மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
Goa: 60% சரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை; தடுமாறும் பொருளாதாரம் - ஏன் இந்த நிலை?
கோவா நம் இளைஞர்களின் கனவு சுற்றுலாத்தளங்களில் ஒன்று. இதற்கு இங்கு நிலவும் இயற்கை காட்சிகளோடு, அங்கு குவியும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஒரு காரணம். இந்நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோவா வரும் வெளிநாட்டவர்கள் வருகை பெருமளவில் குறைந்திருக்கிறது என்கிறார்கள்.
பெருந்தொற்றுக்குப் பிறகு இருந்தே கோவா சுற்றுலாப்பயணிகள் வருகையில் சரிவை சந்தித்து வருகிறது. கோவா அரசாங்கத்தின் முயற்சியில் உள் நாட்டு பயணிகள் வருகை சீரானாலும் வெளிநாடு சுற்றுலாப்பயணிகள் வருகை முன்புபோலில்லை. இது கோவாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.
சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. போக்குவரத்து, பாதுகாப்பு, செலவீனம், உள்கட்டமைப்பு பிரச்னைகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் வெளிநாட்டவர்கள் வருகையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. இதனால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நம்பியிருந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டு 9.4 லட்சமாக இருந்த வெளிநாட்டவர்கள் வருகை 2023-ல் 4.3 லட்சமாக குறைந்துள்ளது. இப்படி மிகச் சில ஆண்டுகளிலேயே 60% சுற்றுலாப்பயணிகள் குறைந்துள்ளனர்.
கோவா சுற்றுலாப்பயணிகள் வருகையை குறைத்த காரணிகள் குறித்துப் பார்க்கலாம்.
டாக்ஸி ஓட்டுநர்களின் செயல்கள்:
கோவா டாக்ஸி மாஃபியா... ஒரு குறிப்பிட்ட குழு மாநிலம் முழுவதும் இருந்த டாக்ஸிகளை கைக்குள் வைத்திருந்தது. இதனால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் வெகுவாக சுரண்டப்பட்டனர்.
அரசு அறிவுறுத்திய கட்டண விதிகளைப் பின்பற்ற டாக்ஸிகள் முன்வரவில்லை. இது சுற்றுலாப்பயணிகள் விரும்பத்தகாத ஒன்றாக அமைந்தது. பலரும் தாம் சுரண்டப்பட்டதாக உணர்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் அதிகம் பணம் செலவு செய்ய தயங்குவதில்லை என்றாலும் யாரும் தாம் சுரண்டப்பட்டதாக உணர விரும்புவதில்லைதானே.
டாக்ஸி ஓட்டுநர்களிடம் பேரம்பேச முயன்ற போது சில சுற்றுலாப்பயணிகள் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அதிக பணம் தராதவர்களுக்கு ஒட்டுமொத்தமாக அனைத்து டாக்ஸி ஓட்டுநர்களும் மறுப்பு தெரிவித்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
இந்தியாவின் பல சுற்றுலாத்தளங்களில் ஊபர், ஓலா போன்ற செயலி மூலம் இயங்கும் டாக்ஸிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இது இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
குறைவான பொதுப்போக்குவரத்துகள், வாடகை கார்கள் பற்றாக்குறை மற்றும் அதிக கட்டணம், டாக்ஸிகளுக்கு மாற்று இல்லாதது சுற்றுலாப்பயணிகளை அவதிக்கு உட்படுத்துகிறது.
டாக்ஸி ஓட்டுநர்களின் நடத்தை, டூரிஸ்ட் ஃப்ரெண்லியாக இருந்த கோவா மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது என்கிறது ஒரு தரப்பு. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டது கோவா பற்றிய மோசமான பார்வையை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் விதைத்திருக்கிறது.
கோவா வர திட்டமிடும் பயணிகள் அதற்கு மாற்றாக வெவ்வேறு தளங்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். கோவாவில் சுற்றுலாப்பயணிகள் வருகையை மீட்க, டிஜிட்டல் முறையில் டாக்ஸி புக் செய்யும் முறையை பரவலாக்க வேண்டும் என்று சுற்றுலாவை நம்பியிருக்கும் பிற தொழில்களை செய்பவர்கள் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அரசியல் காரணிகள்
கோவாவில் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்ததில் அரசியல் காரணங்காளும் உள்ளன. உக்ரைன் - ரஷ்யா போர், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கூட இதில் பங்கு வகிக்கின்றது.
உதாரணமாக பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு ஒரு நாளுக்கு ரஷ்யாவிலிருந்து 5 சார்டர் விமானங்கள் (முழு விமானத்தையும் வாடகைக்கு எடுத்து வரும் சுற்றுலாப்பயண குழுக்கள்) வந்தன. இப்போது இந்த எண்ணிக்கை ஒரு வாரத்துக்கே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறது என்கிறது தி கோவான் எவிரிடே தளம்.
இதேப்போல இஸ்ரேலில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை பெருமளவில் குறைந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து பயணிப்பவர்களுக்கு இந்தியா இ-விசா வழங்க தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இது ஐரோப்பிய பயணிகள் வருகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உள்ளூர் பயணிகள் வந்தாலும்...
இப்போதைக்கு உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான் நாடுகளில் இருந்தே சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தவிர இந்திய பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது.
பெரும்பாலான இந்தியப் பயணிகள் சில நாட்களிலேயே அங்கிருந்து கிளம்பிவிடுவது வழக்கம். ஆனால் வெளிநாட்டு பயணிகளோ நீண்ட காலம் தங்கியிருப்பர். மேலும் இந்தியப் பயணிகள் வெளிநாட்டவர்களைப் போல ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதோ, அதிகம் செலவளிப்பதோ கிடையாது. உள்நாட்டு பயணிகள் ஆறுதல் அளித்தாலும் கோவாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க முடியாது என்கிறார்கள்.
அரசு நடவடிக்கை வேண்டும்!
இந்த விவாகரத்தில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்படும் துறைகளைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். விசா செலவீனத்தைக் குறைத்தல், எளிதாக விசா வழங்குதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
சர்வதேச சுற்றுலா செல்பவர்கள் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய இடங்களை விடுத்து கோவாவைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் அந்த நாடுகளுடன் போட்டிப்போடும் அளவு சுற்றுலாவை எளிமையாகவும், தரமானதாகவும் மாற்ற வேண்டும் என்கின்றனர்.
கடற்கரையில் வசதிகளை அதிகரித்தல், பரவலான பொதுப்போக்குவரத்தை உருவாக்குதல், வசதியான உட்கட்டமைப்பை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், அரசியல் பிரச்னைகள் முடியும் போது சர்வதேச சுற்றுலாப்பயணிகள் கோவாவை முதன்மை சுற்றுலாத் தேர்வாக கொண்டிருப்பர்.
நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே கோவா சீசன். இந்த சீசனில் கடந்த ஆண்டை விட சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பர் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் கோவாவில் தொழில் செய்பவர்கள். அதற்கான நடவடிக்கை அரசும் மேகொள்ள கோரிக்கை வைத்திருக்கின்றனர்.