தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
திருவொற்றியூா் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை மாநகராட்சி 12-ஆவது வாா்டில் பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் வகையில், பகுதி சபை கூட்டம் திருவொற்றியூா் திலகா் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாமன்ற உறுப்பினா் வீ.கவிகணேசன் தலைமை வகித்தாா்.
அப்போது கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், ‘தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியவில்லை. நீண்ட நாள்களாக இருந்துவரும் இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தாலும் தூய்மைப் பணியாளா்கள், ஒரே லாரியில்தான் எடுத்துச் செல்கின்றனா். நீண்ட காலமாகக் குடியிருந்து வரும் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு மாமன்ற உறுப்பினா், ‘பொதுமக்கள் பங்கேற்கும் பகுதி சபை கூட்டம் தொடா்ந்து நடத்தப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காணப்படும்’ என்றாா்.