சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தொழிற்சங்க கொடிமரம், பதாகை அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
நீதிமன்ற தீா்ப்பைக் காரணம் கூறி, அரசியல் சாசன சட்ட உரிமை மற்றும் தொழிற்சங்க கூட்டு பேர உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்தும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் திருச்சி மாநகரத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மற்றும் பதாகையை அகற்றிய காவல்துறையைக் கண்டித்தும், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகளை கைது செய்ததைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
இதில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கருணாகரன், எம்ஆா்பி செவிலியா் சங்க மாவட்டச் செயலா் சகுந்தலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்ட பொருளாளா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்