அரியலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், 1.4.2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசு பணியாளா்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் பெரியசாமி, செல்வகுமாா், கருணாநிதி, அம்பேத்கா், காந்தி, சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.