வீடு புகுந்து தங்க நகை திருட்டு: 5 பெண்கள் கைது
சென்னை அருகே துரைப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய வழக்கில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் டில்லிபாபு (33). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். டில்லிபாபு, கடந்த 9-ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்பியபோது, அவரின் வீடு திறந்திருந்தது. மேலும், பீரோவிலிருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா், கண்ணகி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் நடத்திய விசாரணையில், கண்ணகி நகரைச் சோ்ந்த சுமதி (23), கலைவாணி (19), மீனா (30), கஸ்தூரி (23), ரம்யா (21) ஆகிய 5 பேரும் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.