செய்திகள் :

சூழல் சுற்றுலாவுக்கு இயற்கை அளித்த கொடை `பிச்சை மூப்பன் வலசை'... என்ன சிறப்பு.. எப்படி செல்வது?

post image

பிச்சை மூப்பன் வலசை

ஆர்ப்பரிக்கும் நுரையுடன் அலையடிக்கும் கடலும், ரவையை கொட்டி வைத்தது போன்ற கடற்கரை மணலும் என்றாலே நம்ம ஊர்காரர்களுக்கு அந்தமான், கோவா, லடசத்தீவு, கேரளா, அந்தமான்தான் ஞாபகத்துக்கு வரும்.

வரவேற்பு

அதையும் கடந்து, தமிழக அளவில் கடற்கரை என்றாலே சென்னை மெரீனா, கோவளம், மாமல்லபுரம், கடலூர், தொண்டி, அரியமான், ராமேஸ்வரம், தனூஷ்கோடி, கன்னியாகுமரியும் அதையும் தாண்டி புதுச்சேரியும், காரைக்காலும்தான் நினைவுக்கு வரும். ஆனால், நமக்கு அருகிலேயே இயற்கை அளித்த அம்சங்கள் மாறமல் இருக்கும் அழகிய கடற்கரைகளைத் தேடி வெளியூர்காரர்கள் வரும்போதுதான் அதன் அருமை பெருமை நமக்கே தெரிகிறது. அப்படியொரு அழகிய கடற்கரைதான் பிச்சை மூப்பன் வலசை!

மன்னார் வளைகுடா பகுதியில் ஏர்வாடிக்கு அருகே அமைந்துள்ள இந்த கடற்கரை  இயற்கை அழகு மாறாமல் அரிய கடல் உயிரினங்களும், கடல் தாவாரங்களும், பல வகையான பவளப்பாறைகள் என இயற்கை அள்ளிக் கொடுத்த பொக்கிஷங்கள் அழியாமல் காட்சியளிக்கிறது பிச்சை மூப்பன் வலசை கடற்கரை!

 தமிழகத்தில் 13 கடற்கரை மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அதிசயங்கள், அற்புதங்கள் அதிகம் கொண்ட தமிழ் சமூகத்தின் தொன்மை வரலாறு சொல்லும் கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் திகழ்கிறது.

கண்ணாடிப்படகு பயணம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே ராமேஸ்வரம், தனுஷ்கோடி, குந்துகால், பாம்பன், மண்டபம், அரியமான், வாலிநோக்கம், தொண்டி என கடற்கரையைக் கொண்ட ஊர்கள் இருந்தாலும், சூழல் கெடாத, அரிய மீன் இனங்கள், பவளப் பாறைகள் அழியாமல் உள்ள பிச்சை மூப்பன் வலசை கடற்கரைப் பகுதியை வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்தினருடன் சேர்ந்து சூழல் சுற்றுலாத் தலமாக உருவாக்கி மக்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்கள்.

உலகில் 738 உயிர்கோள காப்பகங்கள் உள்ளன. அதில்,  இந்தியாவில் உள்ள 18-ல்,  முக்கியமானது மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம். ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியில் உள்ள அரிய உயிரினங்களையும், இயற்கை பேரிடரிலிருந்து கடலோரப் பகுதியை காப்பாற்றுகின்ற பவளப்பாறைகளை பாதுக்காக்கவும் மன்னார் வளைகுடா பகுதி பாதுக்காக்க்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறை மற்றும் மீன்வளத்துறையால் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகிறது.

வந்திருந்த மக்கள்

நாட்டின் முதல் கடல் தேசிய பூங்கா

பாம்பனுக்கும் தூத்துக்குடிக்கும் இடையே உள்ள 18 தீவுகளுடன் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மன்னார் வளைகுடாப் பகுதியில் 3600 அரிய கடல்வாழ் உயிரினங்களும், 117 வகையான பவளப்பாறைகள், கடல் பாசிகள், 217 வகை கடல் பறவைகள் உள்ளதால் நாட்டின் முதல் கடல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 
அதைத் தொடர்ந்து மீனவ மக்களின் பங்களிப்புடன் கடற்கரைப்பகுதிகளை மேம்படுத்தவும், அதன் மூலம் மக்களை ஈர்த்து மன்னார் வளைகுடாவின் ஆச்சரியங்களை வெளிப்படுத்தும் கடந்த சில ஆண்டுகளாக பல திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. அப்படி சில ஆண்டுகளுக்கு முன் பிச்சைமூப்பன் வலசை, சூழல் சுற்றுலா தலமாக உருவாக்கபட்டது.

