Bitcoin விலை ஏறுமா, இறங்குமா இனி நாமே கணிக்கலாம்... எப்படி? | IPS FINANCE | EPI ...
Nepoleon: தமிழ்ப் பெண் நடத்தும் ஹோட்டல்விருந்து... ஜப்பானில் நெப்போலியன் வீட்டுக் கல்யாணம்!
வேட்டியை மடித்தக் கட்டி, மீசையை முறுக்கியபடி 'கிழக்குச் சீமையிலே', சீவலப்பேரி பாண்டி' எட்டுப்பட்டி ராசா' என கிராமத்துப் படங்களின் மூலம் நம் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். தொடர்ந்து அரசியலில் இறங்கி எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர் எனக் கலக்கினார். ஒருகட்டத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகன் தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றவர், மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். தற்போது அங்கு ஜீவன் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருவதுடன் விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷுக்கும் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயமானது. ஜப்பானைப் பார்க்க வேண்டும் என்பது தனுஷின் ஆசையாக இருந்ததால் மகனது திருமணத்தையே ஜப்பானில் வைத்து நடத்த முடிவு செய்த நெப்போலியன் கடந்த சில மாதங்களாகவே கல்யாண ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.
அதன்படி தனுஷ் - அக்ஷயா ஜோடிக்கு இந்திய நேரப்படி இன்று காலை 8 மணியளவில் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. முன்னதாக இரு தினங்களுக்கு முன்பே சென்னையிலிருந்து நடிகர்கள் ராதிகா, சரத்குமார், குஷ்பு, மீனா, கலா மாஸ்டர் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பலர் ஜப்பானுக்குக் கிளம்பி விட்டனர். நடிகர் கார்த்தி தனது மனைவியுடன் வந்திருந்தார். சினிமா பிரபலங்கள் தவிர நெப்போலியனின் உறவினரான அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்திலிருந்து சிலரும் மணமகள் குடும்பத்தினரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டிலிருந்து திருமணத்துக்கு வருகிறவர்கள் தங்குவதற்கென்றே டோக்கியோ நகரத்தில் பல அறைகளை புக் செய்து வைத்திருந்ததாம் நெப்போலியன் குடும்பம்.
அதேபோல திருமணம் மற்றும் அது தொடர்பான விருந்து உபசரிப்பு பொறுப்பானது சென்னையிலிருந்து சென்று ஜப்பானில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக உணவகம் நடத்தி வரும் டாக்டர் விஜயலட்சுமி என்பவரிடம் தரப்பட்டதாம்.
விஜயலட்சுமி பயோ இன் ஆர்கானிக்கில் பி.எச்.டி வாங்கியவராம். படிப்பு தொடர்பாகவே கணவருடன் ஜப்பான் சென்றாராம். அங்கு தென்னிந்திய உணவின் மீது இருந்த பெரிய ஆர்வத்தைக் கவனித்த விஜயலட்சுமியின் குடும்பம் ஹோட்டல் தொடங்கும் முடிவை எடுத்திருக்கிறது. இவர்களுடைய பாலாஜி ஹோட்டல் இன்று டோக்கியோவில் முக்கியமான ஒரு ரெஸ்டாரன்ட் என்கிறார்கள்.
இவர்கள் குறித்து யூ டியூபர் இர்பான் மூலம் கேள்விப்பட்ட நெப்போலியன் தனது மகனின் கல்யாண விருந்து பொறுப்பையும் இவர்களிடம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.