7 அதிகாரிகள், 2 மணி நேரம், 50 கேள்விகள்... மைசூரு நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் விசாரணை!
.கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வரும் சித்தராமையா, மைசூரு அருகில் உள்ள சித்தராமயனஹுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை 'மூடா' எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கைப்பற்றியது. அதற்கு ஈடாக மற்றொரு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பை விட பலமடங்கு கூடுதல் மதிப்புள்ள நிலத்தை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அம்மாநில கவர்னர் ஒப்புதலுடன் முதல்வர் சித்தராமையா மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவரின் மனைவி, சகோதரர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 மாதத்திற்குள் வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சித்தராமையா மனைவி பார்வதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சித்தராமையாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. 7 அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவினர், சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறார்.
விசாரணைக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் சித்தராமையா, "அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உண்மையான பதிலை அளித்திருக்கிறேன். என்மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்" என தெரிவித்துச் சென்றார்.
முதல்வர் சித்தராமையாவை பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க- வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.