'StartUp' சாகசம் 8 : `ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் ஸ்டார்ட்நெட்... சிறு நகரங்களில் இதன் தேவை என்ன?!’
இந்தியா உலகின் 3வது பெரிய புதிய தொழில்முனைவு கொண்டுள்ள நாடாக விளங்கிவருகிறது. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் 7.68 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை நான் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உலக அளவில் 3வது இடத்தில் நாம் இருக்கிறோம். 2024 முடிவின் போது 1.50 லட்சம் புதிய தொழில்முனைவு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கிறது . அவை இதுவரை 35-50 பில்லியன் முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன. இதில் யுனிகார்ன் நிறுவனங்கள் 120-ம் அடங்கும்
தற்சமயம் இந்தியாவின் பெருநகரங்களில் புதிய தொழில்முனைவின் ஆதிக்கம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 49% இரண்டாம் நிலை மற்றும் , 3ம் நிலை நகரங்களில் இருந்து செயல்படுகின்றன. இந்தியாவின் சிறு நகரங்கள்தான் புதிய தொழில்முனைவு உணர்வுடன் ஒளிரப்போகின்றன என்பது ஓரளவு புலப்பட ஆரம்பித்துள்ளன.
உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நம்பிக்கையுடனும், டிஜிட்டல் புரட்சியின் தூண்டுதலுடனும், புதிய நிதி ஆதாரங்களின் உதவியுடனும், வளர்ந்து வரும் 2,3,4ம் நிலை நகரங்களில் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், ஆற்றல், விமானம்,விண்வெளி, ப்ளாக்செயின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய நிறுவனங்களை தொடங்கி வருகின்றனர்.
பெரு நகரங்களின் அதிகரித்து வரும் கட்டட வாடகை , தொழிலாளர் செலவுகள், போக்குவரத்து நெரிசல், குடும்பங்களுடன் நேரம் செலவிட முடியாமை என பல்வேறு காரணங்களால் பெரும் நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்பவர்களும் திண்டாடுவதால் எல்லா நிறுவனங்களும் வீட்டில் இருந்து பணி செய்ய வைக்கவும், செலவைக் குறைக்கும் நோக்கில் சிறு நகரங்களை நோக்கிப்பயணிக்கின்றன.
4ம் தலைமுறை மற்றும் 5ம் தலைமுறை இணைய வசதி 80% இடங்களில் கிடைப்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் நிறுவனத்தை நடத்தலாம், சரியான இணைய இணைப்பு போதும் என்ற நிலை உருவாக்கியுள்ளது.
Google நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இன்னமும் 80% மக்கள் சிறு குறு நகரங்களில்தான் வசிக்கின்றனர். மிதமுள்ள 20% தான் பெருநகரங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்காகாத்தான் 5 நிமிட டெலிவரி, 10 நிமிட டெலிவரி என பல நிறுவனங்கள் துவங்கப்பட்டள்ளன. ஆனால் இன்னமும் 80% மக்கள் வசிக்கும் 2,3,4ம் நிலை நகரங்களில் இன்னமும் வாய்ப்புகள் அப்படியே உள்ளன. அதே சமயம் வாய்ப்புகள் இன்னமும் கண்டறியப்படாமலும் இருக்கிறது. அதோடு இந்திய அரசும் ஸ்டார்ட்அப் இந்தியா, உள்பட பல வகையான திட்டங்கள் வழியே மத்திய அரசும் தொழில் முனைவை ஊக்குவிக்கின்றன.
இதுமட்டுமலல்லாமல் மாநில அரசுகளும் சிறப்பு முயற்சி எடுத்து வருகிறது. கர்நாடகா மாநிலம் 25,000 புதிய தொழில்முனைவு நிறுவனங்களை துவங்க இலக்கு நிர்ணயித்துள்ளது
மத்திய பிரதேசம்: குவாலியர், போபால், இந்தூர், ஜபல்பூர் நகரங்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது
தமிழ்நாடும் அரசும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (StartupTN ) போன்ற முயற்சிகள் மூலம் தொழில் தொடங்குவோருக்கு ஏற்ற சூழலை உருவாக்கி வருகிறது. இந்த முயற்சிகள் வழிகாட்டுதல், நிதி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஏற்கனவே தமிழ்நாடு வாகனம், மென்பொருள் ஒரு சேவை எனப்படும் SAAS (Software As A Service) போன்றவற்றில் உலகின் சிறந்த இடமாக மாறிவருகிறது. ஆனாலும் 2,3,4ம் நிலை நகரங்களில் புதிய தொழில்முனைவின் தேவை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது
குறைந்த செயல்பாட்டு செலவுகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள், உள்ளூர் தீர்வுகள் மற்றும் இப்போது ஏற்பட்டு வரும் டிஜிட்டல் புரட்சி ஆகியவற்றின் அடிப்படையில் 2,3,4ம் நிலை நகரங்கள் இந்தியாவின் புதிய வளர்ச்சி மையங்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வளர்ச்சி மையங்களாக உருவாகும் நேரத்தில் அந்த புதிய தொழில்முனைவு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் உள்ளுர் தொழில் முனைவு ஊக்குவிப்பு நிறுவனங்கள் இருப்பது அவசியம். ஏனெனில் எல்லாவற்றையும் அரசே செய்ய இயலாது, எனும்போது அந்தந்த நகரங்களைச்சுற்றி உள்ள புதிய தொழில்முனைவு நிறுவனங்களுக்கு வழிகாட்ட, கிராமங்களில் உள்ள திறன் வாய்ந்தவர்களை கண்டறிந்து வெளிகொணர்ந்து அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சேர்த்தல் என பல வகையான பணிகள் உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு புத்தொழில் ஊக்குவிப்பு நிறுவனம்தான் ஸ்டார்ட்நெட்.
ஸ்டார்ட்நெட் சேலத்தை மையமாகக்கொண்டு சிறு நகரங்களில் உள்ள வளங்கள், வழிகாட்டுதல் மற்றும் நிதி ஆதரவு போன்றவை குறைவாக இருந்தாலும், புத்தொழில் நிறுவனங்களின் மனித வள சவால்கள், வணிக வாய்ப்புகள், முதலீடுகள், அறிமுக நிகழ்ச்சிகள் போன்றவற்றை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஈரோடு போன்ற மாவட்டங்களில் செய்துவருகிறது.
ஸ்டார்ட்நெட் அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான எம்.கே. இளங்கோ உடனான நேர்க்காணலில் நமது கேள்வியும் இளங்கோவின் பதிலும் இனி...
``சேலம் போன்ற வளர்ந்து வரும் 3ம் நிலை நகரங்களில் ஸ்டார்ட்நெட் எப்படி செயல்படுகிறது?. இந்த சந்தைகளில் நீங்கள் கண்டறிந்த குறிப்பிட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ன, எதனால் இந்த நிறுவனம் உருவானது?”
``இந்த எண்ணம் ஆரம்பித்ததே டீ கடையில்தான், சேலத்தில் உள்ள பல தொழில் முனைவு நிறுவனங்களின் நிறுவனர்களோடு அமர்ந்து விவாதிப்போம். அப்படி தொடர்ந்து விவாதித்துக்கொண்டு வரும்போது தோன்றியதுதான் சேலத்திற்கு என புதிய தொழில் ஊக்குவிப்பு அமைப்பு அவசியம், அதைசெய்வோம் என நாங்கள் முயன்றோம். இப்போது இதில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இப்படித்தான் ஸ்டார்ட்நெட் உருவானது.
சேலத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள வாய்ப்புகள் இன்னமும் கண்டறிப்படவேயில்லை. இவற்றையும் நாம் சந்தையாக எடுத்துக்கொண்டால் இந்தசந்தைகளில் உள்ள மகத்தான ஆற்றல் மற்றும் அறியப்படாத திறமை அப்படியே இருக்கிறது. பெருநகரப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது 3-ம் நிலை நகரங்களில் உள்ள சந்தைகளுக்கான அணுகல், வழிகாட்டுதல் மற்றும் முதலீடு கிடைத்தால் இங்கிருந்து இயங்கும் நிறுவனங்களுக்கு அலுவலக இயக்கச் செலவுகள் எளிதாகும். அதோடு கண்டறியப்படாத சந்தையிலிருந்து தனித்துவமான புதிய தொழில்முனைவுகளையும் நம்மால் பெற முடியும். ஸ்டார்ட்நெட் தமிழ்நாட்டின் புதிய தொழில்முனைவில் இந்த சிறிய நகரங்களை எதிர்கால வளர்ச்சியின் இயந்திரங்களாகக் கருதுகிறது.”
``2,3,4ம் நிலை நகரங்களில் புதிய தொழில்முனைவோரை ஆதரிக்க அவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வீர்கள், அவர்களை தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் செயல்முறையை விளக்க முடியுமா? சிறிய நகரங்களின் தனித்துவமான சூழலைக் கருத்தில் கொண்டு, நீங்கள் தேடும் முக்கிய அளவுகோல்கள் என்ன?"
``உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி முறையை கண்டறிவது அல்லது ஏற்கனவே உள்ள சந்தையில் புதிய கண்டுபிடிப்புகள் வழியே இன்னொரு சந்தையை உருவாக்கி , சந்தையை விரிவாக்கும் புதுமையான யோசனைகளை கொண்டவர்கள் கண்டறிவது,
- கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள நிறுவனர்களோடு இணைவது
- வேலை உருவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் வைத்திருப்பவர்களை மேலும் வலுப்படுத்துவது
- AI, SaaS, D2C, விண்வெளி, வேளாண்மை, ஆட்டோ, ஜவுளி மற்றும் பல போன்ற துறைகளில் ஸ்டார்ட்நெட் கவனம் செலுத்திவருகிறது. இதுமட்டுமல்ல , இச்சிறு குறு நகரங்களில் நம்பிக்கைக்குரிய தொழில்முனைவோரைக் கண்டறிய வழக்கமான ஸ்டார்ட்அப் நிகழ்வுகள், பிட்ச் அமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளை நடத்துகிறது. திறமையை அடையாளம் காண அதன் உள்ளூர் கூட்டாளிகளின் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளோம். இதனால் இது சாத்தியமாகிறது”
``பெருநகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உங்கள் நிகழ்வுகள் மற்றும் ஆதரவு திட்டங்களை எவ்வாறு உங்கள் புதிய தொழில் முனைவு சமுகத்திற்கு அளித்து உதவுகிறீர்கள், அவை பெருநகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப்களிலிருந்து வேறுபடலாம் தானே?"
``உள்ளூர் தொழில்துறை பலங்கள் மற்றும் கலாச்சார சூழலில் கவனம் செலுத்துதல், தமிழில் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல், சிறிய நகரங்களிலிருந்து இயங்குபவர்களை சவால்களைப் புரிந்துகொள்ளும் வழிகாட்டு/ஆலோசகர்களுடன் இந்த நிறுவனங்களை இணைத்தல், உள்ளூர் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை கூட்டாளியாக ஆக்கி உள்ளுர் சந்தையை அதிகரித்தல், சந்தை அணுகலை உறுதி செய்ய இணைய வழியாகவும் திட்டங்களை வழங்குதல், இந்த நிறுவனங்களுக்காகவே அவ்வப்போது பெரிய நிகழ்வுகளையும், மாநாடுகளையம் நடத்தி அதன் வழியாகவும் எங்கள் அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு திட்டப்பணிகளை வாங்கித்தருகின்றோம். இது சவலானாது, ஆனால் இன்றியமையாதது, அதனால் ஸ்டார்ட்நெட் சிறப்பாக இதில் செயல்பட்டு வருகிறது. “
``ஸ்டார்நெட்டிற்கு உள்ளூர் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது? உங்கள் புதிய தொழில்முனைவு ஊக்குவிப்பு அமைப்பை வலுப்படுத்த சேலத்தில் உள்ள நிறுவனங்கள், கல்வி மையங்களுடன் நீங்கள் எவ்வாறு பணியாற்றுகிறீர்கள்?”
``ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த உள்ளூர் ஒத்துழைப்பு என்பது நன்றாகவேஇருந்தாலும் இன்னமும் தேவைப்படுகிறது.
சோனா கல்லூரி, சண்முகா கல்வி நிறுவனங்கள் போன்ற கல்வி நிறுவனங்கள் இதற்குசிறந்த ஒத்துழைப்பை வழங்குகின்றன.
அரசாங்க முயற்சிகளுடன் இணைந்து செயல்பட The StartupTN, iTNT ஒத்துழைப்பும் இருக்கிறது.
தொழில்முனைவோர் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க சிறு நிறுவனங்களும் ஒத்துழைக்கின்றன.
இந்த ஒத்துழைப்புகள் ஸ்டார்ட்அப் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவுகின்றன.”
``எதிர்காலத்தில், 2,3,4ம் நிலை நகரங்களில் புதிய தொழில்முனைவு ஊக்குவிப்பு அமைப்புகளின் எதிர்காலத்தை நீங்கள் எவ்வாறு கற்பனை செய்கிறீர்கள்? என்ன முன்னேற்றங்கள் அல்லது மாற்றங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"
``அதிகரித்து வரும் இணைய பயன்பாடு, இணையத்தின் வேகம் AI போன்ற தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தக் கற்றுக்கொள்வது.
