட்டியாளர்களில் ஒருவராக சவுந்தர்யாவை தயக்கமின்றி சொல்லலாம்.
சவுந்தர்யா நாய் மாதிரியாக குரைக்கும் போது “இந்த மாதிரி பண்ணாத. அப்புறம் பிரச்னையாயிடும்” என்று ரகசியமாக எச்சரித்தார் ஜாக்குலின். அந்த குறைந்த பட்ச அறிவு கூட சவுந்தர்யாவிடம் இல்லை. ‘ஒட்டு கேக்கறாங்க’ என்று சவுந்தர்யா தொடர்ந்து கத்தியதும் அபத்தமான ஸ்டேட்மெண்ட். இவர்கள்தான் மஞ்சரி பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்து விட்டு கிண்டலை ஆரம்பித்தவர்கள். “நான் தர்ஷிகா கிட்ட ரெக்வெஸ்ட்தானே செய்தேன்?” என்று மஞ்சரி தொடர்ந்து தன் தரப்பைச் சொன்னாலும் இவர்களின் bullying குறையவில்லை. இப்படியொரு சூழலில் மஞ்சரியை மட்டும் பிரச்னையின் குறியீடாக மற்றவர்கள் சித்தரிப்பது நகைப்பிற்குரியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு ஏஞ்செல்களும் பாக்கியுள்ள ஒன்பது டெவில்களை வரிசைப்படுத்த வேண்டும். இதில் குறும்புகளும் சுவாரசியமான அடைமொழிகளும் வன்மங்களும் வெளிப்பட்டன. ‘சூனியக்கிழவி’ என்று மஞ்சரியை வர்ணித்தார் சத்யா. இதற்கு ஜோடியாக ‘சூனியக்கிழவன்’ என்று முத்துவை வர்ணித்தார். வலிமையான போட்டியாளர்கள் என்றால் மற்றவர்கள் அஞ்சுவதின் அடையாளம் இது. ரயான் பேசும் போது தீபக்கை ‘ஆர்கனைஸ்டு பேய்’ என்றது சுவாரசியம்.
பிக் பாஸின் பாராட்டைப் பெற்ற ரஞ்சித்
ரஞ்சித் பேச வரும் போது ஒட்டுமொத்த வீடும் சிரிப்பால் அதிர்ந்தது. ‘யாரு சாமி..நீ ..இத்தனை நாளா எங்கே இருந்தே?” என்று எல்லோரும் வியந்தார்கள். நகைச்சுவை என்பது ஒருவரை புண்படுத்துவதல்ல. கிண்டல் செய்யப்படுபவரும் இணைந்து சிரிக்குமாறு அந்த நகைச்சுவை பண்பட்டதாக இருக்க வேண்டும் என்பது ஓர் அடிப்படை. அந்த வகையில் ரஞ்சித் பேசிய காமெடியான பேச்சிற்கு சம்பந்தப்பட்டவர்களும் இணைந்து சிரித்தார்கள். “பாராட்டுக்கள் ரஞ்சித். சிறப்பாக இருந்தது” என்று பிக் பாஸ் பாராட்டி விட்டு “இதுக்காக மக்கள் 60 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது” என்று ஊமைக்குத்தையும் வைத்தார். பொதுவாக ரஞ்சித் யார் மனதும் புண்படாமல் பேசுபவர். இதில் தனது கூட்டை விட்டு வெளியே வந்து அவர் பேசியதில் சற்று வன்மமும் கலந்திருந்தது.
டெவில்களின் வரிசைப் பட்டியல் 1) மஞ்சரி 2) ஜாக்குலின் 3) முத்து 4) தீபக் 5) சவுந்தர்யா 6) சாச்சனா 7) அருண் 8) தர்ஷிகா 9) ராணவ் என்பதாக அமைந்திருந்தது. “ரஞ்சித்தும் மத்தவங்களை குத்தறார். ஆனா சுகர் கோட்டிங்கா இருக்கு. சவுந்தர்யாவோட பிஹேவியர் எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்று ஆனந்தியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் மஞ்சரி. “என்னோட டோனை மத்தவங்க பிரச்னையாகப் பார்க்கிறாங்க.. அந்தக் குரலை வெச்சுதான் நான் முட்டி மோதி முன்னுக்கு வந்திருக்கேன். கத்தி கத்தித்தான் இந்த இடம் கிடைச்சது” என்று சாச்சனாவிடம் பிறகு ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார் மஞ்சரி.
மற்றவர்களால் ஒதுக்கப்படுகிறாரா ராணவ்?
தன்னை நிரூபிப்பதற்காக போராடினாலும் ஆதரவு கிடைக்காத நபர் ராணவ். டெவில்களுக்கான ஆடைகள் ஸ்டோர் ரூமில் வர ராணவ்வும் ஆசையாக ஓடி வந்தார். ஆனால் கேப்டன் என்கிற அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஜெப்ரியும் அவரது பினாமியாக இருக்கிற சத்யாவும் ராணவ்வை தடுக்க அதனால் அவர் மனம் புண்பட்டு “இதுல மறைக்க என்ன இருக்கு..?” என்று ஆட்சேபித்தது நியாயமான விஷயம். “ஏன் பேசிக்கிட்டே இருக்கே?” என்று ராணவ்வை தடுத்து தனது மூக்கை நுழைத்து எரிந்து விழுந்தார் சவுந்தர்யா.
எந்தக் க்ரூப்பிலும் இல்லாமல் தனியாக இருக்கிறோம் என்கிற ஃபீலிங் சாச்சனாவிற்குள் வந்து விட்டது போல. எனவே அவர் அரவணைப்பைத் தேட, தர்ஷிகா, விஷால், அருண் என்று மூவரும் அரவணைத்து ஆறுதல் சொன்னார்கள். “எந்தக் க்ரூப்லயும் இல்லாததுதான் நல்லது’ என்கிற மாதிரி அருண் சொன்ன அட்வைஸ் நன்று. ஆனால் அவருமே சற்று முன்னர் “உங்க டீமை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்” என்று கோவா கேங்க்ஸை பாராட்டி கைகொடுத்தவர்தான்.
போட்டியாளர்களின் அசலான நிறங்கள் அம்பலமாகத் துவங்கியிருக்கும் சரியான சூழலில் ‘Angels Vs Demons’ டாஸ்க் ஆரம்பித்திருக்கிறது. இதில் பலருடைய சுயரூபங்கள் வெளியாகும் என்று எதிர்பார்ப்போம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...