``2026 தேர்தலில் விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சி" - டிடிவி தினகரன் ...
Deepavali: அதிரசத்தோட ரூல் புக் படிச்சிருக்கீங்களா? இது அதிரசத்தோட Nostalgia பகிர்வு
அதிரசம்... பேர் என்னவோ இனிப்பு பலகாரம்தாங்க. ஆனா, இது வாங்குற வேலையிருக்கே... அப்பப்பா..! இன்னிக்கு ஆர்டர் போட்டா இனிக்க இனிக்க வீடு தேடி வந்திடுது அதிரசம். ஆனா, கால் நூற்றாண்டுக்கு முன்னாடி வரைக்கும் தீபாவளிக்கு அதிரசம் சுடுறதுங்கிறது மிகப்பெரிய டாஸ்க். சென்ற தலைமுறையினர் அதிரசம் செய்ய பட்டபாடுகளையாவது நாம தெரிஞ்சுக்கலாமா..?

முதல்ல அதிரசத்தோட ரூல் புக்கை படிச்சிடுவோம்.
இளம் பிரவுன் நிறத்துலதான் இருக்கணும். ஒரு செகண்டு அதிகமா வெந்துட்டாலும் தீய்ஞ்ச நிறம் வந்துடும்.
கையில எடுத்தா பொல பொலன்னு உதிரவும் கூடாது; அதுக்காக சுத்தியல் வெச்சு உடைக்கிற மாதிரியும் இருக்கக்கூடாது.
வாயில போட்டா மெத்துன்னு இருக்கணும்; அதே நேரம் நல்லா வெந்தும் இருக்கணும். முக்கியமா மாவு மாவா இருக்கக்கூடாது.
பாகு வெல்லம்தான் கரெக்ட்... அதுவும் தங்க நிறத்துக்கும் பிரவுன் நிறத்துக்கும் நடுவுல ஒரு நிறத்துல வெல்லம் இருந்தாதான் அதிரசம் பார்க்க நல்லா இருக்கும்.
பாகு அரை கம்பிப் பதம் அதிகமா போனாலும், பாட்டியோட உரலை இரவல் வாங்கணும். கிடைக்கலைன்னா, வாய்ல போட்டு ஊறவெச்சுதான் சாப்பிடணும்.
அதிரச மாவை ரெண்டு நாள் மூடிபோட்டு ஊற வெச்சே ஆகணும்.
எல்லாத்துக்கும் மேல அதிரசம் சுடுறதுக்கு கைப்பக்குவம் வேணும்.

இந்த கைப்பக்குவம் ஒவ்வொரு கிராமத்துலேயும் யாராவது ஒரு பாட்டிக்கு இருக்கும். தீபாவளி நெருங்க நெருங்க ‘என் வீட்டுக்கு வாங்க; எங்க வீட்டுக்கு வாங்க’னு இந்தப் பாட்டிக்கு மவுசு கூடிப் போயிடும். பாட்டியும், ‘ஒத்த மனுஷி, ஊருக்கே பாகு எடுக்கணும்னா எப்புடிடி’ன்னு கெத்தா சலிச்சுக்கிட்டே வீடு வீடாப் போயி பாகெடுத்து, கையோட பச்சரிசி மாவையும் கொட்டி, கட்டித்தட்டாமக் கிளறி, பழைய வேட்டித்துணியால வேடு கட்டிக் கொடுத்துட்டு வருவாங்க.
பாட்டிங்ககிட்ட இருந்து அம்மாங்ககிட்ட கைமாறினப்போவும் அதிரசத்துக்கான மெனக்கெடல்கள் ஓரளவுக்கு மவுசாதான் இருந்துச்சு. குறிப்பா, மாமியாருங்க கோலோச்சுற வீடுகள்ல, ‘ஆடலும் பாடலும் பார்த்தே ஆகணும்’னு அடம்பிடிச்சாவது மருமகள்களை அதிரசம் சுட வெச்சிட்டிருந்தாங்க. தனிக்குடித்தனங்கள் அதிரசத்துக்குக்கிட்ட இருந்து ஓரளவுக்கு குடும்பத்தலைவிகளைக் காப்பாத்த, ஸ்வீட் ஸ்டால் புண்ணியவான்கள் நெய்ல அதிரசம் சுட்டு அத்தனை அம்மாக்களையும் இதுநாள் வரைக்கும் காப்பாத்திட்டு இருக்காங்க.
அதிரசம்னாலே எங்கயாவது ஓர் ஓரத்துல கூடுதலா வெந்து மொறுமொறுப்பா இருக்கணும். அதிரசத்தோட நடுவுல கொஞ்சம் வேக்காடு குறைஞ்சு மாவும் பாகும் நாக்குல லேசா ஒட்டுச்சுன்னா அதுதான் சொர்க்கம்.’
அதிரசத்தோட அருமை, பெருமைகளைப்பத்தி பேசுற இடம் எது தெரியுமா? மாவு மில் தான். இன்னிக்கு எல்லா மாவும் டோர் டெலிவரி ஆகிடுது. அந்தக் காலத்துல, வரிசையில நின்னு மாவு அரைக்கணும். அப்படி மாவு அரைக்க காத்திருக்கிற நேரத்துலதான் பல அதிரசக் கதைகள் பரிமாறப்படும்.
‘லட்டுல, மைசூர்பாக்குல எல்லாம் கடலை மாவு, சர்க்கரைன்னு தனித்தனியா ஃபீல் பண்ணவே முடியாது. அப்படி ஃபீல் பண்ணிட்டா அதை பச்சை வாசனை அடிக்குதுன்னு சொல்லிடுவோம். ஆனா, அதிரசத்துல பச்சரிசியோட வாசம், வெல்லத்தோட வாசம், ஏலக்காய் வாசம்னு ஒவ்வொண்ணுத்தையும் தனித்தனியா ஃபீல் பண்ண முடியும். நாக்கை மயக்குற ருசின்னா அது அதிரசம்தான்...’

‘போன தீபாவளிக்கு அதிரச மாவை ஊற வெக்கிறதுக்கு டப்பாவுல போட்டு ஃப்ரிட்ஜுக்குள்ள வெச்சிட்டேன். அப்படி செய்யக்கூடாதுன்னு எங்கம்மா ஒரே திட்டு. பாத்திரத்துல போட்டு வெள்ளைத்துணியாலதான் மூடி வெக்கணுமாம். காத்து உள்ளே போகணுமாம்; ஆனா, போக முடியாதுங்கிற மாதிரியும் மூடணுமாம். அது எப்படின்னுதான் புரியல...’
‘என் மாமியார் அதிரசம் சுடுற அன்னிக்கு எலெக்ஷன் ரிசல்ட் வர்ற மாதிரியே எஃபெக்ட் கொடுப்பாங்க. மாவைத் தட்டி எண்ணெயில போட்டவுடனே மாவு திரி திரியா பிரிஞ்சு போச்சுன்னா அத்தனை உழைப்பும் வீணாப்போச்சுன்னு டெபாசிட் போன எம்.எல்.ஏ மாதிரி அடுத்த தீபாவளி வரைக்கும் புலம்புவாங்க.’

‘எங்க அம்மாவுக்கு இப்பவும் அவங்க பொறந்த வீட்ல இருந்து தீபாவளி சீர் அனுப்புறாங்க. அதுல நம்ம கையகலத்துக்கு வெல்ல அதிரசமும், சர்க்கரை அதிரசமும் வரும். யானை பாதம் மாதிரி எவ்ளோ மெத்துன்னு இருக்கு பாரு என் பொறந்த வீட்டு அதிரசம்னு எங்கம்மா பெருமையடிச்சிக்கும்.’
‘வெல்ல அதிரசம் ஒரு ருசின்னா சர்க்கரை அதிரசம் வேற ருசி. நான் சர்க்கரை அதிரச ஸ்பெஷலிஸ்ட். ஆப்பம் மாதிரி ஒரு பக்கம் மட்டுமே சர்க்கரை அதிரசத்தை வேகவிட்டு எடுத்தா, இன்னொரு பக்கம் மல்லிப்பூ மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்கும். அதிரசம்னாலே எங்கயாவது ஓர் ஓரத்துல கூடுதலா வெந்து மொறுமொறுப்பா இருக்கணும். அதிரசத்தோட நடுவுல கொஞ்சம் வேக்காடு குறைஞ்சு மாவும் பாகும் நாக்குல லேசா ஒட்டுச்சுன்னா அதுதான் சொர்க்கம்.’

‘என் பாட்டியும் அம்மாவும் செஞ்ச மாதிரி என்னால அதிரசம் செய்ய முடியலை. அதான், மாவு அரைச்சு மாமியார்கிட்ட கொடுக்கிறதோட நீ சவுக்கியமா, நான் சவுக்கியம்னு தள்ளி நின்னுக்க ஆரம்பிச்சிட்டேன்.’
‘போன வருஷம் அதிரச மாவை எண்ணெயில போட்டவுடனே பிரிஞ்சு ஓடிப்போச்சு. மாவை உருண்டை பிடிச்சு, மைதாவுல முக்கி அதிரச போண்டா சுட்டுட்டேன்.’
இப்படி மாவு மில்லுல ஆரம்பிக்கிற அதிரசக்கதைகள், பாகு எடுக்கிறப்போ, எண்ணெய் சட்டியை அடுப்புல வெக்கிறப்போ, சுட்டு வெச்ச அதிரசம் தீர்ந்துபோற வரைக்கும் தொடரும்...
டீக்கடையில விக்கிற நடுவுல ஓட்டைப்போட்ட அதிரசத்துக்கே எச்சி ஊறுற அதிரச வெறியர்கள்ல ஆரம்பிச்சு, எங்கம்மா சுடுற அதிரசம்தான் உலகத்துலேயே பெஸ்ட்டுனு காலரைத் தூக்கி விட்டுக்கிற அதிரச கொடுப்பினையாளர்கள் வரைக்கும் எல்லார்கிட்டேயும் கட்டாயம் ஓர் அதிரசக்கதையிருக்கும். அதுதான் அதிரசத்தோட சிறப்பு. அதை நாமளே சுட்டு சாப்பிட்டா என்ன; கடையில வாங்கி சாப்பிட்டா என்ன..? எல்லாருக்கும் ஹேப்பி அதிரச தீபாவளி..!