Noise Bombing: `ஒலி' தாக்குதல்... புது முறையில் தென் கொரியாவை அச்சுறுத்தும் வட கொரியா!
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே மோதல் பல காலமாகவே நிகழ்ந்து வருகிறது. மேலும் மோதல் கொண்ட இரு நாட்டிற்கு இடையே உள்ள எல்லையில் பதற்றம் மேலோங்கி இருக்கும்.
வட கொரியா, தென் கொரியாவைத் தொடர்ந்து பல வகைகளில் அச்சுறுத்தி வருகிறது. அணு ஆயுதங்களை வைத்து மிரட்டும் வட கொரியாவை நாம் அறிந்திருந்தோம். ஆனால், புது வகையில் `ஒலி'யை ஆயுதமாகக் கொண்டு தற்போது வட கொரியா களமிறங்கியிருக்கிறது.
இந்த நூதன ஒலி ஆயுதம் வேறொன்றுமில்லை... வெறும் ஒலிபெருக்கிகள் தான். பெரிய ஆயுதங்களை விட்டுவிட்டு ஒலிபெருக்கி கொண்டு என்ன தாக்குதல் நடக்கப் போகிறது என்று தோன்றுகிறது அல்லவா.
இந்த சவுண்ட் பாம்பிங் எனப்படும் தாக்குதல், தென்கொரியா-வின் எல்லையில் உள்ள டேங்க்சன் கிராமத்தில் DE Militarized Zone என்று சொல்லப்படக்கூடிய ராணுவ மயமாக்கப்பட்ட பகுதியைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது. வட கொரியாவின் எல்லையில் அந்த ஒலிபெருக்கிகளை வைத்து அவற்றின் மூலம் பல வினோதமான மற்றும் பயம் எழுப்பக்கூடிய சத்தங்களை வட கொரிய படையினர் எழுப்புகின்றனர்.
ஓநாய் ஊளையிடுவது, பேய்கள் அலறுவது, பீரங்கித் தாக்குதல், வாகனங்கள் மோதிக்கொள்ளும் சத்தம் போன்ற காதுகளை கெடுக்கும் சத்தங்கள் எழுப்பப்படுகிறது. இதனால் டேங்க்சன் கிராமத்தில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது.
மேலும் அந்த கிராமவாசிகளை மனதளவில் சீர்குலையச் செய்து, அவர்களைத் துன்புறுத்துவதே இத்தகைய தாக்குதலின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த முறைக்குப் பெயர்தான் சவுண்ட் பாம்பிங் என்கின்றனர். வட கொரியா கடந்த ஜூலை மாதம் முதல் 24 மணி நேரமும் இடைவிடாமல் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறதாம்.
கிம் ஜாங் உன் அரசின் இத்தகைய தாக்குதல் குறித்த உங்கள் கருத்துகளைக் கீழே கமென்ட்டில் தெரிவியுங்கள்!