Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்...
Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?
உயர் கல்வி, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி, ஆன்சைட் என இந்தக் காலப் பெண்கள் தங்கள் கரியர் மீது மிகுந்த காதலுடன் இருக்கிறார்கள்.
அதே காலகட்டத்தில் திருமணம், குழந்தை எனத் திட்டமிட்டால் அது தங்கள் கரியரில் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று 'லேட் மேரேஜ்' செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒருவேளை சீக்கிரமே திருமணம் செய்துகொண்டாலும் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்கள் அளவில் இந்த விஷயங்கள் மிகச்சரியே என்றாலும், அவர்கள் ஆசைப்படும் நேரத்தில் குழந்தை பெறுவதில் பிரச்னை ஏற்படலாம்.
இதுபற்றி விளக்கமாகப் பேசவிருக்கிறார் திருச்சி காவேரி மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் கருவியல் துறையில் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் எஸ். திவ்யா.

''பெண்களின் வயதுக்கும் கருவுறுதலுக்கு நிறையத் தொடர்பிருக்கிறது. தாயின் கருவில் ஒரு பெண் குழந்தை உருவாகும்போது, அதன் 20-வது வாரத்தில் 5 மில்லியன் முதல் 7 மில்லியன் கருமுட்டைகள் அந்த சிசுவின் சினைப்பைகளில் உருவாகியிருக்கும்.
அதே நேரம், உருவான நேரத்திலிருந்தே கருமுட்டையின் எண்ணிக்கை குறைவதும் ஆரம்பித்து விடும். அந்தப் பெண் குழந்தை பிறக்கும்போது ஒன்று முதல் இரண்டு மில்லியன் கருமுட்டைகளாகக் குறைந்துவிடும்.
வயதுக்கு வரும்போது 3 முதல் 5 லட்சம் கருமுட்டைகளாகக் குறையும். 35 வயதுக்கு மேல், 30 முதல் 35 ஆயிரம் கருமுட்டைகள் வரைதான் இருக்கும். இதுவே 40 வயதில் ஜஸ்ட் 1000 கருமுட்டைகள் வரைதான் இருக்கும்.
ஒரு பெண் குழந்தை பெரியவள் ஆனதிலிருந்து மெனோபாஸை எட்டும் வரைக்குமான வயதை 'இனப்பெருக்க காலம்' என்று குறிப்பிடுவோம்.
இந்தக் காலகட்டத்தில் மாதத்துக்கு ஒன்று என 400 கருமுட்டைகள் மட்டுமே சினைப்பைகளில் இருந்து முதிர்ச்சி அடைந்து வெளிப்படும்.

பொதுவாக வயது ஆக ஆகத்தான் பெண்களுக்குக் கருமுட்டையின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.
ஒரு சிலருக்கோ 40 வயதுகளில் நிகழ வேண்டிய கருமுட்டை எண்ணிக்கை குறைதல், 20 வயதுகளின் ஆரம்பத்திலேயோ அல்லது இறுதியிலேயோ கூட நிகழ ஆரம்பிக்கலாம்.
மரபு காரணமாகவோ, எண்டோ மெட்ரியோசிஸ் எனப்படுகிற கருப்பையின் உள்சுவரில் உள்ள திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளரும்போதோ இப்படி நிகழும்.
அதனால், இவற்றையெல்லாம் மனதில் வைத்துத்தான் திருமண வயதையும், கருத்தரிக்க வேண்டிய வயதையும் பெண்கள் தீர்மானிக்க வேண்டும்.
20-களின் மத்தியில்தான் கருவுறுதலின் உச்ச நிலை பெண்களுக்கு இருக்கும். இதுவே 30 வயதைக் கடக்கையில், இதுவும் குறைய ஆரம்பிக்கும்.
இது இயல்பான ஒன்றுதான். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர், அதைச் செயல்படுத்த 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் முயற்சி செய்யலாம்.
இந்த வயதுக்கு மேல், குழந்தையின்மை பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் மெள்ள மெள்ள அதிகரிக்க ஆரம்பிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தாமதமாகத் திருமணம் செய்துகொள்வது, 35 வயதுக்கு மேல் குழந்தை பெற முயல்வது இரண்டுமே குழந்தையின்மைக்குக் காரணமாகலாம்.
இன்னும் சில தம்பதியர், குழந்தை பிறப்பதற்கான அத்தனை உடல் தகுதிகளுடனும் இருப்பார்கள். ரத்தப் பரிசோதனைகளில் ஆரம்பித்து விந்தணு எண்ணிக்கை வரைக்கும் நார்மலாக இருக்கும். ஆனால், கருத்தரிப்பு நிகழாது.
சில பெண்களுக்குக் கருமுட்டை முதிர்ச்சி அடைவதில் பிரச்னை இருக்கும். சிலருக்கோ முதிர்ச்சி அடைந்த கருமுட்டை, கருப்பைக்கு வந்து சேர்வதற்கான கருக்குழாயில் அடைப்பு இருந்து குழந்தையின்மையை ஏற்படுத்தும்.

