`StartUp' சாகசம் 41: ``மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர்’’ - முனைவர் ந.தெய்வசுந்தரம் சாதனை
உலக அளவில் தமிழ்மொழி , தமிழ்நாட்டிலும், இலங்கை, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளிலும் ஆட்சி மொழியாக நீடிக்கிறது. மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தாய்நாடு நமது தமிழ்நாடுதான்.
தமிழ் தொடக்கக் கட்டத்தில் இருந்தே நிலவுகிற அத்தனை ஊடகங்களையும் பயன்படுத்தி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே புழங்கிவருகிறது.
ஒரு புறம் ஜென் இசட் தலைமுறையினர் தமிழின் எழுத்து வடிவத்தை மறந்து தங்கிலிஷுக்கு மாறி வருகின்றனர். ஆனால் எப்போதெல்லாம் திரை மாறி வருகின்றதோ அப்போதெல்லாம் தமிழும் அந்தத் திரைக்கு மாறிவிடும்.

உதாரணங்கள்: பேச்சு, கல்வெட்டு, பனை ஓலை, செப்பேடுகள், காகிதம், கணினி, இணையம், கைப்பேசி, எழுத்துருக்கள், பேச்சு, செயற்கை நுண்ணறிவு, ஆழக்கற்றல், பெருந்தரவகம், எழுத்திலிருந்து பேச்சு, பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து கட்டுரை, எழுத்திலிருந்து படம், எழுத்திலிருந்து காணொளிகள் என எல்லா விதங்களிலும் தமிழ் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது.
1984 இல் கனடாவைச் சேர்ந்த சீனிவாசன் அவர்கள் ஆதமி என்ற எழுத்துருவை உருவாக்கினார். அப்போது இருந்து தமிழ்க் கணிமையில் பல்வேறு விதமான மேம்பாடுகள், பலரின் கூட்டு முயற்சிகளால் தமிழ்க் கணிமைத் துறை வளர்ந்து கொண்டே வருகிறது. இது பலரின் கூட்டு முயற்சிகள், தனிநபர்களின் முன்னெடுப்புகள், அரசின் சில திட்டங்கள் என எல்லா வகையிலும் இதன் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
1 லட்சம் கோடி...
2018ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் தமிழ் ஆட்சென்ஸ், தமிழ் ஆட்வேர்ட்ஸ், யூடியூப் போன்றவற்றால் தமிழ் மொழிக்கு 10,000 கோடி மதிப்பை நிர்ணயித்தது. ஆனால் இன்று ஏறக்குறைய தமிழ் மொழியின் பயன்பாடு சுமார் 1 லட்சம் கோடிகளில் இருக்கலாம்.
அந்த அளவுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ்க் கணிமைக்காக உழைப்பவர்கள் அதை விற்க பெரும்பாடு பட வேண்டியதிருக்கிறது என்பதுதான் பெரும் சிரமம்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திரத்திற்காக உழைத்தவர்கள் பலரின் குடும்பங்களின் நிலையை இன்று செய்தித்தாள்களின் வழியேதான் அறிந்து கொள்ளமுடிகிறது. அதே போன்றுதான் தமிழ்க் கணிமைக்காக உழைப்பவர்கள் பெரும் முதலீடுகளைப் பல வழிகளில் திரட்டிப் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அதற்கான பலன் மிகக் குறைவு. ஆனாலும் தமிழுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
அப்படித் தொடர்ந்து பணியாற்றுபவர்களில் ஒருவரான முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் தமிழக முதல்வரின் கணினித் தமிழ் விருது பெற்றவர். சிங்கப்பூர் அரசாங்கத்திற்கான பல்வேறு மென்பொருள்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
தற்போது 75 வயதில் அவர் முன்னெடுத்திருக்கும் மென்தமிழ் சொல்லாளர் என்ற மென்பொருள் பற்றிய அவரின் சாகசத்தை இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

நோக்கம்
உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம், தமிழுக்கான மென்பொருள் அதுவும் உள்ளீட்டு மென்பொருளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கம் எப்போது, ஏன் தோன்றியது?
நான் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் தமிழ், மொழியியல் இரண்டிலும் முதுகலைப் பட்டங்களும் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.
1985 முதல் 2010 வரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையில் விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பின்னர்ப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளேன். மொழியியல் படிப்புப்பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களிலேயே தமிழ்த்துறையில் கணினிமொழியியலுக்கென்று முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகளைத் தொடங்கி நடத்தினேன்.
அதற்கென்று பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவியுடன் 25 இலட்சம் செலவில் கணினித்தமிழ் ஆய்வுக்கென்று தனிக் கணினி ஆய்வகம் ஒன்றை நிறுவினேன். 2010 ஜூன் மாதம் இறுதியில் பணி ஓய்வு பெற்றேன். அத்தோடு தமிழ்த்துறையில் கணினி மொழியியல் படிப்பு நிறுத்தப்பட்டது; கணினி ஆய்வகமும் மூடப்பட்டது. இது வேதனை தரக்கூடிய ஒரு செய்தி.
2000 -ஐ ஒட்டிய காலகட்டத்தில் வடமொழிக்குக் கணினிமொழியியல், இயற்கைமொழி ஆய்வு மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. வடமொழியும் வடமொழி இலக்கணமான பாணினியமுமே கணினிக்கு ஏற்ற மொழி என்று ஒரு பேராசிரியர் ஒரு கூட்டத்தில் கூறினார்.
அப்போதுதான் தமிழும் தமிழ் இலக்கணங்களும் கணினிக்கு ஏற்றவையே என்று நிரூபித்துக் காட்டவேண்டும் என்று உறுதி எடுத்தேன். அதன்பிறகே தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டேன். அதையொட்டியே எனது தமிழ்க் கணினிமொழி ஆய்வு விரிவடைந்தது.
75 வயதில் இந்தத் துணிச்சலான முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். அடுத்த தலைமுறையினருக்கு இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு கையளிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்? எப்படி இது சாத்தியமானது?
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் தொடங்கிய கணினித்தமிழ் ஆய்வுப் படிப்பு மூடப்பட்டது எனக்கு மிகவும் வேதனை அளித்தது. அந்த ஆய்வைப் பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு அரசு ஆகியவை தொடரவேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொண்டேன்.
எனது ஓய்வூதியமே முதலீடு
ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. எனவே நாமே தனியாக இப்பணியை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்து இந்த முயற்சியில் இறங்கினேன்.
எனது ஓய்வூதியமே முதலீடு. எனது உடன்பிறந்தவர்கள், எனது மகன் ஆகியோரே உதவிவருகின்றனர். மேலும் எனது மகன் ஒரு மென்பொருள் நிரலாளர். அமெரிக்காவில் பணிபுரிகிறார்.
அவருடைய தொழில்நுட்ப அறிவு எனக்குக் கைகொடுக்கிறது. என்னிடம் படித்த மாணவர்கள் குறைந்த ஊதியத்தில் எனக்காகப் பணிபுரிகிறார்கள்.
தமிழ் மென்பொருள்கள் சார்ந்து இத்தனை வருடமும் நாம் இன்னமும் தமிழ்த் தட்டச்சு மற்றும் வேர்டு பிராசசர்களுக்காகத்தான் வேலை பார்க்கிறோமா? நுட்பம் நிறைய வளர்ந்துள்ள போது நாம் இன்னமும் அடிப்படையிலேயே இருக்கிறோமா?
30 ஆண்டுகளுக்குமுன்பு தமிழ்த் தட்டச்சு, எழுத்துருக் குறியீடு ஆகியவை பெரும் பிரச்சினையாக இருந்தன என்பது உண்மை. இப்போது அப்பிரச்சினை முழுவதுமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூறலாம்.

வேர்டு புராசர் என்னும் சொல்லாளர் மென்பொருள்
ஆனால் வேர்டு புராசர் என்னும் சொல்லாளர் மென்பொருள் உருவாக்கத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன.
ஒரு கோப்பை அனைத்து நிலைகளிலும் – சொல், தொடர், பொருண்மை, சந்தி என்னும் பல நிலைகளிலும் – சரிபார்த்து, தவறுகள் இருந்தால் திருத்தித்தரும் மென்பொருள் வளர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை.
ஆங்கிலத்தில் Grammarly போன்று பல சொல்லாளர் மென்பொருள்கள் உள்ளன. அதுபோன்று தமிழுக்கு இன்று இல்லை என்பதே உண்மை.
அதற்குக் காரணம், இன்றைய எழுத்துத்தமிழின் இலக்கணம் முழுமையாக ஆய்வுசெய்யப்படவில்லை; ஒரு முழுமையான அகராதி வெளிவரவில்லை.
இவையெல்லாம் வளர்ச்சியடையும்போதுதான் தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள்களின் வளர்ச்சி உயர்நிலையை எட்டும்.
இன்றைய நவீன நுட்பங்களோடு தமிழ்க் கணிமை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது? உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்.
எழுத்துரு, தட்டச்சு போன்ற மென்பொருள் உருவாக்கங்கள் முழுக்க முழுக்கக் கணினியின் தொழில்நுட்பத்தைப் பொறுத்துள்ளன. ஆனால் தமிழ்மொழியைக் கணினியானது முழுமையாகப் புரிந்துகொண்டு, நமக்குத் தேவையான மொழிசார்ந்த பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தமிழ்க் கணிமை வளரவில்லை.
தமிழ் இலக்கணம், மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிற கணினிமொழியியல், இயற்கைமொழி ஆய்வு போன்ற மொழிசார்ந்த அறிவியல் தமிழ்நாட்டில் காலூன்றவில்லை. தமிழ்நாட்டில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இதற்கான தனித்துறை இல்லை என்பது ஏமாற்றம் தரும் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதக் கணினிமொழியியல் துறை நீடிக்கிறது. ஆங்காங்கே மொழியியல், கணினியியல் துறைகளைச் சேர்ந்தவர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் சில ஆய்வு மென்பொருள்களும் வெளிவந்துள்ளனவேதவிர, மக்களைச் சென்றடையும் தமிழ் மென்பொருள்கள் தேவையான அளவுக்கு உருவாக்கப்படவில்லை. இது ஒரு கசப்பான உண்மை.
எவ்வாறு வேறுபடுகின்றன
தற்போது உள்ள தமிழ் நுட்பச் சந்தையில் உள்ள மற்ற தமிழ் மென்பொருள்களிலிருந்து உங்கள் தயாரிப்புகள் எவ்வாறு வேறுபடுகின்றன? உங்கள் AI மற்றும் NLP தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
எங்கள் நிறுவனம் இரண்டு முனைகளில் பணிசெய்கின்றது. ஒன்று, கணினிமொழியியல் அடிப்படையில் கணினித்தமிழுக்கான ஆய்வு மென்பொருள்களை உருவாக்கிவருகின்றது. சொல் பகுப்பாய்வு, தொடர் பகுப்பாய்வு, சந்தி அல்லது ஒற்று போன்ற தமிழ் அமைப்பு சார்ந்த கணினி ஆய்வு மென்பொருள்களை உருவாக்கும் பணிகள் இதில் அடங்கும்.
இப்பணி வளர்ச்சியடையும்போதுதான் தமிழ்க் கணிமை உயர்கட்டத்திற்குச் செல்லமுடியும். மற்றொன்று, இவற்றை அடிப்படையாகக்கொண்டு, மக்களுக்குப் பயன்படும் சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, பலவகைப்பட்ட மின்னகராதிகள் போன்றவற்றை உருவாக்கிவருகிறோம்.
இதுவரை நீங்கள் உருவாக்கியுள்ள மென்பொருள்கள் தமிழ் மக்கள் சமுதாயத்திற்கு எவ்வாறு பங்களிக்கும்? கல்வி, வேலைவாய்ப்பு, வரலாறு மற்றும் மொழிப் பாதுகாப்பில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
நாங்கள் உருவாக்கியுள்ள மென்பொருள்களில் நேரடியாக மக்கள் பயன்பாட்டுக்குச் சென்றடைவது ‘மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர்’ மென்பொருளாகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எம் எஸ் வோர்டுக்கு இணையான மென்பொருள் இது. உலக அளவிலான கணினித்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தி இதை உருவாக்கியுள்ளோம்.
இந்த மென்பொருளுக்குத் தமிழ் நாடு அரசின் ‘முதலமைச்சர் கணினித்தமிழ் விருது’ வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் அச்சு வடிவிலான ஆட்சிச்சொல் அகராதி, அயற்சொல் அகராதி, இணைச்சொல், எதிர்ச்சொல் அகராதி ஆகியவற்றைப் பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும்வகையில் மின்னகராதிகளாக மாற்றி அளித்துள்ளோம்.
சிங்கப்பூர்க் கல்வி அமைச்சகத்தின் தமிழ்மொழிப் பிரிவுக்காக மூன்று பெரிய கணினித் திட்டங்களைச் செயல்படுத்தி அளித்துள்ளோம். ஒன்று, சிங்கப்பூர் எழுத்துத்தமிழ் தரவக ஆய்வு மென்பொருள்.
தரவக மொழியியல் அடிப்படையில் 10 இலட்சம் சொற்களையும் தமிழைப் பல நிலைகளில் ஆய்வுசெய்து தரும் கருவிகளையும் கொண்ட ஒரு மிகப்பெரிய தரவக மென்பொருளை உருவாக்கி அளித்துள்ளோம்.
அடுத்து, தமிழ் – ஆங்கில மின்னகராதி ஒன்றின் முதல் பகுதியை நிறைவேற்றிக்கொடுத்துள்ளோம். மூன்றாவதாக, சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்களுக்குப் பயன்படும் ‘தமிழ் இலக்கண மின்சோலை’ என்னும் தமிழுக்கான கணினிவழித் தமிழ் இலக்கணம் ஒன்றை ஒலியொளிக் காட்சிகளோடு உருவாக்கி அளித்துள்ளோம்.
தமிழ்ச் சந்தி இலக்கணத்தைக் கணினிவழி எளிமையாகக் கற்றுக்கொடுக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளோம்.
செய்யறிவுத்திறன் (AI) தொழில்நுட்பத்தில்...
தற்போது தமிழ்ச்சொல்லாளர் மென்பொருளைச் செய்யறிவுத்திறன் (AI) தொழில்நுட்பத்தில் வளர்த்தெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அது வெளிவரும். செய்யறிவுத்திறன் பின்புலமான பெரும் மொழிமாதிரியைத் (Large Language Model – LLM) தமிழுக்குப் பயன்படும் வகையில் வளர்த்தெடுக்கும் முதல் தமிழ் மென்பொருளாக இது அமையும்.
உலகளவில் 8 கோடி தமிழர்களுக்கு உங்கள் மென்பொருள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்? சந்தையின் அளவு மற்றும் வளர்ச்சி சாத்தியக்கூறுகள் என்ன?
தமிழ் எழுதுவதில் தவறு இருக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தமிழர்கள் தமிழைப் பிழையின்றித் தட்டச்சு செய்ய எங்கள் மென்பொருள் மிகவும் உதவும். பொதுவான பயனாளர்களின் சந்தை தொடர்பான வினாவுக்கான விடை கசப்பாகத்தான் இருக்கும்.

தனிநபர்ச் சந்தை மிக மிகக் குறைவு. தனிநபர்ச் சந்தையில் ஆயிரம் படிகளுக்கு உட்பட்டே கடந்த 15 ஆண்டுகளில் ‘மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர்’ மென்பொருள் விற்பனையாகியுள்ளது.
2015-இல் இந்த மென்பொருளுக்குத் தமிழ்நாடு அரசு விருது வழங்கியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் அன்றைய இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்காகப் பத்தாயிரம் படிகள் வாங்கி உதவினார்.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்குச் சில இலட்சம் படிகள் தேவை. எனவே இந்த மென்பொருளை அத்துறை வாங்கும் என்று கருதி, மிக மிகக் குறைந்த விலையில் (ரூ.300) அளித்தோம். ஆனால் எதிர்பார்த்த மாதிரி வாங்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அரசின் படிகள் ஏறி இறங்கிவருகிறோம். ஆனால் பயன் இல்லை.
தமிழ் மென்பொருளுக்குத் தனிநபர்ச் சந்தை என்பது மிக மிகக் குறைவு. எனவேதான் பன்னாட்டு நிறுவனங்கள்கூடத் தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் பெரிதும் ஈடுபடுவதில்லை. சந்தை இருந்தால்தான் அவை இதில் ஈடுபடும். மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், இங்குள்ள எங்களைப் போன்ற சிறு நிறுவனங்களின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.
