முகேஷ் குமார் வேகத்தில் லக்னௌ திணறல்: தில்லிக்கு 160 ரன்கள் இலக்கு!
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 160 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் 40-வது போட்டியில் தில்லி மற்றும் லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவின் எக்கானா திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் அக்ஷர் பட்டேல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில், எய்டன் மார்க்ரம் 52 ரன்கள் (33 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவருக்குப் பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிட்செல் மார்ஷ் 45 ரன்களில் (36 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழந்து வெளியேறினார். லக்னௌ அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தபோதும் முடிவு சரியாக அமையவில்லை.
அவரைத் தொடர்ந்து அப்துல் சமத் 2 ரன்களிலும், டேவிட் மில்லர் 14 ரன்களிலும், இறுதியில் அதிரடி காட்டிய ஆயுஷ் பதோனி 36 ரன்களில் வெளியேற, கேப்டன் ரிஷப் பந்த் ரன் ஏதுமின்றி முகேஷ் வேகத்தில் வெளியேறினார்.
முடிவில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. தில்லி அணித் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஸ்டார்க், சமீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையும் படிக்க: 10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ஷிவம் துபே..!