Elon Musk : அதிபராகும் ட்ரம்ப்; நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்த எலான் மஸ்க்கின் திருநங்கை மகள்!
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார், பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க்.
இந்த நிலையில், எலான் மஸ்கின் திருநங்கை மகள் விவியன், தான் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் 12 குழந்தைகளில் ஒருவரான விவியன், 2004 ஆம் ஆண்டு இரட்டை சகோதரர்களாக பிறந்தனர். இவரது தாயார் ஜஸ்டின் வில்சன் 2008 ஆம் ஆண்டு எலான் மஸ்க் உடன் விவாகரத்து செய்து கொண்டார். தற்பொழுது 20 வயதாகும் விவியன் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது தந்தை எலான் மஸ்கின் பெயரை தனது பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டார். இனி தனது தந்தையுடன் வாழ்வதாக இல்லை என்பதை தெரிவித்து வெளியேறினார். அதனால் இனிமேல் தனது பெயருடன் தனது தந்தை பெயரை பயன்படுத்த போவதில்லை என கூறி, சட்டபூர்வமாக தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக்கொண்டார்.
எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு தேர்தலில் வெளிப்படையாக ஆதரவு அளித்ததுடன், பரப்புரை மேற்கொண்டதையும் கடுமையாக விமர்சித்து வந்தார் விவியன். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், “என் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்பதை உணர்கிறேன். இதைப் பற்றி சிறிது நேரம் நினைத்துக் கொண்டிருந்தேன், தற்போது தான் உணர்ந்தேன். இனி என் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்பதை உணர்ந்து வெளியேறப் போகிறேன்” என மெட்டாவின் திரெட்ஸ் செயலியில் தெரிவித்துள்ளார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள எலான் மஸ்க், “என் குழந்தை ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அல்லது இப்படி சொல்வதற்கு எல்லாம் முழு முதல் காரணம் என் மேல் உள்ள வெறுப்புதான்” என தெரிவித்துள்ளார்.