செய்திகள் :

Bison: ``கந்தசாமி பாத்திரத்தை துணிச்சலுடன் பதிவு செய்திருக்கிறார்'' - திருமாவளவன் ரிவியூ!

post image

பார்மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், மதன், அமீர், லால் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

Bison - திருமாவளவன் ரிவியூ

இந்த திரைப்படத்தைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன், "மாரி செல்வராஜ் அவர்களுக்கு இது ஐந்தாவது திரைப்படம். ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

இந்த திரைப்படம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாரி செல்வராஜ் அவர்கள் இன்னும் இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்வார் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு திரைப்படமாக இது அமைந்திருக்கிறது.

அந்த அளவுக்கு இந்த படத்தில் அவர் கையாண்டிருக்கிற யுத்திகள், வசனங்கள், காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை ஆக்கிரமிக்கிறது. ஆளுமை செய்கிறது.

1990களில் தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவிய சமூக சிக்கல்களை மையமாகக் கொண்டு, வரலாற்று உண்மைகளை கருப்பொருளாக கொண்டு, ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார்.

"துருவ் விக்ரம்: வசனங்கள் குறைவு, அபாரமான நடிப்பு"

Mari Selvaraj - Dhruv Vikram

மணத்தி கணேசன் என்கிற அந்த வீரர் இந்தியாவின் மிக உயரிய அர்ஜுனா விருதினை பெற்றவர். கடுமையான சாதிய சிக்கல் நிறைந்த தூத்துக்குடி மாவட்ட சமூக கட்டமைப்பில் அவர் எத்தகைய நெருக்கடிகளை எல்லாம் எதிர்கொண்டு, அவற்றை எல்லாம் மீறி மாநில அளவிலும் தேசிய அளவிலும் வீரராக தேர்வு செய்யப்பட்டு, ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் தங்க பதக்கத்தை வென்றார் என்பதை சொல்லுகிற கதைதான் பைசன்.

அவர் எதிர்கொண்ட சிக்கல்களை மிக கவனமாக எடுத்துரைத்திருக்கிறார். இன்றும் தென்மாவட்டங்களில் நிலவுகிற சாதி அடிப்படையிலான முரண்களை கையாளுகிற போது எத்தகைய எதிர் வினைகள் ஏற்படும், எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை எல்லாம் உணர்ந்தவர், அந்த மண்ணிலிருந்து உருவாகி இருக்கிற மாரி செல்வராஜ் அவர்கள்.

இந்த திரைப்படத்தில் மனத்தி கணேசன் என்கிற பாத்திரத்தில் விக்ரம் அவர்களின் மைந்தர் துருவ் விக்ரம் நடித்திருக்கிறார்.

அபாரமான நடிப்பு நம்முடைய நெஞ்சம் முழுவதும் அவர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு வசனங்கள் மிக குறைவு, அவருடைய உடல் மொழிகள் மூலம் அவருடைய உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதிலிருந்து அந்த மாவட்டங்களில் இளைஞர்கள் இளம் தலைமுறையினர் எத்தகைய கொதிப்போடு ஒவ்வொன்றையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

இந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கிற போதே எனக்கு மாரி செல்வராஜ் அவர்கள் எப்படி இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பார், அவர் எதிர்கொண்ட நெருக்கடிகள் என்னவெல்லாம் இருக்கும், என்பதை நான் ஒப்பீடு செய்து கொண்டே பார்த்தேன்.

நம்மைச் சுற்றி போட்டிருக்கிற வேலிகளை தகர்ப்பது ஒரு போராட்டம், அதே வேளையில் நம்மைச் சுற்றி எந்த வேலியையும் போட முடியாத இடத்துக்குச் செல்வது இன்னொரு போராட்டம் என்று அமீர் ஏற்றிருக்கிற பாண்டியராஜா கதாபாத்திரத்தின் மூலம் மாரி செல்வராஜ் நமக்கு அறிவுறுத்துகிறார். மாரி செல்வராஜும் அப்படி தன்னைச் சுற்றி எந்த வேலையும் போடவிடாமல் தடுத்திருக்கிறார்.

"மாரி செல்வராஜின் போராட்டம் தெரிகிறது"

பைசன் திரைப்பட விழா: மாரி செல்வராஜ் - வானதி கணேசன்

இந்த படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம் கடைசியில் அர்ஜுனா விருதினை பெறுகிற போது அந்த இடத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன்.

