செல்போன் பறிமுதல் செய்த ஆசிரியரைத் தாக்கிய மாணவி!
ஆந்திரத்தில் செல்போனைப் பறிமுதல் செய்த பெண் ஆசிரியரை மாணவி ஒருவர் தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டிண மாவட்டத்தில் பீமுனிப்பட்டிணம் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் வளாகத்தினுள் தனது செல்போனைப் பயன்படுத்தியதால் கல்லூரி விதிமுறைகளை மீறியதாக அவரது செல்போனை அங்கு பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், தனது செல்போனின் விலை ரூ.12,000 எனவும் அதனை உடனடியாகத் திருப்பி தரவில்லை என்றால் தனது காலணியைக் கொண்டு அடிப்பேன் என அவர் மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்ததால் அந்த மாணவி தனது காலணியால் ஆசிரியரைத் தாக்கியுள்ளார். பின்னர், உடனடியாக அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த மாணவியை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வெளியான நிலையில், கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவிக்கு எதிராக அந்தக் கல்லூரியின் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: முதல்வர் கண்டனம்