Russia - Ukraine: அதிபர் புதின் கொடுத்த ஒப்புதல்; உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதம்?!
ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. யுனிசெஃப் அமைப்பின் தகவலின் படி இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்யாவிற்குள் உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த, உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மறு பரீசீலனை செய்து புதிய கோட்பாட்டை இணைத்து ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற புதிய கோட்பாடு இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,``அணு ஆயுதம் இருக்கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டு சேர்ந்து, அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்ரைன்) தாக்குதல் நடத்தினால் அது கூட்டுத் தாக்குதல் என்றே கருதப்படுகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள அதற்கேற்ப எங்கள் கொள்கைகளைக் கொண்டுவருவது அவசியம். தற்போது ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் இந்தக் கோட்பாடு மிக முக்கியமான ஆவணம். ரஷ்யா எப்போதும் அணுவாயுதங்களை தடுப்பதற்கான வழிமுறையாகவே பார்க்கிறது. இந்தப் போரை எதிர்க்கொள்ள அணு ஆயுதம் கட்டாயம் என உணர்ந்தால் மட்டுமே அவை பயன்படுத்தப்படும்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...