H Raja: அவதூறு வழக்கில் ஹெச். ராஜா-வுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
பா.ஜ.க-வின் தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா 2018-ம் ஆண்டு `பெரியார் சிலையை உடைப்பேன்' எனத் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதே ஆண்டு தி.மு.க எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாக ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க சிறப்பு நிதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில், ``இந்த இரண்டு வழக்குகளிலும், ஹெச்.ராஜா குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வழக்குக்கும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.