`தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன்' - பிரபலங்கள் பங்கேற்ற கவின் கேர் இல்லத் திரு...
Diwali: 'மாமனார் பேராசிரியர் க.அன்பழகனும் நானும்' - மனம் திறக்கும் டாக்டர் சொக்கலிங்கம் | Exclusive
டாக்டர் சொக்கலிங்கம், சீனியர் மோஸ்ட் இதய நல மருத்துவர். 'இதுவரைக்கும் நான் ஒரு மாத்திரையும் சாப்பிட்டதில்ல' என்கிற இவருடைய வீடியோ சில மாதங்களுக்கு முன்னால் பயங்கர வைரல் ஆனது. அதுக்குப்பிறகு வெளிவந்த இவரோட அத்தனை வீடியோக்களும் இதயம் தொடர்பான கம்ப்ளீட் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துச்சு. மனசை மகிழ்ச்சியா வெச்சுக்கிட்டா நூறு வருஷம் ஆரோக்கியமா வாழலாம்கிற டாக்டர் சொக்கலிங்கத்தோட வீடியோ, கொரோனாவுக்குப் பிறகு ஹார்ட் அட்டாக் பயத்துல இருந்த பலபேரோட இதயத்துக்கு நிம்மதி கொடுத்துச்சுன்னுதான் சொல்லணும்.
வெறுமனே அட்வைஸோட நிக்காம தன்னோட லைஃப்ஸ்டைல், ஒன்பது மாடி வரைக்கும் தன்னால படி ஏற முடியும்கிற பர்சனல் விஷயங்களையும் வெளிப்படையாக அவர் பகிர, எல்லாருக்கும் பிடித்த டாக்டராகி விட்டார் சொக்கலிங்கம். உங்களைப்பற்றியும் உங்களோட தீபாவளி அனுபவங்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம்.
''நான் பிறந்தது வட ஆற்காடு மாவட்டத்துல இருக்கிற வேலூர்ல. அங்க இருக்கிற சி.எம்.சி மருத்துவமனையில 80 வருஷத்துக்கு முன்னாடி பிறந்தேன். அதே மருத்துவமனையில கடந்த 40 வருஷமா விசிட்டிங் புரொஃபசரா இருக்கேன். என்னைப் பொறுத்த வரைக்கும் திருவிழாக்கள்தான், உறவுகள் விழாதிருக்க உதவும்னு அழுத்தமா நம்புறேன். 'திருவிழா'வை திரு, விழான்னு ரெண்டு வார்த்தைகளா பிரிச்சு அதை முன் பின்னா மாத்திப் போட்டுப் பாருங்க. 'விழா திரு'ன்னுதானே வருது. அதே நேரம், ஒரு டாக்டரா பட்டாசு சத்தம் இதயத்துக்கு நல்லதில்ல, அதுல இருந்து வர்ற புகை நுரையீரலுக்கு நல்லதில்ல...'' என்றவரிடம், உங்களோட தலை தீபாவளி பற்றி சொல்லுங்களேன் என்றவுடன், வெடிச் சிரிப்புடன் பேச ஆரம்பித்தார்.
''என்னோட தலை தீபாவளி பத்தி சொல்றதுக்கு முன்னாடி என்னோட மனைவியைப்பத்தி சொல்லியே ஆகணும். அவங்க பேரு செந்தாமரை. அவங்களோட அப்பா காலஞ்சென்ற பேராசிரியர் க. அன்பழகன். பெற்றோர் பார்த்து செஞ்சு வெச்ச கல்யாணம் எங்களோடது. 1971 ஜூலை 17-ம் தேதி பெரியார் முன்னிலையில கலைஞரும் எம்.ஜி.ஆரும் எங்க திருமணத்தை நடத்தி வெச்சாங்க. எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே பேரறிஞர் அண்ணா மறைஞ்சிட்டார்.
எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். நான் ஒரு டாக்டர்ங்கிறதால, டாக்டர் பெண்ணை கல்யாணம் செஞ்சா குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்துக்க முடியாதுங்கிற எண்ணம் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இருந்துச்சு. ஆனா, காலம் என்னை பேராசிரியருக்கு மருமகனாக்குச்சு. அதுவும் டாக்டருக்கு படிச்ச பெண்ணையே திருமணம் செய்யுற மாதிரி ஆச்சு'' என்று சொல்லி சிரித்தவர்,
''என் இதயத்தோட ஆழத்துல இருந்து சொல்றேன். என் செந்தாமரை தான் பெஸ்ட் வொய்ஃப் இன் த வேர்ல்ட். அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா டாக்டர் சொக்கலிங்கத்தால இந்தளவுக்கு மன மகிழ்ச்சியா வேலையை பார்த்திருக்க முடியாது'' என்று நெகிழ்கிறார்.
''தலை தீபாவளி விஷயத்துல எனக்கும் நம்பிக்கை கிடையாது; என் மாமனாருக்கும் நம்பிக்கை கிடையாது. வீட்டுக்குப் போனோம். குடும்பமா மகிழ்ச்சியா இருந்தோம். அதுக்கு மேல என்ன வேணும்'' என்றவரிடம், 'அப்போ தலை தீபாவளி மோதிரம்' என்றோம். ''உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன்மா, எனக்கு புத்தி தெரிஞ்ச நாள்ல இருந்து நான் ஒரு கிராம் தங்கம்கூட அணிஞ்சதில்லை. வசதி இல்லாதப்போவும் சரி, வசதி வந்தப்பிறகும் சரி, நான் இப்படித்தான் இருக்கேன். இனிமே தங்கம் போட்டுக்கவும் மாட்டேன்'' என்று பேசி முடிக்க, செந்தாமரை சொக்கலிங்கம் பேச ஆரம்பித்தார்.
''எங்க குடும்பத்துல நான், எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கைனு மொத்தம் மூணு பசங்க. அப்பாவால எங்களுக்காக நேரம் செலவழிக்கிறது கஷ்டம்னாலும், எங்க மேல ரொம்ப பாசமா இருப்பார். வீடு முழுக்க அரசியல் பேச்சா இருந்தாலும், எங்க மூணு பேருக்குமே அது மேல ஈடுபாடு வரலை. சின்ன வயசுல பட்டாசுன்னு கேட்டா, 'நல்லதுக்கு செலவு செய்யணும்; ஏன் காசைக் கரியாக்கணும்'னு சொல்வாரு அப்பா. என் தம்பி பட்டாசு வெடிச்சே ஆகணும்னு அடம் பிடிப்பான். அதனால, எங்க மாமாதான் பட்டாசு வாங்கித் தருவாங்க. எங்கம்மா இறந்து ஒன்றரை வருஷத்துல எனக்கு கல்யாணம் நடந்துச்சு. அப்பாவோட எண்ணமும் இவரோட எண்ணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.
காலம்தான் எவ்ளோ வேகமா ஓடிப்போச்சு பாருங்க. பிள்ளைங்க வளர்ந்து திருமணமாகி, இப்போ பேரப்பசங்களே தோளுக்கு மேல வளர்ந்துட்டாங்க. எங்க பையன் ஆனந்த் சொக்கலிங்கமும் இதய நல நிபுணர்தான். மருமக ஸ்மிரிதா சிறுநீரகவியல் நிபுணர். ரெண்டு பேருமே அமெரிக்காவுல பேராசிரியரா இருக்காங்க. அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. பேரன் கவின் நியூயார்க்ல செயற்கை நுண்ணறிவு துறையில முக்கியமான பொசிஷன்ல இருக்கான். பேத்தி லயா, இப்போ தான் பத்தாவது படிச்சிட்டிருக்கா.
பொண்ணு பிரியா சொக்கலிங்கம், சென்னையில் இதய நல மருத்துவரா இருக்காங்க. மருமகன் கோபிநாத், நுண்ணறிவு துறையில பிசினஸ் பண்ணிட்டிருக்கார். பேத்தி காவ்யா 'இன்டர்நேஷனல் அஃபையர்ஸ்'ல மாஸ்டர் டிகிரி முடிச்சிட்டு அமெரிக்காவுலயே வேலைபார்த்திட்டிருக்கா'' என்ற மனைவியை இடைமறித்த டாக்டர் சொக்கலிங்கம், ''காவ்யா கிட்ட அவங்க பேராசிரியர் தாத்தாவோட இயல்புகள் நிறைய இருக்கு. சமூகத்தோட நன்மைகளுக்காக சிந்திக்கிற பொண்ணு. கொண்டாட்டங்களுக்கு செலவு பண்றதை தேவைப்படுறவங்களுக்கு கொடுக்கலாமேன்னு சொல்வா. மரபுவழியா என் மாமனார் பேராசிரியரோட இயல்பு என் பேத்திகிட்ட அப்படியே இருக்கு'' என்கிறார் பெருமிதமாக. கணவரின் வார்த்தைகளை, 'ஆமாம்' என்கிற புன்னகையுடன் வழிமொழிகிறார், பேராசிரியரின் மகளும் டாக்டர் சொக்கலிங்கத்தின் வாழ்க்கை இணையருமான செந்தாமரை.!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41