“அமைதியாக இருங்கள்...” கௌதம் கம்பீருக்கு முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அறிவுரை!
Saudi Vision 2030: கட்டுமானப் பணிகள் தொடங்கிய 8 ஆண்டுகளில் 21000 தொழிலாளர்கள் பலி? - அதிர்ச்சி தகவல்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான, முகமது பின் சல்மானின் கனவுத் திட்டம் `சவுதி விஷன் 2030'. இந்தத் திட்டம் சவுதி அரேபியாவின் அரசாங்கத்தால் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 500 பில்லியன் டாலர் செலவில் 170 கிலோமீட்டர் நீளமான ஒரு மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதில் 2.5 கிலோமீட்டர் கட்டுமானம் 2030 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் 21,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.
சவுதி விஷன் 2030 என்பது சவுதி அரேபியாவை பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் மேம்பாடு அடைய செய்வதாகும். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் இந்தத் திட்டத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சவுதி அரேபியா எண்ணெய் சார்ந்த வளங்களையே பெரிதும் வருமானத்திற்காக நம்பியிருக்கிறது. ஆனால் 2030 ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் சார்ந்த வளங்கள் இல்லாமல், சுற்றுலா போன்ற துறைகளில் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி துபாய் போலவே நியோம் என்ற வளர்ச்சி அடைந்த நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 500 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது.
170 கிலோமீட்டருக்கு ஒரே நேர்கோட்டில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. அதனால் இந்த நகரம் 'தி லைன்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் மொத்தம் மூன்று அடுக்குகள் அமைய உள்ளன. ஒன்று கிரவுண்ட் லெவல் அதில் இயற்கையான சூழல் நிறைந்த பகுதியாக உருவாக்கப்படும். மேலும் அதில் பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் வாகனங்கள் எதுவும் இந்த அடுக்கில் இருக்காது. இரண்டாவது அடுக்கு சர்வீஸ் லேயர், இந்த அடுக்கில் எல்லாவிதமான வணிகங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வாகனங்கள் இயக்கப்படும். இந்த கட்டிடத்தின் முதுகெலும்பாக மூன்றாவது அடுக்கு செயல்படுகிறது. அதற்கு ஸ்பயின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்த நகரத்தின் அதிவேகமான மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. 170 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நகரத்தை சுமார் 20 நிமிடங்களில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்லும் வகையில் அதிவேகமான மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த நகரத்தின் மற்றொரு சிறப்பாக மின்சார அமைப்பு, தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து ஆகிய அனைத்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலம் செயல்பட உள்ளது. 2052 ஆம் ஆண்டு எண்ணெய் வளங்கள் குறையும் நேரத்திலும், இந்த நகரத்தில் 2030 முதல் எண்ணெய் வளங்களை பயன்படுத்தாமல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்டு இந்த நகரம் இயங்க உள்ளது. 2052 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் சுற்றுலா பயணிகளை இந்த நியோம் நகரத்திற்கு வரவழைக்க வேண்டும் என்பதே இலக்காக கொண்டுள்ளார் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர். இப்படிப்பட்ட எதிர்கால திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ITV இன் சமீபத்திய ஆவணப்படம் ஒன்று சவுதி அரேபியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பற்றி விவரித்துள்ளது. அதில் ஒரு தொழிலாளி சவுதி சட்டத்தின் படி ஒரு வாரத்தில் 60 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதித்தாலும், ஒரு வாரத்தில் 84 மணி நேரத்திற்கு மேலாக தி லைன் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளுக்காக வேலை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ITV வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, இந்தியா, பங்களாதேஷ், நேபாளத்தை சேர்ந்த 21,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் “சவுதி விஷன் 2030” திட்டத்தின் கட்டுமான பணியின் போது இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக நேரம் உழைப்பு, போதிய உணவு இல்லாமை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழல் அந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டதை ITV ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.
இது குறித்து பதில் அளித்துள்ள, நியோம் கட்டுமான பணியின் அமைப்பு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், சவுதி சட்டங்கள் மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தரத்தின் அடிப்படையில் தங்கள் ஒப்பந்ததாரர்கள் தங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறது.