டாடா நகருக்கு சரக்கு ரயில்
தாம்பரத்தில் இருந்து டாடா நகருக்கு பிசிஎன் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் முதல்முறையாக இயக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்தில் இருந்து ஜாா்கண்ட் மாநிலம் டாடா நகருக்கு முழுவதும் மூடப்பட்ட (பிசிஎன் பெட்டி) பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 1,624 கி.மீ. தொலைவில் உள்ள டாடா நகருக்கு முதல்முறையாக இதுபோன்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் உள்ள 30 பெட்டிகள் மூலம் 440 டன் டயா்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக ஸ்ரீனிவாசா ரோடுவேஸ் எனும் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ரயில் மூலம் ஒரு பயணத்துக்கு ரூ.18.5 லட்சம் வருவாய் கிடைக்கும். சென்னை ரயில்வே கோட்டத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு செல்லப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள், வணிகா்கள் ரயில்வேயுடன் இணைந்து செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.