எப்படி செல்வது?

மதுரையிலிருந்து  சாலைமார்க்கமாக செல்பவர்கள் பரமக்குடி தாண்டியதும் உத்தரகோசமங்கை விலக்கு சாலை வழியாக ஏர்வாடி சென்று அங்கிருந்து பிச்சை மூப்பன் வலசைக்கு செல்லலாம். ராமேஸ்வரத்திலிருந்து  ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி வழியாகவும்ம், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்திலிருந்து வருபவர்கள் தூத்துக்குடி, சாயல்குடி வழியாகவும் இங்கு வரலாம்.
ஏர்வாடியிலிருந்து தென்னந்தோப்புகளை கடந்து பிச்சை மூப்பன் வலசையை நெருங்கத் தொடங்கியதுமே ஜிலு ஜிலுவென முகத்தை உரசும் உப்புக்காற்று உற்சாகத்தை கொடுக்கத் தொடங்கிவிடும்.

பிச்சைமூப்பன் வலசை

தூரத்தில் குட்டி குட்டியாக சில தீவுகள் தெரிய பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது நீலக்கடல். காற்று வேகமாக வீச, ஆர்வத்துடன் அலைகள் கரையை தொட்டுச்செல்கிறது. கரையில் அமர்ந்தபடி கடலையும், அலையையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். மரிக்கொழுந்து பாசிகளும், சிப்பிகளும் கரையில் ஒதுங்கி பல கதைகளை சொல்கிறது. சற்று தள்ளி, மீன்பிடிக்க செல்லும் சிறிய வள்ளங்கள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருக்கும் 'மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை'யின் படகுத்துறை நம்மை வரவேற்கிறது. கண்ணாடி அடித்தளம் கொண்ட படகில் சென்று கடலுக்கு கீழேயுள்ள அற்புதங்களை கண்டுவர வனத்துறையினரால் 200 ரூபாய் கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தில் ஏறி 12 பேர் மட்டும் செல்கின்ற படகில் ஏற வேண்டும்.

பிச்சைமூப்பன் வலசை

கடலுக்குள் ஆங்காங்கு அமைந்துள்ள மணல் திட்டுகள் அனவரையும் ஈர்க்கிறது. பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ள பவளப்பாறைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பவளப்பாறைக்குள் விதம் விதமான மீன்கள் துள்ளி விளையாடுகிறது. அது மட்டுமின்றி நீந்திச்செல்லும் சிப்பிகள், கடல் அட்டை, கடல் குதிரைகள், முத்து சிப்பிகள், பலவகையான சங்குகளும் படகுக்கு கீழே கண்ணாடி வழியாக பார்க்க முடிகிறது.

பவளப்பாறைகளின் சொர்க்கம்...

மன்னார் வளைகுடாப்பகுதியின் சிறப்பம்சமே பவளப்பாறைகள்தான். அதிலும்  இந்த பகுதிதான் பவளப்பாறைகளின் சொர்க்கம் என்று கடல் ஆய்வாளர்களாலும், சூழலியலாளர்களாலும் சொல்லப்படுகிறது. சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் கடலோர நிலப்பகுதியை தாக்கி விடாமல் பவளப்பாறைகளே பாதுகாத்து வருகின்றன. அதனால்தான் கடந்த சுனாமி பேரிடரின்போது ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்கள் தப்பியது. அரியவகை மீன்களை, கடல் தாவாரங்களை காப்பாற்றியும், மீன் இனப்பெருக்கத்திற்கும் பவளப்பாறைகளே பேருதவி புரிகின்றன. அதனால்தான் இங்கு கடல்பசுக்கள் நிம்மதியாக இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. அவ்வப்போது டால்பின்கள் வந்து கடலுக்கு மேலே துள்ளி குதித்துவிட்டு செல்லும். அருகில் மாரியூரிலுள்ள புரதானக்  கோயிலான பூவேந்திநாதர் கோயிலில் அம்மனின் பெயர் பவளநிறவள்ளியம்மன் என்று வணங்கப்படுகிறது, இதன் மூலம் பவளப்பாறைகளுக்கும் இப்பகுதிக்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்ளலாம்" என்றார் அப்பகுதி மீனவர்.

