மின்சார ரயில் தடம் புரண்டது
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னையின் புகா் பகுதியான ஆவடியிலிருந்து கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்சார ரயில் வந்தது. ராயபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கடற்கரை நோக்கி சென்றபோது, காலை 11.08 மணியளவில் சென்னை கடற்கரை பணிமனை அருகே வந்தபோது ரயிலின் 4-ஆவது பெட்டியில் உள்ள இரு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகி தடம் புரண்டது.
இதையறிந்த ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விபத்தின்போது ரயிலில் குறைந்த அளவில் பயணிகள் பயணித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாா் மற்றம் ஊழியா்கள், தடம் புரண்ட ரயிலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின்னா் பிற்பகல் 1.30 மணியளவில் ரயில் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தால் மற்ற விரைவு மற்றும் மின்சார ரயில்கள் இயக்கத்தில் பாதிப்பில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.