CNG Bike: பெட்ரோல் பங்க்கில் சிஎன்ஜி நிரப்புறீங்களா? கவனம், காயமடைந்த பங்க் ஊழியர் - என்னாச்சு?
சில மாதங்களுக்கு முன்புதான் பஜாஜ், அந்த உலக சாதனையைச் செய்திருந்தது. ‛ஃப்ரீடம் 125’ (Freedom 125) என்றொரு சிஎன்ஜி பைக்கை 125 சிசி செக்மென்ட்டில் லாஞ்ச் செய்தது பஜாஜ். ‛சிஎன்ஜி பைக்கால எந்தப் பிரச்னையும் இல்லேல்ல’ என்று மக்கள் உறுதியாக நம்பியிருக்கும் வேளையில், அண்மையில் பெட்ரோல் பங்க்கில் நடந்த சம்பவம் ஒன்று பீதியைக் கிளப்பியிருக்கிறது.
யூட்யூப் வலைதளத்தில் Raghav 21 Technical என்றொரு சேனலில் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இது வீடியோவாக எடுக்கப்படவில்லை. CCTV காட்சிப் பதிவை வைத்து இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். வடமாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கைக் கொண்டு வருகிறார் அதன் உரிமையாளர். பெட்ரோல் பங்க் ஊழியர் சிஎன்ஜிக்கான நாஸிலைக் (Nozzle) கொண்டு வந்து, பைக்கின் சிஎன்ஜி டேங்க் மூடியைத் திறந்து அந்த ஃபில்லிங் ஸாக்கெட்டில் பொருத்த முயல்கிறார். முதலில் எப்படியோ பைக்கின் சிஎன்ஜி டேங்க் மூடி லாக் ஆகிவிட்டது. சரியாக லாக் ஆகவில்லையோ என்று அவர் அந்த Lid-யைத் திறந்து மறுபடியும் நாஸிலை லாக் செய்வதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, பம்ப்புக்குச் சென்று சிஎன்ஜிக்கான பட்டனை ஆன் செய்து எரிபொருளை நிரப்புகிறார்.
எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போதே - திடீரென அந்தச் சம்பவம் நிகழ்கிறது. சட்டென சிஎன்ஜி பம்ப் நாஸில், பைக்கின் டேங்க்கில் இருந்து வீரியமாக வெளியே வர, அந்த பம்ப் - பைக்கின் எதிரே நின்று கொண்டிருந்த பங்க் ஊழியரின் முகத்தில் அடிக்கிறது. இதில் காயமடைந்த ஊழியர் தரையில் சுயநினைவில்லாமல் வீழ்வது, பார்ப்பதற்கே ‛திக்’கென இருக்கிறது.
இதைத் தொடர்ந்து அந்த சிஎன்ஜி பைப், கன்னாபின்னாவென ஆட - சுற்றியிருந்த ஆட்டோ டிரைவர்கள், மற்ற பைக் உரிமையாளர்கள் அனைவரும் தப்பித்து ஓடியதால் தப்பித்தனர். இதில் அந்த சிஎன்ஜி பைக்கின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாகக் கொஞ்சம் தள்ளிச் சென்றதால், அவரும் தப்பித்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் வீடியோவாக வெளியானதைத் தொடர்ந்து - எல்லோரும் அந்த பெட்ரோல் பங்க் ஊழியரைக் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்தான் பம்ப் நாஸிலை சரியாக பைக்கின் சிஎன்ஜி டேங்க்கில் சரியான ஃபிட் செய்திருக்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.
பஜாஜ் சிஎன்ஜி பைக்கை பல ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். யாரும் இதுவரை நமக்கு எந்தப் புகார்களும் சொல்லவில்லை.
மேலும் பஜாஜ், தனது சிஎன்ஜி பைக்குக்கு, கார்களைப்போல் க்ராஷ் டெஸ்ட்டெல்லாம் வைத்து சோதனை செய்து வெளியிட்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும், சிஎன்ஜி பைக் பற்றிய புதிய பயம் அன்லாக் ஆகியிருக்கிறது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு, பைக் உரிமையாளர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள். தயவுசெய்து பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களுக்கு, சிஎன்ஜி எப்படி நிரப்ப வேண்டும் என்பதையும் முறையான பயிற்சியுடன் விளக்கி விட்டு, சிஎன்ஜி நிரப்புவதை வாடிக்கையாக்க வேண்டும்.
இன்னொரு விஷயம் - சிஎன்ஜி பைக்கோ, பெட்ரோல் பைக்கோ - எரிபொருள் நிரப்பும்போது - முடிந்தவரை டேங்க்கில் குழந்தைகளை அமர வைத்தபடி நிரப்ப வேண்டாம்! ப்ளீஸ்!