அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை!
Gold Rate: தங்கம் விலை 18 நாள்களில் பவுனுக்கு ரூ.4,080 குறைவு! - காரணம் என்ன... இன்னும் குறையுமா?
கடந்த 18 நாள்களில், தங்கம் விலை பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.4,080 இறங்கி உள்ளது.
ஆயுத பூஜையையொட்டி குறைந்திருந்த தங்கம் விலை, தீபாவளிக்கும் சற்று குறைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்த மக்களுக்கு தங்கம் விலை அதிர்ச்சையைத்தான் தந்தது. ஆம்...தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அதாவது கடந்த அக்டோபர் 29-ம் தேதி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,375-க்கும், பவுனுக்கு ரூ.59,000-க்கும் விற்று தங்கம் விற்பனை வரலாற்றிலேயே புதிய உச்சத்தை தொட்டிருந்தது.
தீபாவளி அன்று இன்னும் விலை உயர்ந்து கிராமுக்கு ரூ.7,455-க்கும், பவுனுக்கு ரூ.59,640-க்கும் விற்று அப்போதும் புதிய உச்சத்தை தொட்டிருந்தது. ஆனால், தீபாவளிக்கு பிறகு, தங்கம் விலை இறங்குமுகத்தை கண்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 4-ம் தேதி நடந்து, முடிவுகள் 6-ம் தேதி வெளியானது. ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானதும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பங்குகள் பக்கம் திருப்பினர். இதையொட்டி, அடுத்த நாள் (நவம்பர் 7-ம் தேதி), தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை ஆனது. பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.55,500-ஐ தொட்டுள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,935-க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55,480-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55,560-க்கும் விற்பனை ஆகி வருகிறது. ஆக, தங்கம் விலை கடந்த 18 நாள்களில் ரூ.4,080 குறைந்துள்ளது.
தங்கம் விலை குறைவிற்கு முக்கிய காரணமாக ட்ரம்ப் அதிபரானது கூறப்படுகிறது. எப்போதும் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகமாகும்போது, தங்கம் விலை குறையும். ட்ரம்பின் வெற்றிக்கு பிறகு, டாலர் மதிப்பு கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு, பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ளது. மேலும், ட்ரம்ப் கூறியுள்ள வரி சலுகைகள், குடியேற்ற சட்டம் ஆகியவை அமலாகும்போது, அமெரிக்க பொருளாதாரம் இன்னும் வலுவடையும். அதன் விளைவாக, தங்கம் விலை இன்னும் குறையலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.