பிச்சைமூப்பன் வலசை

படகுப்பயணத்தின்போது சுற்றுலாப்பயணிகளுக்கு கடல் பற்றிய விளக்கங்கள் பவளப்பாறைகளின் பயன்கள், கடற்கரையை மாசுபடுத்தாமல் பாதுகாக்கவேண்டிய அவசியம் குறித்தும் வனத்துறையினர் எடுத்துக் கூறினார்கள். கடலில் சில கிலோமீட்டர் தூரம் சுற்றி காட்டிவிட்டு கரையில் இறக்கி விடுகிறார்கள்.
வந்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த குடும்பத்தினரிடம் பேசினோம், "எந்தெந்த ஊருக்கோ டூர் போயிருக்கோம், ஆனால், நம்ம மாவட்டத்துல இருக்கிற இந்த பீச்சை பத்தி இவ்வளவு நாள் தெரியாமல் போச்சேன்னு வருத்தமா இருக்கு. வெளியூர்காரங்க யூ டியூப்ல சொன்னப்பத்தான் தெரிஞ்சது. ராமேஸ்வரம், அரியமான் கடற்கரைக்கு போயிருக்கோம். இது அதைவிட இந்த பீச் சூப்பரா இருக்கு" என்றனர்.

ப்ரெஷ்ஷான மீன் சாப்பாடு..

இந்த பீச்சுக்கு அருகில் வசிக்கும் மீனவர்களிடம் முன் கூட்டியே சொல்லிச் சென்றால் ப்ரெஷ்ஷான மீன் உணவுகளுடன் சாப்பாடு தயார் செய்து தருகிறார்கள். உள்ளூர் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ் கடையும் உள்ளது. சிறார்கள் விளையாட பூங்கா ஒன்றும் உள்ளது.

கடலுக்குள் தெரியும் அற்புதம்

படகு சவாரி..

பிச்சை மூப்பன் வலசைக்கு காலையில் சென்றுவிட்டு மாலையில் திரும்பி விடலாம். டூ வீலர், ஆட்டோ, கார் மற்றும் நகரப் பேருந்துகளில் செல்லலாம். காற்று அதிகமாகி அலைகள் உரத்து அடித்தால் படகு சவாரி நிறுத்தப்படும் என்பதால் படகு சவாரி செல்ல நினைப்பவர்கள் 78457 01568 என்ற எண்ணில் பேசி கன்பார்ம் செய்துவிட்டு செல்லலாம். இங்கு  சென்றுவிட்டு  வருகிற வழியில் ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்கள் ஏர்வாடி தர்ஹாவுக்கும், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி கோயிலுக்கும் சென்றுவிட்டு வரலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Goa: 60% சரிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை; தடுமாறும் பொருளாதாரம் - ஏன் இந்த நிலை?

கோவா நம் இளைஞர்களின் கனவு சுற்றுலாத்தளங்களில் ஒன்று. இதற்கு இங்கு நிலவும் இயற்கை காட்சிகளோடு, அங்கு குவியும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஒரு காரணம். இந்நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட... மேலும் பார்க்க

Short Trip: 'ஆனைகட்டி, குற்றாலம், பர்வதமலை...' - தீபாவளிக்கு போகலாமா ஒரு ஜாலி டிரிப்!

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, தீபாவளின்னா பட்டாசு, பலகாரம், புதுப்படம்னு ஒரே கொண்டாட்டமா இருக்கும். ஆனா, இப்போ நம்ம தீபாவளி கொண்டாட்டம் வாட்ஸ் ஆப் வாழ்த்துக்கள், பேஸ்புக் போஸ்ட், இன்ஸ்டாகிராம் ஸ்க்ரால்... மேலும் பார்க்க