அர்ஜுனா விருதை விருதினை பெறக்கூடிய அளவுக்கான ஆற்றலும் பக்குவமும் முதிர்ச்சியும் இந்த இளம் வயதில் தம்பி மாரி செல்வராஜ் அவர்களுக்கு இருப்பதை இந்த திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பகையை துருவ் விக்ரம் மூலம் அவர் பேசுகிறார்.

"நான் பிறப்பதற்கு முன்பு, நீ பிறப்பதற்கு முன்பு, தாத்தா பிறப்பதற்கு முன்பு இங்கே ஒரு பகை உருவாகி இருக்கிறது. அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவன் சொந்தக்காரன் என்று வந்து சிரிக்கிறான், இன்னொருவன் காரணம்ல்லாமலே கத்தியை எடுத்து குத்துகிறான், இதை எப்படி நான் எதிர்கொள்வது? யாரிடத்தில் நான் சிரிப்பது, யாரிடத்தில் நான் முறைப்பது என்று கூட எனக்கு தெரியவில்லை" என்று அந்த கதாபாத்திரத்தின் மூலம் மாரி செல்வராஜ் நம்மோடு பேசுகிறார்.

அது மாரி செல்வராஜ் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல் என்பதை உணர முடிகிறது. அவர் எந்த அளவுக்கு போராடி இருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

"கந்தசாமி பாத்திரம்"

இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிற மனத்தி கணேசன் அவர்கள் இவ்வளவு கடுமையான சாதிய சிக்கல்களுக்கு இடையிலே சிக்கி அதிலே பாழ்பட்டு விடாமல், சீரழிந்து விடாமல் தன்னுடைய திறமையில் ஆற்றலில் அவர் அர்ஜுனா விருதினை பெறக்கூடிய அளவுக்கு உயர்ந்தார் என்பதிலே இன்னொரு முக்கியமான செய்தியையும் மாரி செல்வராஜ் சொல்லுகிறார்.

இரண்டு சமூகங்களைச் சார்ந்த, இரண்டு குழுக்கள் ஒருவருக்கொருவர் தேடி தேடி அழி அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், அது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பகையாக இருந்தாலும் கூட மனத்தி கணேசன் திறமையான கபடி வீரர் அவர் போக வேண்டிய தூரம் மிக உயர்ந்தது, ஆகவே அவருக்கு உதவ வேண்டும் என்று சாதியை கடந்து சிந்திக்கிறது கந்தசாமி என்கிற கதாபாத்திரம்.

கந்தசாமிக்கும் பாண்டியராஜாவுக்கும் இடையிலே கடுமையான, மூர்க்கமான பகை. ஒருவரை ஒருவர் தேடி தேடி அழித்து அழித்துக் கொள்ளகிற அளவுக்கான பகை. அதே நேரத்தில் பாண்டியராஜாவின் சமூகத்தைச் சார்ந்த ஒரு கபடி வீரர், அபாரமான ஆற்றல் பெற்ற ஒரு விளையாட்டு வீரர், அவரை சாதி பார்த்து ஒதுக்க கூடாது அவருடைய ஆற்றலை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற கந்தசாமி என்கிற கதாபாத்திரம் மிக உயர்ந்த இடத்திலே வைத்து நாம் வணங்க செய்கிறது.

அவருடைய பகை ஒரு குழுவுக்கு எதிராகத்தானே தவிர சாதிக்கு எதிராக இல்லை என்பதை அவர் உணர்த்துகிறார். அதை கையாளுவதிலே மிக காத்திரமான முறையிலே மாரி செல்வராஜ் யாருடைய மனதும் புன்படாத வகையில் இரு சமூகங்களுக்கு இடையிலே எந்த வகையும் ஏற்படாத வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார் என்பதுதான் இதிலே போற்றுதலுக்குரியது.

Dhruv in Bison

கந்தசாமி சுற்றி வழைக்கப்படுகிற போது, எப்படி அவர்களுக்கு இந்த இடத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள் என்ற சந்தேகம் எழுகிற போது, மிக இயல்பாக இந்த கிட்டா என்கிற கதாபாத்திரம் நம்முடைய சாதியை சார்ந்தவன் இல்லை. இவன் தான் காட்டிக் கொடுத்திருப்பான் என்று சந்தேகப்பட வைக்கிறது. அந்த நேரத்திலும் கந்தசாமி என்கிற கதாபாத்திரம், "அவன் கண்களில் விளையாட்டு மட்டும்தான் தெரிகிறது.நீ நினைப்பது போல் சாதி அவனிடத்தில் இல்லை, அவன் நான் தேர்ந்தெடுத்த ஒருவன் அவனை சந்தேகப்படக் கூடாது" என்று உடன் இருப்பவர்களை அவர் கண்டிக்கிறார். தன்னுடைய பெயரை பச்சை குத்திக் கொண்டு பிற சாதினரிடம் வம்பு இழுக்க கூடியவனை அடிக்கிறார், கண்டிக்கிறார்.

