ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பலி 27 ஆக உயர்வு!
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காமில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று (ஏப்.22) அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், 27 பேர் பரிதாபமாக பலியானதாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!