CSK : 'பணத்தை விட நமக்கான மதிப்புதான் முக்கியம்' - சிஎஸ்கேக்கு திரும்புவது பற்றி அஷ்வின் நெகிழ்ச்சி
தமிழக வீரரான அஷ்வினை ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சென்னை அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இதன்மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்வின் சென்னை அணிக்கு திரும்பவிருக்கிறார். மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் ஆடப்போவதைப் பற்றி அஷ்வின் உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.
அஷ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது, ``2015 க்குப் பிறகு ஐ.பி.எல் இல் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காக ஆடியிருந்தேன். கடந்த சீசனிலேயே சென்னை எனக்காக ஏலத்தில் முயற்சிப்பார்களா எனும் ஏக்கம் இருந்தது. அப்போது நடக்கவில்லை. இந்த முறை சென்னை விடாமல் முயன்று என்னை எடுத்துவிட்டார்கள். என்னுடைய ஐ.பி.எல் கரியரில் சென்னைக்குப் பிறகு நான் மகிழ்ச்சியாக ஆடிய அணி ராஜஸ்தான்தான்.
ஏலத்தில் அவர்களும் எனக்கு கடுமையாக முயன்றதுதான் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. பணம் முக்கியம்தான். ஆனால், அதைவிட ஒரு கட்டத்துக்கு மேல் அணியில் நமக்கான மதிப்புதான் முக்கியம். ராஜஸ்தான் அணி அந்தவிதத்தில் என்னை ரொம்பவே சிறப்பாக நடத்தினார்கள். ஏலம் முடிந்த பிறகுமே என்னை எடுக்க முடியவில்லை என்பதற்காக மனம் வருந்தி அனைவரும் மெசேஜ் செய்திருந்தார்கள். எங்கே ஆரம்பித்தோமோ அங்கேயே நம்முடைய கரியரை முடிப்பதற்கான வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. எனக்கு அந்த வாய்ப்பை வழங்கிய சென்னை அணியின் நிர்வாகத்துக்கு நன்றி. நீண்ட காலம் கழித்து மஞ்சள் ஜெர்சி அணியப்போவதில் மகிழ்ச்சி. இது ரொம்பவே உணர்வுப்பூர்வமான தருணம்.' என்கிறார் நெகிழ்ச்சியாக.
அஷ்வின் சென்னை அணிக்கு திரும்பவிருப்பதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...