செய்திகள் :

Naangal Review: டாக்சிக் தந்தையும் பாதிக்கப்படும் மகன்களும்! எதார்த்தம் பேசும் படைப்பு ஈர்க்கிறதா?

post image
1998 காலகட்டத்தில் ஊட்டியில் தனியார்ப் பள்ளி ஒன்றை நடத்துவதோடு, அப்பள்ளிக்கு முதல்வராகவும் உள்ளார் அப்துல் ரஃபே. அவரது மனைவி பிரிந்துவிட்டதால், மகன்கள் மிதுன், ரிதிக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். பள்ளி நடத்துவதில் ஏற்பட்ட நஷ்டத்தால், தண்ணீர், போதிய உணவு, மின்சார இணைப்பு என எதுவுமில்லாமல் வறுமையில் மாட்டுகிறது குடும்பம். இந்த வறுமையோடு, தந்தையின் அதீத கண்டிப்பும், அடக்குமுறையும், வன்முறையும் சிறுவர்களைத் தினம் தினம் அவதிக்குள்ளாக்குகின்றன. தந்தை அப்துல் ரஃபே ஏன் இப்படியிருக்கிறார் என்பதோடு, அவரது அதீத கண்டிப்பால் குடும்பம் என்னவாகிறது என்பதையும் பேசுகிறது அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கியிருக்கும் இந்த `நாங்கள்'.
Naangal Review

கண்டிப்பான தந்தையாக, அதீத கோபக்காரராக, தன் தோல்வியை நினைத்துக் குமைபவராக, தன் தவறுகளுக்குக் கண்ணீரால் மன்னிப்பு கேட்பவராக உணர்வெழுச்சியோடு உலாவும் கதாபாத்திரத்திற்கு, எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் அப்துல் ரஃபே. உடல்மொழி, வசன உச்சரிப்பு எனக் காட்சிக்குக் காட்சி நுணுக்கத்தைக் கையாண்டு பாராட்டைப் பெறுகிறார். மூன்று சிறுவர்களிடமிருந்தும் தேவையான உணர்வுபூர்வமான நடிப்பை நேர்த்தியாக வாங்கியிருக்கிறார் இயக்குநர். இவர்களில் மூத்த மகனாக மிதுனின் நடிப்பு தேவையான முதிர்ச்சியைக் கடத்தியிருக்கிறது. பிரார்த்தனா ஶ்ரீகாந்த், ஜான் எடதட்டில் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் அவினாஷ் பிரகாஷே ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் கையாண்டிருக்கிறார். ஊட்டியின் நில அமைப்பைப் பதைபதைப்பைச் சேர்க்கவும், கதையின் இறுக்கத்தைக் கூட்டவும் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறது ஒளிப்பதிவு. பெரும்பாலும் ஒரே வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளைக் கறுப்பு - வெள்ளை மற்றும் கலர் எனப் பிரித்து, அதற்கான காரணத்தையும் கதைக்கருவிற்கு வலுசேர்க்கும்படி வைத்திருக்கிறார். அதீத நிதானத்தோடு நகரும் திரைமொழி, கதைக்கருவின் அடர்த்தியைக் குறையாமல் பார்த்துக்கொள்கிறது. உணர்ச்சி ஊர்கோலமாக நகரும் படத்திற்குக் கிடைத்த இடத்தில் எல்லாம் கைகொடுத்திருக்கிறது வேத் சங்கர் சுகவனத்தின் பின்னணி இசை. சில இடங்களில் மட்டும் மௌனத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கலாம்.

Naangal Review

கண்டிப்பு என்ற பெயரில் குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறை மற்றும் அடக்குமுறை, அதனால் அவர்களின் குழந்தைப் பருவம் எப்படி இருண்மையாகிறது என்ற விஷயத்தை உளவியல் ரீதியாக அழுத்தமாகப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் அவினாஷ் பிரகாஷ். ஒரு சில காட்சிகளிலேயே சிறுவர்களின் உலகம், அவர்களின் வீடு, ஊர் எனக் கதைக்களத்தையும், கதையின் கருவையும் ஆழமாகத் திரையில் ஆவணப்படுத்துகிறது திரைக்கதை. தினமும் தண்ணீர் பிடிக்க நடக்கும் போராட்டம், அப்பா மிச்சம் வைத்த சாண்ட்விச்சை பாத்திரம் கழுவும்போது பசியில் உண்ணும் மகன் போன்ற நுணுக்கமான காட்சிகள் மூலம், கதாபாத்திரங்களும், கதைக்களமும் ஆழம் பெறுவது முதிர்ச்சியான எழுத்துக்கான சாட்சி! போலித்தனமில்லாத உரையாடல்கள், குழந்தைகளின் அகத்தைப் பேசும் காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன. இடைவேளை வரையுமே இந்த நிதான திரைக்கதை, உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் கச்சிதமாக மலையேற்றுகின்றன.

ஆனால், இரண்டாம் பாதியிலும் இதே ட்ரீட்மெண்ட் நீள்வதில்தான் சிக்கல் தொடங்குகிறது. ஒருகட்டத்தில் பேசிய விஷயத்தையே மீண்டும் மீண்டும் பேசுவதுபோல ஓர் உணர்வை இந்த நிதான நடை திரைக்கதையும் திரைமொழியும் கொடுக்கின்றன. மேலும், தந்தையின் கண்டிப்பு குணத்திற்குப் பின்னால் உள்ள சமூக காரணமும், சமூகச் சூழலும் என்ன, சில பிரதான கதாபாத்திரங்கள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன, மனைவியைப் பிரிந்ததற்கான அழுத்தமான காரணமென்ன, மனைவி கதாபாத்திரம் ஏன் குழப்பத்திலேயே இருக்கிறது என இரண்டாம் பாதியில் கேள்விகளும் நிறையவே எழுகின்றன. இதனால், இறுதிக்காட்சியில் இருந்திருக்க வேண்டிய தெளிவும், அழுத்தமும் மிஸ்ஸிங். அதனாலேயே படம் பாதி குழப்பத்தில் முடிந்த உணர்வைத் தருகிறது.

Naangal Review
குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பதைக் குழந்தைகளின் உலகத்திற்கு நெருக்கமாக நின்று பேசிய விதத்தில் `பாடமாக' கைதட்டல் பெற்றாலும், தேவையான சுவாரஸ்யம், குழப்பமில்லாத கதாபாத்திரங்கள், தெளிவான திருப்பங்களையும் கவனத்தில் கொண்டிருந்தால் ஒரு முழுமையான படமாகவும் மனத்தில் நின்றிருக்கும்.

Bombay: `பாம்பே படம் இன்று வெளியானால்... நாட்டின் சகிப்புத்தன்மை?’ - ராஜீவ் மேனன் ஓப்பன் டாக்

மணிரத்னத்தின் 'பாம்பே' படம் இன்று திரையரங்குகளில் வெளியானால் பெரும் சவால்களை சந்திக்கும். அந்தளவு இந்தியா சகிப்புத் தன்மையில்லாத நாடாக மாறிவருகிறது என பாம்பே படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவி... மேலும் பார்க்க

XEV 9E: "இந்த காருக்கான சவுண்டை நாங்கள் உருவாக்கினோம்" - ரஹ்மானின் இன்ஸ்டா பதிவு வைரலாக காரணம் என்ன?

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த BE6 மற்றும் XEV 9E-யின் ஒலி வடிவமைப்பில் ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மானும் பணியாற்றியிருக்கிறார். இது தொடர்பாக அவர் முன்பு வெளியி... மேலும் பார்க்க

Thug Life: "நான் ராமர் இல்ல; ராமரின் அப்பா வகையறா" - திருமணம் குறித்த கேள்விக்குக் கமல் ஹாசன் பதில்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்ட... மேலும் பார்க்க