யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!
சரிவிகித உணவு என்பது மனித உடலுக்குத் தேவையான அனைத்து அடிப்படைச் சத்துக்களையும் கொடுப்பதாகும்.
சரிவிகித உணவு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால் வரும் விளைவுகள் குறித்தும் உணவியல் நிபுணர் விஜயாஸ்ரீ நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார்.

நமது உடலுக்கு இரண்டு அடிப்படைச் சத்துக்கள் மிக முக்கியமாக தேவை. அவை மேக்ரோ சத்துக்கள் மற்றும் மைக்ரோ சத்துக்கள்.
மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து இவை மூன்றும் மேக்ரோ சத்துக்கள். இவைதான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன. அதனால்தான் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் (மினரல்ஸ்) மைக்ரோ சத்துக்கள் ஆகும். இவை மில்லிகிராம் அளவில் மட்டுமே நமது உடலுக்குத் தேவைப்படுகிறது.
மாவுச்சத்து:
இதன் முக்கிய பணி நமது உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பது.
புரதச்சத்து:
தசை வளர்ச்சிக்கும் உடலுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்தப் புரதச்சத்து மிக முக்கியம்.
அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு, செல்களில் ஏற்படும் சேதத்தைச் சரி செய்ய மற்றும் காயங்களை உடனடியாகக் குணப்படுத்த எனப் புரதச்சத்தின் தேவை நம் உடலுக்கு மிக அதிகம்.
கொழுப்புச்சத்து:
இது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. அதோடு, இதில்தான் வைட்டமின் A, K, E, D போன்ற கொழுப்பில் கரையும் வைட்டமின்களும் உள்ளன.
உதாரணமாக, கொழுப்பு மிகுந்த உணவான பாலில்தான் வைட்டமின் 'கே' மற்றும் வைட்டமின் 'ஏ' உள்ளன.
உடல் எடை குறைப்பவர்கள், அரிசி மற்றும் கோதுமையைத் தவிர்த்துப் புரதச்சத்து மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது டிரெண்டாக மாறிவிட்டது. அப்படி எடுத்துக்கொள்ளும்போது தானியங்களில் இருக்கும் நிறைய நல்ல சத்துக்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது.
கண் பார்வை, நாக்கில் சுவையை உணர்வது, எலும்பு உருவாக்கத்தில் கால்சியம் மற்றும் ஹீமோகுளோபினுக்கு இரும்புச்சத்து வழங்குவது எனப் பல முக்கிய வேலைகளை இந்த மைக்ரோ சத்துக்கள் எனப்படும் வைட்டமின்களும் தாது உப்புகளும் செய்து வருகின்றன.
இந்த ஐந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே சரிவிகித உணவு ஆகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR) ஒரு சாதாரண உடல் எடை மற்றும் உயரம் கொண்ட இந்திய ஆண் 2400 கலோரிகளும், இந்தியப் பெண் 1900 கலோரிகளும் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த கலோரிகளில் 50 முதல் 60 சதவிகிதமானது மாவுச்சத்தில் இருந்து வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மீதம் உள்ள 40 சதவிகிதத்தில் 10 முதல் 15 சதவிகிதம் புரதச்சத்தும் 20 முதல் 30 சதவிகிதம் கொழுப்பில் இருந்தும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதோடு சேர்ந்து வைட்டமின்களும் தாது உப்புகளும் கிடைக்க காய்கறி, பழங்களுக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒருநாள் மதிய உணவாக தயிர் சாதம் மற்றும் ஊறுகாய் எடுத்துக்கொள்ளும்போது, அதில் சில வைட்டமின்களும் தாது உப்புகளும் கிடைக்காது.
ஏனென்றால் அதில் காய்கறிகள் இல்லை, புரதச்சத்து மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. இதனால், நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்த அளவே போய்ச் சேரும். அதனால், தயிர் சாதமும் ஊறுகாயும் சரிவிகித உணவு அல்ல.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், காலை அல்லது மதிய உணவு இரண்டில் எதுவானாலும் அதை மூன்று பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
அதன் முதல் பகுதியில் அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள் இடம்பெற வேண்டும்.
அது சாதம், இட்லி, சப்பாத்தி அல்லது தோசை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இரண்டாவது பகுதியில் பருப்பு, பயிறு மற்றும் முட்டை போன்ற புரதச்சத்து மிக்க உணவு வகையாக இருக்க வேண்டும்.

மூன்றாவது பகுதியில் நிறைய காய்கறிகள் இருக்க வேண்டும். இந்த மூன்று பகுதிகள் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளும்போதுதான் நமது உடலுக்குத் தேவையான அனைத்துவிதமான சத்துக்களும் கிடைக்கும்.
இதில் ஒருவேளை பருப்பை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்தையும் சாப்பிடும்போது நமக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்காது.
இதேபோல் காய்கறிகளைத் தவிர்க்கும்போது வைட்டமின்களும் நார்ச்சத்துக்களும் தாது உப்புகளும் கிடைக்காது.
இப்போது இருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், புதிதாக என்ன உணவு டிரெண்டிங்கில் இருக்கிறதோ அதைச் சாப்பிட வேண்டும், ஒரு வீடியோ பார்க்கிறோமா அதைச் சாப்பிட வேண்டும் என்று கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளைத்தான் அதிகமாக உட்கொள்கிறார்கள்.
அப்படி கொழுப்பு அதிகம் இருக்கும் உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது முதலில் உடல் எடை அதிகமாகும்.
அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பெண்களுக்கு பி.சி.ஓ.எஸ் போன்ற பிரச்னைகள் ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது.

சரியாகத் தூக்கம் இல்லாமல் இருப்பது, தூங்கும்போது குறட்டை விடுவது எனப் பல லைஃப் ஸ்டைல் பிரச்னைகளுக்குக்கூட சரிவிகித உணவு சாப்பிடாததே காரணம் எனலாம்.
தற்போது சிறுநீரகப் பிரச்னை குழந்தைகளுக்குக் கூட வர ஆரம்பித்துவிட்டது. காரணம் ஃபாஸ்ட் ஃபுட். பழையபடி சரிவிகித உணவு முறைக்கு மாறி சத்தான உணவுகளைச் சாப்பிடுவது மட்டுமே நம்முடைய ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்'' என்கிறார் உணவியல் நிபுணர் விஜயாஸ்ரீ.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs