சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
Hey Ram: சம்பளம் வாங்காத ஹீரோ; கருப்பு வெள்ளை குறியீடு... இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா?
`ஹே ராம்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
இன்று வரை காந்தியைப் பற்றிய பல சீரிஸ் மற்றும் திரைப்படம் எடுப்பவர்களுக்கு முதல் இன்ஸ்பிரேஷனே `ஹே ராம்' திரைப்படம்தான். ரஜினி தொடங்கி மணிகண்டன் வரை அனைத்து தலைமுறை நடிகர்களுக்குள்ளும் ஒரு ஆழமான தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது.
அத்திரைப்படம் தொடர்பான சுவாரஸ்யமான சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
* காந்தியின் சுயசரிதை நூலின் தலைப்பான `சத்ய சோதனை' என்கிற பெயரைத்தான் `ஹே ராம்' படத்திற்கு முதலில் தலைப்பாக வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் கமல்ஹாசன். அதன் பிறகுதான் `ஹே ராம்' தலைப்பைத் தேர்வு செய்தார்.
* `ஹே ராம்' திரைப்படம் தொடங்கும்போது கருப்பு வெள்ளை பதிப்பில் இருக்கும். அதன் பிறகுக் காட்சிகள் வண்ணமயமாகும். நிகழ்காலம் மற்றும் கடந்தகால காட்சிகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கு இந்த கருப்பு வெள்ளைப் பதிப்பை இயக்குநர் கமல்ஹாசன் பயன்படுத்தவில்லை. நிகழ்காலத்தில் இத்திரைப்படம் தொடங்கி அதன் பிறகு ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு நகரும். இறுதியாகக் காந்தி மாய்ந்துவிட்டார் என்கிற செய்தியைச் சாகேத் ராம் அறிந்த பிறகுதான் வண்ணமயமான காட்சிகள் அனைத்தும் கருப்பு வெள்ளைக்கு மாற்றம் பெறும். காந்தி இறந்த பிறகு இந்த உலகம் இருள் சூழந்துவிட்டது என்பதைக் காட்சிப்படுத்தும் குறியீடுதான் இந்த வண்ண மாற்றங்கள்.

* இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் கமல்ஹாசனின் மகளான ஷுருதிஹாசன் சினிமாவில் களமிறங்கினார். இத்திரைப்படத்தின் வல்லாபாய் படேலின் மகளாக அவர் நடித்திருப்பார். அதுமட்டுமல்ல, இத்திரைப்படத்தின் `ராம் ராம்' பாடலின் ஒரு பகுதியையும் இவர் பாடியிருப்பார்.
*நவாசுதீன் சித்திக்கும் இத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தின் நீளத்தைக் கருதி அந்தக் காட்சியைக் கத்தரித்திருக்கிறார்கள்.
* 1948-ல் காந்தி சுடப்பட்ட சமயத்தில் அவருடன் இருந்த மோகினி மாத்தூர் என்பவர், இத்திரைப்படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரத்தின் தயாராக நடித்திருப்பார். 1948-ல் மோகினி மாத்தூருக்கு வயது 13.
*காந்தியின் கொள்ளுப்பேரனான துஷார் காந்தி அவராகவே இத்திரைப்படத்தில் நடித்திருப்பார். இறுதியாக சாகேத் ராம் இறந்த பிறகு அவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் காட்சியில் துஷார் காந்தி வந்திருப்பார்.
* இத்திரைப்படத்திற்கு முதலில் வயலின் கலைஞரான எல்.சுப்ரமணியம்தான் இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைத்த பாடல்களை வைத்து கமல் பாடல் காட்சிகளை ஷூட் செய்துவிட்டார். அதன் பிறகுக் கமலுக்கும் எல். சுப்ரமணியத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக `ஹே ராம்' படத்திலிருந்து சுப்ரமணியம் விலகினார். ஷூட் செய்யப்பட்ட காட்சிகளை ரீ ஷூட் செய்யாத வண்ணம் இளையராஜா அதன் பிறகு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

* இத்திரைப்படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் சம்பளம் எதையும் பெறவில்லையாம். இப்படத்தில் நடித்ததற்காகக் கமலிடமிருந்து வாட்ச் ஒன்றை மட்டுமே பரிசாகப் பெற்றிருக்கிறார் ஷாருக். சொல்லப்போனால், அவரின் காட்சிகளுக்கு ஷாருக்கே தமிழ் டப் செய்திருப்பார்.
*மோகன் கோல்லே என்கிற மராத்திய நடிகர்தான் இத்திரைப்படத்தின் ஶ்ரீராம் அப்யங்கர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. சென்னையில் தங்கி இப்படத்திற்கான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் இந்த மராத்திய நடிகர். அதன் பிறகுதான் நடிகர் அதுல் குல்கர்னி ஶ்ரீராம் அப்யங்கர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டார்.
* கவிஞர் வாலி மிகவும் குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார். அவர் நடித்த ஒரு சில படங்களில் `ஹே ராம்' படமும் ஒன்று!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras
