மதுரை: மேலூரில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கம்? எச்சரிக்கும் அமைப்புகள்; மறுக்கும் மாவட்ட நிர்வாகம்
மேலூர் பகுதியில் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் அளித்த மனுவில், "மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்ஸ் எனும் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. டங்ஸ்டன் கனிமம் எடுக்க அனுமதித்தால் முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதோடு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாப்பட்டி பல்லுயிர் சூழல் தலம் பாதிக்கப்படும். ஆகவே டங்ஸ்டன் கனிமம் எடுக்கத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது" என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
அப்போது மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சங்கீதா, "மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசிடமிருந்து எந்தவொரு அனுமதியும் பெறவில்லை. கனிமம் எடுக்கத் தமிழக அரசிடம் மத்திய அரசு தடையில்லா சான்று பெற வேண்டும். மதுரையில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக அவ்வப்போது புரளி பரவுகிறது. தங்கள் மனுவை அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று உறுதியளித்துள்ளார்.
இந்த தகவல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பர்ய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4-வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டேர் பகுதியில்தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பர்ய தலமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலையானது இச்சுரங்கத் தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் எனத் தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களைத் தாங்கி நிற்கும் இடம் .
குளங்கள், நீர்ச்சுனைகள், ஊற்றுகள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் எனத் தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மையமிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டியலிட்டு, அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு. கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது .
தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பரப்பிலான பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs