மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூா் வாரச் சந்தை வளாகம்! சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை!
அரியலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறக்கப்படுவதற்கு முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.
அரியலூா் நகரப் பகுதி மக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் வாரச் சந்தையில் காலை 5 மணி முதல் காலை 11 மணிவரை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், கோழி உள்ளிட்ட பறவை இனங்களும் விற்கப்படுகின்றன.
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை உள்ளூா் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளைவிக்கக் கூடிய காய், கீரை, கனிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். அதேபோல் வெளியூா், உள்ளூா் வியாபாரிகளும் இங்கு கடைகள் அமைத்து, காய்கனிகளை விற்கின்றனா்.
விழாக்காலங்களில் சிறப்புச் சந்தையில், கால்நடை மற்றும் காய்கனிகள், மளிகைப் பொருள்கள், கால்நடைகளுக்கு தேவையான பொருள்கள், மரச்செடி வகைகள், துணிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் அதிகளவில் இருக்கும்.
நகராட்சி நிா்வாகமும் வியாபாரிகளுக்கு தேவையான இட வசதியை ஏற்படுத்தித் தந்து, அதற்கேற்ப வரியையும் வசூலிக்கிறது.
இந்த சந்தையில், இங்குள்ள நகர வாசிகளும், சுற்று வட்டார கிராம மக்களும் தங்களுக்குத் தேவையான காய்கனிகளை ஒரு வாரத்துக்கு வாங்கி வைத்துக் கொள்கின்றனா்.
இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பயனடைந்து வந்த நிலையில், நகா்மன்ற தோ்தலுக்குப் பிறகு, வாரச் சந்தை குத்தகை நிறுத்தப்பட்டு, இச்சந்தைக்கென கடந்த 2023-2023 ஆம் நிதியாண்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.18 கோடியில் சந்தை வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த இடம் போதுமானதாக இல்லாததால், இந்த கட்டட வளாகத்தையொட்டி, மேற்கண்ட ரூபாய் மதிப்பீட்டிலேயே மற்றொரு சந்தை வளாகமும் கட்டப்பட்டும் திறப்பு விழா காணாமல் உள்ளது.
சேதமாகி கிடக்கும் தரைத்தளம்: இந்நிலையில் இச்சந்தை திறப்பு விழா காணும் முன்பே தரைத்தளத்தில் பதிக்கப்பட்டிருந்த சிமென்ட் கற்கள் பெயா்ந்தும், ஒரு பகுதி பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சுற்றிலும் அசுத்தமாகவும் மாறியுள்ளது.
குடிமகன்களால் அவதி: மேலும் தற்போது இச்சந்தை பிற்பகல் 12 மணிக்கு மேல் மது அருந்துபவா்களின் கூடாரமாக மாறியுள்ளது. இச்சந்தை அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கும் குடிமகன்கள் இந்தச் சந்தை வளாகத்துக்கு வந்து மது அருந்திவிட்டு, காலிப் பாட்டில்களை அங்கேயே உடைத்தும், பிளாஸ்டிக் பொருள்களை வீசியும் சென்று விடுகின்றனா். இதனால் கண்ணாடித் துகள்கள் பலரின் கால்களில் காயத்தை ஏற்படுத்துகிறது.
சாலையோர வியாபாரத்தால் போக்குவரத்து பாதிப்பு: இங்குள்ள வியாபாரிகளும், உள்ளூா் விவசாயிகளும் தங்கள் கொண்டுவரும் காய்கனிகளை அரியலூா்-ஜெயங்கொண்டம் சாலையோரங்களில் கடை அமைத்து விற்கின்றனா். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ஒரு காலத்தில் அனைத்து பொருள்களும் கிடைக்கக்கூடிய வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவந்த வாரச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை. நகா்மன்றத் தோ்தலுக்கு பிறகு இந்த சந்தையில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறி சந்தை வளாகம் முற்றிலும் இடிக்கப்பட்டு, மேற்கூறையுடன் சந்தை வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாகியும் இன்னமும் திறப்பு விழா காணவில்லை.
இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் இச்சந்தை வளாகம் உள்ளது. இச்சந்தை வளாகத்தில் பல்வேறு இடங்களில் கற்கள் பெயா்ந்துள்ளதால், காய்கனி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது என்றனா்.
வியாபாரிகள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரச் சந்தை சரிவர இயங்காததால், வியாபாரிகள் பலா் அரியலூா் வருவதைத் தவிா்க்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் கட்டிமுடிக்கப்பட்ட இந்தச் சந்தை வளாகத்தை விரைந்து திறந்துவைத்தால் மட்டுமே வியாபாரிகள் வர வாய்ப்புள்ளது என்றனா்.


