மகாராஷ்டிரா தேர்தல்: "பிரதமரின் பொதுக்கூட்டப் பிரசாரம் எனக்குத் தேவையில்லை" - அஜித்பவார் சொல்வதென்ன?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. மும்பையில் உள்ள மான்கூர்டு தொகுதியில் துணை முதல்வர் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கை நிறுத்தி இருக்கிறது.
நவாப் மாலிக்கிற்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டோம் என்று அஜித்பவாரின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க அறிவித்துள்ளது. இதையடுத்து மான்கூர்டு தொகுதியிலும் நவாப் மாலிக்கின் மகள் போட்டியிடும் அனுசக்தி நகர் தொகுதியிலும் அஜித்பவாரே தீவிர பிரசாரம் செய்தார். மான்கூர்டு தொகுதியில் அஜித்பவாரின் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே)வும் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. தனது சொந்த ஊரான பாராமதியில் போட்டியிடுகிறார் அஜித்பவார். பாராமதியில் அஜித்பவாரின் சகோதரர் மகனும் போட்டியிடுகிறார்.
இதனால் இத்தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. எனவே பிரதமர் நரேந்திர மோடியைப் பாராமதிக்கு அழைத்து வர அஜித்பவார் திட்டமிட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து அஜித்பவார் கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் மஹாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டம் பாராமதிக்குத் தேவையில்லை. பிரதமரின் பொதுக்கூட்டங்கள் மற்ற தொகுதிகளுக்குத்தான் தேவை. எதிர்க்கட்சிக் கூட்டணி எங்களைப் பார்த்து போட்டியாகப் பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்'' என்றார்.
பா.ஜ.க கூட்டணி அரசின் லட்கி பெஹ்ன் யோஜனா திட்டத்தை எதிர்க்கட்சிகள் எடுத்துக்கொண்டதாக அஜித்பவார் கூறிய குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, ''ஆளும் கூட்டணி அரசின் லட்கி பெஹ்ன் யோஜனா திட்டத்திற்குப் போட்டியாக நாங்கள் எதையும் அறிவிக்கவில்லை. ஆயில், உணவுப்பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துவிட்டது. தீபாவளி விற்பனை கூட சரிந்துவிட்டது. எனவேதான் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தோம். காங்கிரஸ் கட்சிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்தவித பிரச்னையும் இல்லை. நாங்கள் 24 ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம்''என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs