அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!
One Nation One Election: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம்
மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய கனவுத் திட்டங்களில் ஒன்று, `ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election)'. நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் செலவைக் குறைக்க முடியும், நிர்வாகத்திறனை மேம்படுத்த உதவும் எனக் கூறும் பா.ஜ.க, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது.
அந்தக் குழு தேர்தலுக்கு முன்பாகவே, 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க, நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இன்று `ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election)' மசோதாவை அறிமுகம் செய்திருக்கிறது. சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதாவை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி 'இந்த முன்மொழிவு இந்த சபையின் சட்டமியற்றும் தகுதிக்கு அப்பாற்பட்டது. உடனடியாக இந்த மசோதா திரும்பப் பெற வேண்டும். இது சர்வாதிகாரத்திற்கான பாதை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பல மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத மற்றும் மாநில நலன்களுக்கு எதிரான திட்டம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...