மிஸ்பண்ணிடாதீங்க... என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
தேனி: `தங்கச்சி வீட்டு விசேஷத்துக்கு வர்றேன்னு போனார்'- பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்; மக்கள் சோகம்!
தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - இன்பவள்ளி தம்பதியரின் மகன் முத்து (36). இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் 12 RAPID SIG ரெஜிமென்ட்டில் சிப்பாயாக பணியில் இருந்தார். இந்நிலையில் நவம்பர் 10 ஆம் தேதியன்று ஜோத்பூர் ராணுவ முகாமில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மும்பையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாகவும், பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக சொந்த ஊரான தேனிக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் முத்துவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் பெரியகுளம் சார்பு - ஆட்சியர் ரஜத் பீடன் மரியாதை செலுத்தினார். தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த முத்துவிற்கு ரீனா என்ற மனைவி உள்ளார். தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. கடைசியாக தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்து சென்ற முத்து , அடுத்த மாதம் அவரது உடன்பிறந்த சகோதரி கயல்விழியின் புதுமனை புகுவிழா நிகழ்வுக்கு வருவதாக மனைவியிடம் கூறிச் சென்றிருக்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தால் முத்து மரணமடைந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமன்றி நண்பர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.