நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
Bihar Election: சொந்தக் கட்சி சீனியர்களை மாறி மாறி நீக்கும் JDU, RJD; பரபரக்கும் பீகார் களம்!
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மறுபக்கம் மகாபந்தன் கூட்டணியில் 143 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 61 இடங்களில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.
இதில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரும் முன்னிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதுபோக, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மூன்றாவது கூட்டணியும், தனித்து களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜும் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, சீனியர் நிர்வாகிகள் உள்ளிட்டோரை தங்களின் கட்சியிலிருந்து நீக்கி வருவது பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக கடந்த 3 நாள்களில், முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், எம்.எல்.ஏ கோபால் மண்டல், மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஷியாம் பகதூர் சிங், சுதர்சன் குமார் மற்றும் பல முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் என மொத்தம் 16 பேரை கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து 27 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 வருடங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த 27 பேரில் சோட் லால் ராய், முகமது கம்ரான் ஆகிய 2 எம்.எல்.ஏக்கள், ராம் பிரகாஷ் மஹ்தோ, அனில் சாஹ்னி, சரோஜ் யாதவ், அனில் யாதவ் ஆகிய 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் கணேஷ் பாரதி ஆகியோர் அடங்குவர்.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநில தலைவர் மங்கனி லால் மண்டல் வெளியிட்ட அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் அல்லது மகாபந்தன் வேட்பாளர்களுக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கையாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




