மேலும் இலவசமாக மென்பொருள்களைப் பெற்றுப் பயன்படுத்தலாம் என்னும் மக்களின் மனப்பான்மை தமிழ் மென்பொருள் சந்தையை மிகவும் பாதிக்கிறது. 8 கோடி தமிழர்களைக் கொண்ட சமுதாயத்தில் தமிழ் மென்பொருள்களை விலைகொடுத்து வாங்குபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக்கூடத் தாண்டாது.
தமிழ் மொழிக்கான தொழில்நுட்பச் சந்தையின் தற்போதைய அளவு என்ன? எந்தெந்த நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன? அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?
தமிழ்ச்சொல்லாளர், மொழிபெயர்ப்பு போன்ற மொழிசார்ந்த தொழில்நுட்பச் சந்தை பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளூர் தமிழ்ச் சந்தையை மிகவும் பாதிக்கிறது. செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் அறிமுகமாகியவுடன் தமிழ் மென்பொருள்களுக்கான சந்தை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையைத்தான் அடைந்துள்ளது.
தமிழர்களின் பெரிய உற்பத்தி நிறுவனங்கள், அலுவலகங்கள், தமிழ் நாடு அரசு ஆகியவற்றின் முன்னெடுப்பே தமிழ் மென்பொருள்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும். இல்லையென்றால் வெறும் ஆய்வுகளோடு கணினித் தமிழ் நின்றுவிடும்.
தமிழ் மொழி மென்பொருளின் முக்கிய வாடிக்கையாளர்கள் யார்? (கல்வி நிறுவனங்கள், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள்) ஒவ்வொரு பிரிவின் தேவைகள் மற்றும் கொள்முதல் சக்தி என்ன?
இதழ்கள், நூல்கள் வெளியீட்டாளர்கள், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவையே தமிழ் மென்பொருள்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆவர்.
தமிழ்ப் பயன்படுத்தம் வளர்ச்சியிடையும்போதுதான் மேற்கூறிய நிறுவனங்களும் தமிழ் மென்பொருள்களைப் பயன்படுத்தும். தற்போது தமிழகத்தில் மேற்கூறிய துறைகளில் ஆங்கில ஆதிக்கமே உள்ளது. தமிழ்ப் பயன்படுத்தம் மிக மிகக் குறைவு.

சவால்கள்
Google Tamil, Microsoft Tamil tools, மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களின் இலவசச் சேவைகளுடன் எவ்வாறு போட்டியிடுவீர்கள்? இந்தச் சந்தையின் முக்கியச் சவால்கள் என்ன?
இது மிகவும் முக்கியமான வினா. இன்றைய நிலையில் பன்னாட்டு நிறுவனங்களின் இலவசச் சேவைகள் உள்ளூர்த் தமிழ்ச் சந்தையை மிகவும் பாதித்துள்ளது.
அதுவும் குறிப்பாக, செய்யறிவுத்திறன் மென்பொருள்களின் வருகைக்குப்பிறகு உள்ளூர் தமிழ்ச்சந்தை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு தொழில்நிறுவனங்களின் மிக உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் போட்டிபோட இங்குள்ள எங்களைப்போன்ற சிறு நிறுவனங்களால் முடியாது.

பிற வணிகங்களில் இன்று தமிழ்நாட்டில் உள்ளூர் வணிக நிறுவனங்களை அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மிகவும் பாதித்துள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.
தமிழ் உணர்வு, தமிழ்ப் பயன்படுத்தம், தமிழ் மென்பொருள் உருவாக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி, உள்ளூர்த் தமிழ் மென்பொருள்களை வாங்குவதற்கான அரசு ஊக்குவிப்பு போன்றவையே உள்ளூர்த் தமிழ் மென்பொருள்களின் சந்தைக்கு வழிவகுக்கும்.
தமிழ்ச் சந்தையில் மென்பொருளுக்கான விலை நிர்ணய மாதிரி என்ன? வாடிக்கையாளர்கள் எவ்வளவு செலவிடத் தயாராக உள்ளனர்? பிரீமியம் மற்றும் இலவசச் சேவைகளின் சமநிலை எவ்வாறு பராமரிப்பது?
