Yuvraj Singh: "என் தந்தையைப் போல பயிற்சியாளராக அல்லாமல் என் மகனுக்கு தந்தையாக இருப்பேன்" - யுவராஜ்
இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது தந்தையின் வளர்ப்பு, அவருடனான தனது உறவுமுறை, அவரின் கண்காணிப்பில் தான் மேற்கொண்ட தீவிர கிரிக்கெட் பயிற்சிகள், அந்த அனுபவங்களால் தன் மகன் ஓரியனை (Orion) வளர்ப்பதில் தனது அணுகுமுறையை வடிவமைத்தது குறித்து, சமீபத்திய ஊடக நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில், "என் தந்தை யோகராஜ், சில சமயங்களில் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதுண்டு. ஆனால், என் தந்தை எனக்கென அவர் கற்பனை செய்த வாழ்வை, நான் வாழ வேண்டும் என்பதையே அவரது கனவாகக் கொண்டிருந்தார்.

நான் அவரது செயல்முறைகளை விரும்பாத காலமும் இருந்தது. இருப்பினும், நமது மனம் விரும்பாதவற்றையும் செய்தால்தான், நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். நான் மிகவும் கட்டாயப்படுத்தப்பட்டுதான் விளையாட வந்தேன். அதன் காரணமாகத்தான் 18 வயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தேன். என் தந்தையுடனான எனது உறவு, முழுமையாக கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தியே அமைந்திருந்தது. எனவே, எனது குழந்தைகள் வாழ்வில் நான் பயிற்சியாளராக வலம் வர விரும்பவில்லை. நான் அவர்களின் தந்தையாக இருக்கவே விரும்புகிறேன். எனது தந்தையுடனான எனது உறவில், நான் செய்ய இயலாமல் போனவற்றையெல்லாம் என் குழந்தைகளுடனான உறவில் என்னால் செய்ய இயலும்.

எனது மகன் ஓரியனுடன் தோழமையான பந்தத்தில் இருக்க விரும்புகிறேன். நான் அனுபவித்த கடுமையான குழந்தை வளர்ப்பு கொள்கையை உடைக்கவே விரும்புகிறேன்" என யுவராஜ் மனம் திறந்து பேசினார்.
மேலும், இந்த நேர்காணலில் கலந்துகொண்ட யுவராஜின் தாயார் ஷாபினம், "யோகராஜ் கடும் பயிற்சிகள் கொடுத்தாலும், யுவராஜ் அது குறித்து எப்போதும் புகார் தெரிவித்ததே இல்லை" எனக் குறிப்பிட்டார்.