"இந்த குழுவிலே நீ இருக்க வேண்டாம். உன் மீது எல்லோரும் சந்தேகப்படுகிறார்கள் ,என் கிளப்பிலும் டீமிலும் நீ விளையாட வேண்டாம். நான் இன்னொரு குழுவுக்கு உன்னை பரிந்துரைக்கிறேன். அந்த குழுவிலே நீ இணைந்து விளையாடு. நீ போக வேண்டிய தூரம் மிக மிக உயர்ந்த இடமாக இருக்கிறது." என்று அவனை வாழ்த்தி அனுப்புகிறார்.

இவ்வளவு கடுமையான ரத்த களரி நடக்கிற ஒரு மண்ணில், ஆற்றலை மதிக்கிற ஈரம் கொண்ட ஒரு கதாபாத்திரமாக, நேர்மை கொண்ட ஒரு கதாபாத்திரமாக கந்தசாமியை காட்டுகிறார். இது வெறும் திரைப்படத்திற்கான உருவகம் இல்லை. வரலாற்று உண்மை. மனத்தி கணேசன் விருது பெற்றார் என்பது எவ்வளவு முக்கியமானதோ, அந்த மனத்தி கணேசனின் ஆற்றலை மதித்து அவனை ஊக்கப்படுத்திய கந்தசாமி செய்த செயல் நேர்மையான ஒரு அணுகுமுறை பாராட்டுதலுக்குரியது என்பதை மிகுந்த துணிச்சலோடு மாரி செல்வராஜ் பதிவு செய்திருக்கிறார்.

"உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் - மாரி செல்வராஜ் எடுத்த பாடம்"

இரு தரப்பிலும் சந்தேகம் வருகிறது. கந்தசாமி குழுவைச் சார்ந்த சமூகத்தினரும், பாண்டியராஜா சமூகத்தைச் சார்ந்த பிரிவினரும் கதாபாத்திரமாக இருக்கிற கிட்டாவின் மீது சந்தேகப்படுகிற நிலை. தன்னைப்போல் தன்னுடைய மகனும் கத்தி கபடா என்று தூக்கி வாழ்வை சிதைத்துக் கொள்ள கூடாது என்று போராடுகிற தந்தை. ஒவ்வொரு காட்சியும் மிக கவனமாக கையாளப்பட்டிருக்கிறது.

உண்மைகளை திரைப்படமாக்குவது என்பது வெறும் கால வரிசையின் அடிப்படையிலே கோர்ப்பது அல்ல, உண்மையை உண்மையாக சொல்லுவது! மக்கள் மனதில் பகைமை இல்லாமல் அதை பதிவு செய்வது. இனி எந்த காலத்திலும் அப்படி இரு சமூகங்களுக்கு இடையிலே சாதியின் அடிப்படையில் மோதிக்கொள்ள கூடாது என்கிற புரிதலை அந்த முதிர்ச்சியை பக்குவத்தை உருவாக்குவது என்கிற பார்வை இயக்குனர் மாரி செல்வராஜிடம் மிக ஆழமாக இருக்கிறது.

மாரி செல்வராஜ்

அவரும் அதே மண்ணில் பிறந்தவர், வளர்ந்தவர். இத்தகைய நெருக்கடிகளை எல்லாம் சந்தித்தவர் என்கிற நிலையிலே அவருக்கு அந்த கசப்பான அனுபவங்கள் மிக ஆழமாக உண்டு. அந்த அனுபவங்களை இன்றைக்கு பொதுமக்களோடு அவர் பகிர்ந்திருக்கிறார். சாதி அடிப்படையில் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்து விட முடியாது, எவ்வளவு தடைகள் இருந்தாலும் திறமை அந்த தடைகளை தகர்க்கும்.

"இன்னொருவன் காலில் விழுந்து அவன் இந்த இடத்திற்கு உயர்ந்திருக்கிறான்" என்று சொந்த சமூகத்தைச் சார்ந்தவர்களே இழிவுபடுத்துகிற போது யார் ஆதரித்தாலும் அவனுடைய சொந்த திறமைதான் அந்த ஆதரவுக்கே காரணம்.

ஆகவே அவனுடைய உழைப்பு, அவனுடைய ஆற்றல், அவனுடைய திறன்தான் அவனை அவ்வளவு தூரம் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. எனவே உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள்.

