இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
Nivin Pauly: `ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி' - பாலியல் குற்றச்சாட்டிலிருந்து நிவின் பாலி விடுவிப்பு
மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக, 2017-ல் பிரபல மலையாள நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலைத் தெடர்ந்து, அங்கு நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி 2019-ல் அப்போதைய முதல்வர் பினராயி விஜயனிடம், இதுபோன்ற குற்றங்களில் எடுக்கப்பட வேண்டிய பரிந்துரைகளுடன் கூடிய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.
ஆனாலும், அந்த அறிக்கை நான்காண்டுகளாக அப்படியே கிடப்பிலேயே இருக்க, சில மலையாள ஊடகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஹேமா கமிட்டி அறிக்கையைப் பெற்று வெளியிட்டனர். இது வெளியான சில நாள்களில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (AMMA), தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாக பதவியில் இருக்கும் அனைவரும் கூட்டாகப் பதவிகளை ராஜினாமா செய்தனர். உயர் நீதிமன்றமும், `நான்காண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்' என மாநில அரசை சாரமரியாகக் கேள்வியெழுப்பியது.
இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க, சித்திக், முகேஷ், ரஞ்சித், ஜெயசூர்யா உள்ளிட்ட மலையாள சினிமாவின் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல்கள் புகார்கள் குவிந்தன. அந்த வரிசையில், நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி நிவின் பாலி மற்றும் நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகாரளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், நிவின் பாலி உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அதைத்தொடர்ந்து நிவின் பாலி, ``புகாரளித்த பெண் யார் என்றே தெரியாது. எனக்காக நான்தான் பேச வேண்டும். இதற்குப் பின்னால் செயல்படுபவர்களைச் சட்டத்துக்கு முன் கொண்டுவர எந்த எல்லைக்கும் செல்வேன்." தெரிவித்தார். அதேவேளையில், சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கில் நிவின் பாலியிடம் விசாரணை நடத்தியது. இவ்வாறிருக்க, நிவின் பாலிக்கு இந்தக் குற்றச்சாட்டில் எந்தத் தொடர்பும் இல்லை என கொத்தமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸ் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.
மேலும், இந்த வழக்கின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை எனவும், அதனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலிலிருந்து நிவின் பாலியின் நீக்க முடிவுசெய்திருப்பதாகவும் போலீஸார் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் நிவின் பாலி, தனக்கு ஆதவராக நின்ற அனைவருக்கும், தன்மீதான அன்பு, அரவணைப்பு, பிரார்த்தனை ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.