குழந்தைப்பிறப்பதற்கான அத்தனை உடல் தகுதிகளுடன் இருந்தாலும், சிலருக்குக் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமென்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா..? அவர்களில் சிலர், 'நமக்குத்தான் எந்தப் பிரச்னையும் இல்லையே; இன்னும் சில காலம் காத்திருக்கலாம்' எனத் திருமணமாகி 10, 15 வருடங்கள் கழித்துக்கூடச் சிகிச்சைக்கு வருவார்கள்.
ஆனால், அந்த வயதில் அவர்களுடைய கருமுட்டையின் எண்ணிக்கை, தரம் போன்றவற்றில் பெரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.
இவர்கள் ஐ.வி.எஃப்., கருமுட்டை தானம் என்று முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். அதனால்தான், பெண்களின் வயதுக்கும் கருவுறுதலுக்கு நிறையத் தொடர்பிருக்கிறது என்கிறேன்.
இது சம்பந்தப்பட்ட பெண்களின் கருமுட்டையின் தரத்தைப் பொறுத்தது. தவிர, இந்த இடத்தில் நான் இன்னொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன்.
பொதுவாக, 30-களின் மத்தியில் இருக்கிற பெண்களின் கருமுட்டையைவிட, 20-களின் மத்தியில் இருக்கிற பெண்களின் கருமுட்டையின் தரம் சிறப்பாக இருக்கும்.

டவுன் சிண்ட்ரோம் ரிஸ்க்கை மருத்துவர்கள் லோ ரிஸ்க் (Low risk), இன்டர்மீடியட் ரிஸ்க் ( intermediate risk), ஹை ரிஸ்க் (high risk) எனப் பிரிப்போம்.
வயது வித்தியாசமில்லாமல் எல்லா அம்மாக்களுக்குமே டவுன் சிண்ட்ரோம் ரிஸ்க் இருக்கிறது. வயது அதிகமானால் இந்த ரிஸ்க் இன்னும் அதிகமாகும்.
இந்தக் காரணத்தால்தான், கருத்தரித்த எல்லா பெண்களுக்குமே, அவர்கள் நார்மலாக கருத்தரித்து இருந்தாலும் சரி, செயற்கை கருத்தரிப்பு என்றாலும் சரி, கட்டாயம் டவுன் சிண்ட்ரோம் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம்.
தாயைப் பொறுத்தவரைக்கும் அவர்களுடைய உடல் தகுதி சிறப்பாக இருக்கும். இதனால், கர்ப்ப காலத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வராது.
தாய் இளமையாக இருப்பதால், கருமுட்டையின் தரம் சிறப்பாக இருக்குமென்பதால், பிறக்கிற குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது.

தாயைப் பொறுத்தவரைக்கும், கர்ப்பகாலத்தில் நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பிரச்னைகள் ஏற்படலாம்.
குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் ஏற்படலாம்.
இதற்குக் கருமுட்டையை உறைய வைத்தல்தான் சிறந்த தீர்வு. திருமணத்தையோ அல்லது குழந்தைப்பிறப்பையோ தள்ளிப்போடும் பெண்கள் மட்டுமல்ல, திருமணமே வேண்டாம் என்கிற எண்ணத்தில் இருக்கிற பெண்கள்கூட, 10 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள விரும்பலாம் என்பதால், அவர்களுக்கும் இதுதான் தீர்வு.

திருமணம் ஓகே, குழந்தைப்பிறப்பை மட்டும் தள்ளிப்போட வேண்டும் என்கிற தம்பதியர், கரு முட்டையையும், விந்தணுவையும் இணைத்து கருவாக்கி, அதை உறைய வைத்துக்கொள்ளலாம்.
பிறகு, அவர்கள் எப்போது குழந்தைப்பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ அப்போது, அந்தக் கருவைக் கருப்பைக்குள் வைத்து, வளர்த்து, குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதிலிருக்கிற ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், உறைய வைத்த கருவைக் குழந்தையாகப் பெற்றுக்கொண்டது 35 வயதில் என்றாலும், அது உறைய வைக்கப்பட்ட 25 வயது தரத்துடன்தான் அந்தக் கரு இருக்கும்.
அதனால், பிறக்கிற குழந்தையும் 25 வயது அம்மாவுக்குப் பிறக்கிற அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும். தவிர, இப்படி கருமுட்டையையோ அல்லது கருவையோ உறைய வைப்பதால், பிறக்கிற குழந்தைக்கு எந்த உடல் நலக்குறைபாடும் வராது. அது எத்தனை வருடங்கள் ஆனாலும்...
பெண்களில் சிலர், திருமணத்துக்கு முன்னால் சரியான உடல் எடையுடன் இருப்பார்கள். இதனால், பி.சி.ஓ.டி பிரச்னை இருக்காது.
மாதவிடாயும் சரியாக வந்துகொண்டிருக்கும். ஆனால், திருமணமான பிறகு டயட் மற்றும் வாழ்க்கை முறை மாறுவதால் உடல் எடை அதிகமாகி, அதன் விளைவாக மாதவிடாய் ஒழுங்கற்றதாக்கி விடும்.
விளைவு, குழந்தையின்மைப் பிரச்னை. எல்லா வயதிலுமே, டயட்டையும் ஹெல்த்தையும் சரியாகப் பின்பற்றுவது மட்டுமே இதற்கான தீர்வு.

இதுவே 30-களில் இருக்கிற பெண்கள் என்றால், குழந்தைக்கு முயற்சி எடுப்பதற்கு முன்னால் நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு, ஹீமோகுளோபின் போன்ற சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ஒருவேளை பிரச்னை இருந்தால், சரி செய்துகொள்ள இது உதவும்.
தவிர, இருபதோ, முப்பதோ, பெண்கள் அனைவரும் ஒரு மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி ரூபெல்லா, ஹெச்.பி.வி-க்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவர்களுக்கும் நல்லது, கருவுக்கும் பாதுகாப்பு.
ஆண்களுக்கும் 20 முதல் 30 வயதுவரைதான் கருவுறும் தன்மை அதிகமாக இருக்கும். அதன்பின்னர் பெண்களைப்போலவே அவர்களுக்கும் குழந்தைப்பெறும் தன்மை குறையவே ஆரம்பிக்கும். ஸ்டிரெஸ், உணவு, உடற்பயிற்சியின்மை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைபார்ப்பது என வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள் ஆண்களுடைய விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை இரண்டையுமே பாதிக்கிறது.

ஸ்டிரெஸ்ஸை குறைக்க வேண்டும். போதுமான தூக்கம் முக்கியம். போதையும் மதுவும் கூடாது. செல்போன் மற்றும் லேப்டாப் பயன்பாடு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவற்றில் இருந்து வெளிப்படும் ரேடியேஷன் காரணமாக, விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிக்கலாம்.
மதுப்பழக்கம் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் குறைப்பது மட்டுமல்லாமல், ஆணுக்கான ஹார்மோன் அளவைக் குறைத்து செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.
சிலருக்கு ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையிலும் பிரச்னை ஏற்படலாம். குழந்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருக்கிற ஆண்கள், மதுப்பழக்கத்தை 3 மாதங்களுக்கு மொத்தமாக நிறுத்தினால், இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் ரிவர்ஸ் செய்ய முடியும் என்பதுதான் நல்ல செய்தி'' என்கிறார் டாக்டர் திவ்யா.

திருச்சி காவேரி மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் கருவியல் துறையில் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் திவ்யா, இதுதொடர்பான பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நிபுணர்.
மேலேயுள்ள கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள மகப்பேறியல் மற்றும் கருவியல் சார்ந்த சந்தேகங்கள், பிரச்னைகள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும்பட்சத்தில், டாக்டர் திவ்யாவிடம் ஆலோசனை பெறுவதற்கான அப்பாயின்ட்மென்ட் லிங்க் இதோ: https://www.kauveryhospital.com/doctors/maa-kauvery-trichy/obstetrics-and-gynecology/dr-s-divya/
மற்ற மருத்துவ உதவிகளுக்கு திருச்சி காவேரி மருத்துவமனை லிங்க்: https://www.kauveryhospital.com/maa-kauvery-trichy/women-children-hospital/
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs