இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
Mumbai Indians : `கப்பு ஜெயிச்சு நாலு வருசம் ஆச்சு ப்ரோ' - அணிக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?
ஐ.பி.எல் இன் ஆகச்சிறந்த அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். ஆனால், கடைசியாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சீசனைத்தான் மும்பை கடைசியாக வென்றிருந்தது. அதற்கு பிறகான 4 சீசன்களில் ஒரே ஒரு சீசனில் மட்டும்தான் ப்ளே ஆப்ஸ் வரை தகுதிபெற்றிருந்தனர். கடந்த சீசனில் படுமோசமாக தோற்றிருந்தனர். தோல்வியை தாண்டி அணிக்குள்ளும் நிறைய பிரச்சனைகள் இருந்தது. எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு இந்த முறை மீண்டும் சிறப்பாக ஆடி வெல்ல வேண்டும் என நினைக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் சாதிக்க முடியுமா?

ஹர்திக்கின் பிரச்சனை:
கடந்த சீசனுக்கு முன்பாக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை குஜராத்திலிருந்து அழைத்து வந்து கேப்டன் பதவியை கொடுத்திருந்தார்கள். அது அணிக்குள் பிரச்னையைக் கிளப்பியிருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் அணியாக ஒருங்கிணைந்து ஆடியதை போன்றே இல்லை. மேலும், ரசிகர்களும் அந்த அணியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக மைதானங்களிலேயே அதிருப்தி குரல்களை எழுப்பினர். இதுதான் கடந்த சீசனில் அந்த அணியின் மிகப்பெரிய பிரச்னை. ஆனால், இந்த சீசனில் அது பிரச்சனையாக இருக்காது. ஏனெனில், ரசிகர்கள் ஹர்திக்கை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். இந்திய அணி டி20 உலகக்கோப்பையையும் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றதில் ஹர்திக்கின் பங்கு அளப்பரியதாக இருந்திருந்தது. அந்த வெற்றிகள் சூழலை மாற்றியிருக்கிறது. ஆக, கடந்த முறையை போன்று அணியைச் சுற்றி ஒருவித நெகட்டிவிட்டி இருக்காது என்பதே அந்த அணிக்கு பெரிய பலம்தான்.
ஏலத்துக்கு முன்பாக தங்களின் Core அணியை அப்படியே தக்கவைத்துக் கொண்டனர். ரோஹித், ஹர்திக், சூர்யகுமார், பும்ரா, திலக் வர்மா என அத்தனை பேரும் அந்த அணியின் தூண்கள். இவர்கள் அத்தனை பேரும் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள் என்பது கூடுதல் பலம். பும்ரா மட்டும் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. முதல் 2-3 போட்டிகளை தவறவிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. பும்ராவின் ஓய்வு நீடித்தால் அது மும்பை அணிக்கு பின்னடைவாகவே இருக்கும்.

வலுசேர்க்கும் பேட்டிங்
பேட்டிங்கில் மேலும் வலு சேர்க்க தென்னாப்பிரிக்காவின் ரையான் ரிக்கல்ட்டனை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவரும் டாப் ஆர்டரில் மும்பை அணிக்கு பலமாக இருப்பார். ராபின் மின்ஸ் போன்ற உள்ளூர் அதிரடி வீரர்களும் அணிக்கு பெரிய பலமாக இருப்பார்கள். அதேமாதிரி, பெங்களூருவிலிருந்து வில் ஜாக்ஸை அள்ளி வந்திருக்கிறார்கள். கடந்த முறை பெங்களூரு அணி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றதில் வில் ஜாக்ஸின் பங்கு அதிகமாக இருந்தது. அதே தாக்கத்தை அவர் மும்பைக்கும் ஏற்படுத்தவேண்டும்.

டிரெண்ட் போல்டை மீண்டும் மும்பைக்குள் அழைத்து வந்திருக்கிறார்கள். அதேமாதிரி, சென்னையிலிருந்து தீபக் சஹாரையும் அள்ளி வந்திருக்கிறார்கள். கடந்த சில சீசன்களாக இவர்கள் இருவரும்தான் பவர்ப்ளேயில் அதிகமாக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் வீசினால் எதிரணிகளுக்கு கொஞ்சம் அபாயம்தான்.
இவர்கள் போக கார்பின் பாஸ் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும் ரீஸ் டாப்ளே வேகப்பந்து வீச்சாளராகவும் அணியில் இருக்கிறார்கள். பும்ரா இல்லையேல் மும்பை இன்னொரு பெரிய சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, பும்ரா இல்லையேல் டெத் ஓவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வது யார்? தீபக் சஹார் கட்டாயமாக டெத் ஓவர் பௌலர் இல்லை. அவரால் பவர்ப்ளேயில் மட்டும்தான் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் வீச முடியும். அவர் லெவனில் இருந்தால் 3 ஓவர்களை பவர்ப்ளேயில் வீசினாலும் வீசிவிடுவார். அவருடைய திறனுக்கு அதுதான் நல்லதும் கூட.
பவர் கொடுப்பாரா போல்ட்?
போல்ட் பவர்ப்ளேயில் இரண்டு ஓவர்களை வீசினால் மிடிலில் ஒரு ஓவரை வீசினால் டெத்துக்கு மீதம் ஒரு ஓவர்தான் இருக்கும். ஹர்திக் பாண்ட்யாவை டெத்தில் முழுமையாக நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஹர்திக் பாண்ட்யா இக்கட்டான சூழல்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர்தான். ஆனாலும், சீராக எல்லா போட்டிகளிலும் கட்டுக்கோப்பாக வீச வேண்டும். மேலும், டெத் ஓவரில் பும்ரா மாதிரியான வீரர் இருப்பது எவ்வளவு பெரிய பலம் என யோசிக்கையில் மும்பைக்கு பின்னடைவு இருப்பதை மறுக்கவே முடியாது.

ஸ்பின்னர்கள் கேட்டகரியில் மிட்செல் சாண்ட்னர் இருக்கிறார். சென்னை அணியில் பென்ச்சிலேயே இருந்தார். மும்பை அணியில் கட்டாயம் அப்படி ஒரு நிலை இருக்காது. ஏனெனில், அணியின் முக்கியமான ஸ்பின்னரே சாண்ட்னர்தான். நியூசிலாந்து அணியின் கேப்டனாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் அணிக்கு கூடுதல் பலமாகவே இருப்பார். அல்லா ஹசன்பருக்கு பதிலாக முஜீபூர் ரஹ்மானை ரீப்ளேஸ்மென்ட்டாக எடுத்திருக்கிறார்கள். கரண் சர்மாவும் அணியில் இருக்கிறார். இவ்வளவுதான் மும்பையின் ஸ்பின் பலம். கரண் சர்மா இருக்கும் அணி சாம்பியன் ஆகும் என்கிற ஒற்றை மித்தைத் தவிர அவரை நம்ப வலுவான ரெக்கார்டுகள் இல்லை. முதல் போட்டியையே சேப்பாக்கத்தில் ஆடுகிறார்கள் எனும் போது இந்தியாவை சேர்ந்த திடகாத்திரமான ஸ்பின்னர் ஒருவர் அணியில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். முஜிபூர் ரஹ்மான் க்ளிக் ஆகிவிட்டால் அந்த குறையும் போய்விடும். ஆனால், முஜீப்பை உள்ளே கொண்டு வர வேண்டுமெனில் 4 வெளிநாட்டு வீரர்களின் ஸ்லாட்டில் பிரச்சனை ஏற்படும். கூட்டல் கழித்தலெல்லாம் பார்த்துதான் அவரை அணிக்குள் கொண்டு வர முடியும்.
மும்பை அணியில் குறைகள் இருந்தாலும் எல்லாமே சமாளிக்கக்கூடிய குறைகளாகத்தான் இருக்கிறது. ஹர்திக் அந்த பிரச்சனைகளையெல்லாம் திறம்பட கையாண்டு மும்பை அணியை மீண்டும் கரையேற்றுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து அந்த அணிக்கு 10 க்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!