தமிழ் மென்பொருள்கள் உருவாக்கத்திற்கும் ஆங்கில மென்பொருள்களின் உருவாக்கத்திற்கான செலவே ஆகும் என்பது உண்மை. ஆனால் தமிழ் மென்பொருள்களை வாங்குபவர்கள் மிகக் குறைந்த விலையில் பெறுவதற்கே விரும்புகிறார்கள்.
ஒரு திரைப்படத்தைக் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் செலவுசெய்யும் தமிழர்கள், ஒரு தமிழ் மென்பொருளை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கத் தயங்குகிறார்கள். மேலும் இலவசமாகப் பெறவே விரும்புகிறார்கள்.
உங்கள் தயாரிப்புகளை எவ்வாறு தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
நான் ஒரு தமிழாசிரியராகவும் மொழியியல் ஆய்வாளராகவும் இருப்பதால் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களுடனும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளின் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு இருக்கிறது.
இத்தொடர்பு ஓரளவு எங்களுக்கு உதவுகிறது. ‘மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர்’ மென்பொருள் முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும்தான் வெளியிடப்பட்டது.

தொலைநோக்கு திட்டம்
உங்கள் நிறுவனத்தின் தொலைநோக்கு என்ன? அடுத்த 5-10 ஆண்டுகளில் தமிழ் மொழி தொழில்நுட்பத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறீர்கள்?
கணினிமொழியியலின் அடுத்த கட்ட வளர்ச்சியே இன்றைய செய்யறிவுத்திறன் மென்பொருள் வளர்ச்சி. எனவே, செய்யறிவுத்திறன் தொழில்நுட்பத்தைத் தமிழுக்குச் செயல்படுத்துவதே எங்கள் நிறுவனத்தின் தொலைநோக்கு.
இதில் எங்களுக்கு ஐயம் இல்லை. கணினிமொழியியல் அடிப்படையோடு செய்யறிவுத்திறனின் தொழில்நுட்பத்தையும் இணைத்து, தமிழ் மென்பொருள்கள் உருவாக்கத்தையும் அதற்குத் தேவையான ஆய்வையும் கொண்டுசெல்லவேண்டும். ஆங்கிலம்.
சீனம் போன்ற மொழிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து வகை மென்பொருள்களும் தமிழுக்கும் உருவாக்கப்படவேண்டும். தமிழ் இலக்கணம், மொழியியல், கணினிமொழியியல் துறையில் 50 ஆண்டுகளுக்குமேலாக ஈடுபட்டுவருகிற நான் எங்களது குழுவினருடன் இணைந்து மேற்கூறிய வளர்ச்சியைத் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
அரசு செய்யவேண்டியது . . .
தமிழை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல அரசாங்கம் என்ன செய்யவேண்டும்? பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அரசாங்கம் செய்யவேண்டியது: கணினிமொழியியல் அறிவியலைத் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தவேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும். அதற்கான மனித வளத்தைப் பெருக்கவேண்டும்.

அடுத்து, தமிழின் பயன்படுத்தத்தை அனைத்துத் தளங்களிலும் – கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முயலவேண்டும்.
பொதுமக்களும் தங்களின் தமிழ் பயன்படுத்தத்தை அதிகரிப்பதோடு, தமிழ் மென்பொருள்களைப் பணம் கொடுத்து வாங்கி உதவ வேண்டும். ‘இலவசத் தமிழ் மென்பொருள்’ என்னும் மனப்பான்மையைக் கைவிடவேண்டும்.
தமிழ்நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு இயந்திரத்திலும் தமிழ் இருக்கவேண்டும் என்று அரசாங்கம் ஒரு ஆணை இட்டால், தமிழ் மிகப்பெரும் வளர்ச்சி பெறும்.
இணையத்தளங்களின் பெயர்கள் தற்போது தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் ஒவ்வொரு நிறுவனமும் தமிழ் இணையப் பெயர்களைப் பயன்படுத்தவேண்டும் என்று அரசு ஆணையிட்டால், தமிழ் நன்கு வளர்ச்சி பெறும்.