சாதி, மதம் என்கிற எல்லா வரம்புகளையும் கடந்து உங்களால் உயர முடியும் என இந்த திரைப்படத்தில், உண்மையான வரலாற்றை சொல்லுவதன் மூலம் மாரி செல்வராஜ் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய வகுப்பெடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுகள்." என்றார்.

செய்தியாளர் ஒருவர், "இந்த படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜ் கைது செய்ய வேண்டும் ஒரு சில போராட்டம் பண்ணிருக்காங்க. எப்படி பகறீங்க?" எனக் கேள்வி எழுப்பியபோது, "அப்படி சொல்றவங்க யாருன்னு எனக்கு தெரியல. அவங்க இதைப் புரிந்து கொள்வதற்கே கந்தசாமி என்கிற கதாபாத்திரத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும். கந்தசாமி அவர்களுக்கு என்ன பார்வை இருந்தது, அவர் எத்தகைய அணுகு முறையை கொண்டிருந்தார், அவர் ஒரு குழுவை குழுவின் தலைவராக இருக்கிற அதே வேளையில் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த அதுவும் பகைக்குழுவை சார்ந்த ஒரு இளைஞனை அவனுடைய திறமையை ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஆதரித்திருக்கிறார் என்பதிலிருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது." என பதிலளித்தார்.

``என் மனைவி கடவுள் கொடுத்த கிஃப்ட்!'' - நடிகராக அறிமுகமாகும் `ஜேசுரதி' மகன் பிரகன் பேட்டி

குடும்பத்துக்கு ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிடுவதையெல்லாம் ஓவர்டேக் செய்து, குடும்பமே சேர்ந்து டான்ஸ், காமெடி ரீல்ஸ்களால் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருப்பவர்கள்தான் தாய் ஜேசுரதி, மகள் பிரக்யா, மகன் பிர... மேலும் பார்க்க

Melodi Dorcas: ``ஸ்கின் கலர் பார்த்து ஸ்கிரிப்ட் எழுதும் சினிமா?'' -நடிகை மெலொடியின் அசத்தலான பேட்டி

மெலோடி டார்கஸ் (Melodi Dorcas) என்றப் பெயர் திரை ரசிகர்களிடம் அறிமுகமில்லாமல் இருக்கலாம். ஆனால் இவரின் முகம் எல்லோர் மனதிலும் அழுத்தமாகப் பதிந்திருக்கும். தமிழில் வெளியான 'அயலி' வெப் சீரிஸ் மூலம் தமிழ... மேலும் பார்க்க

`பொல்லாதவன்' முதல் `பைசன்' வரை - 20 ஆண்டுகளில் தீபாவளியை திருவிழா ஆக்கிய படங்கள்!

தீபாவளி என்றில்லை எந்தவொரு கொண்டட்டத்தையும் சினிமா இல்லாமல் கடக்க முடியாது. குடும்பமாக அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதிலிருந்து திரையரங்கில் ஆட்டம்போதுவது வரை ஏதோ ஒரு வகையில் திரைப்படங்க... மேலும் பார்க்க

Diwali ''நான் 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்' பொண்ணு'' - நடிகை ஜெயா சீல் பேட்டி

'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' - 2000-ல் லவ் பண்ணவங்கள்ல ஆரம்பிச்சி, 2000-ல பிறந்து இப்போ லவ் பண்றவங்க வரைக்கும், இந்தப் பாட்டு இன்னமும் எவெக்ரீன் 'லவ் சாங்'காகத்தான் இருக்கு. இந்தப் பாட்ட... மேலும் பார்க்க

Diwali: ``அதைப் பார்க்க ஸ்வர்ணலதா இல்லைன்னு வருத்தப்பட்டேன்!" - புஷ்பவனம் குப்புசாமி பேட்டி

`கிராமத்துக் கதை, அதிலொரு நாட்டுப்புறப் பாடல் இருக்க வேண்டும்' என ஒரு படத்தின் இயக்குநர் சூழலைச் சொல்லி முடித்த அடுத்த நொடியே இசையமைப்பாளர்களுக்கு நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் முகமும்... மேலும் பார்க்க

Bison: `` ̀பைசன்'ல நடிக்கிறதுக்கு கபடியும், மாரி சாரும்தான் காரணம்!" - கபடி வீரர் பிரபஞ்சன் பேட்டி

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து 'பைசன்' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினத்தின் பிரதிபலிப்பாக வ... மேலும் பார்க்க