மிஸ்பண்ணிடாதீங்க... என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
திருவாரூர்: பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இளைஞர் பலி; காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வடம் போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியார் வண்டி மூலம் கழிவு நீர் பாதாள சாக்கடை குழிக்குள் வெளியேற்றப்பட்டது. அப்போது தனியார் கழிவுநீர் வாகனத்தின் ஓட்டுநர் மணிமாறன் (வயது 30) மேன்ஹோல் பகுதியில் வழுக்கி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்ததாக சொல்லப்படுகிறது. அவரைக் காப்பாற்றுவதற்காக வாருகுச்சி தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் அருணாச்சலம் (வயது 27) முயன்றபோது, அவரும் தவறி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார்.
உடனடியாக அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கே இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது உறவினர்கள் திரண்டதால், டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.