Rain Alert : `சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?' - பாலசந்திரன்
வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், ” தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுத்துறை மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல, நாளை மறுநாள் விழுப்புரம், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 27, 28-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
குமாரிகடல் மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் கடவுளுக்கு செல்லவேண்டாம்” தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...