- உள்ளூரில் உள்ள திறமையைப்பயன்படுத்தி துறை சார்ந்த கிளஸ்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது
- மாநில அரசாங்கங்களின் நிதி ஆதரவு
- இன்னமும் அதிகமாக பயன்படுத்தப்படாத சந்தைகளில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்தல் முதலீடுசெய்ய வைத்தல்
- இப்போதிருக்கும் மனித வளங்களை பெருநகரங்களிலிருந்து சிறிய நகரங்களுக்கு இடம்பெயர்வை ஏற்படுத்தி அப்படியே தலைகீழாக மாற்றுதல் அவ்வாறு மாற்றினால் கழிவுகள் குறையும், கழிவு மேலாண்மையும் எளிதாகும்.
இந்த சிறுநகரங்கள் அவற்றின் புதுமை திறனை வெளிப்படுத்துவதால், அவை அதிக வளங்களை ஈர்க்கும் , அதோடு புதிய தொழில்முனைவு ஊக்குவிப்புகளால் இந்தியாவின் நிலப்பரப்பின் புதிய எல்லைகள் அதிகரிக்கும்”
``ஸ்டார்நெட் இலட்சியம், எதிர்காலத்திட்டம் என்ன?"
``2030க்குள் மாநிலத்தில் 100,000 ஸ்டார்ட்அப்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த இலக்கை அடைவதில் AI மற்றும் புதுமையின் சக்தி மிக முக்கியமானதாக இருக்கும் என்று இந்த அமைப்பு நம்புகிறது.
"தமிழ்நாட்டின் முழுமையான தகவல்" என்ற திட்டத்தின் அடிப்படையில் தரவு அறிவியலின் துணை கொண்ட ஸ்டார்ட்நெட் ஒருபகுதியாக விரிவான ஊடக மற்றும் நிகழ்வு நிறுவனமாக உருவாகி வருகிறது. இது ஐந்து முக்கிய பிரிவுகள் மூலம் செயல்படுகிறது:
1. ஸ்டார்ட்நெட்எக்ஸ் (நிகழ்வுகள் மற்றும் ஊடகங்கள்), 2.ஸ்டார்ட்நெட் ஆராய்ச்சி (கல்வி முயற்சிகள்),
3.ஸ்டார்ட்நெட் சந்தைகள் (துறை சார்ந்த கண்காட்சிகள்),
4.ஸ்டார்ட்நெட் விழாக்கள் (தொழில்நுட்ப சமூகங்களை மையமாகக் கொண்டது)
5.ஸ்டார்ட்நெட் AI (தமிழ்நாட்டின் அறிவு இயந்திரத்தை சொந்தமாக உருவாக்குதல்).
இந்த அமைப்பு D2C.Connect (650+ பங்கேற்பாளர்களுடன் இந்தியாவின் முதல் D2C மாநாடு) மற்றும் GenAI.Connect (500+ பங்கேற்பாளர்களுடன் ஒரு AI உச்சிமாநாடு) போன்ற பல வெற்றிகரமான பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை தேசிய வரைபடத்தில் இடம் பெற உதவியுள்ளது
SaaS.Connect 2025 என்ற பெயரில்நாங்கள் நடத்தும் மாநாடு கோயம்புத்தூரில் உள்ள PSG மாநாட்டு மையத்தில் பிப்ரவரி 22 – 23, 2025 அன்று நடைபெறும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய SaaS கூட்டமாக அதே சமயம் 2,3,4ம் நிலை நகரங்களில் இருப்பவர்கள் மிகஅதிகமாக கலந்துகொள்ளும் ஒரு மாநாடாக இது விளங்கும்
ஸ்டார்ட்நெட்டின் பயணம் சேலத்தில் உள்ள எளிய தேநீர் கடை கூட்டங்களுடன் தொடங்கியது, அங்கு ஆர்வமுள்ள தொழில்முனைவோர் கருத்துக்களைப் பற்றி விவாதிக்க கூடுவார்கள். இந்த முறைசாரா கூட்டங்கள் இறுதியில் சேலம் ஸ்டார்ட்அப் கிளப்பாக பரிணமித்து ஸ்டார்ட்நெட்டின் சமூகம் சார்ந்த அணுகுமுறைக்கு அடித்தளம் அமைத்தன. அது இன்று பிறமாவட்டங்களிலும் இதுபோன்ற முயற்சிக்குவித்திடும். அதை பலரும் அவர்கள் மாவட்டத்தில் முன்னெடுத்து நமது மாநிலத்தையும், தேசத்தையும் தொழில்முனைவால் வலிமைபடுத்துவோம்"
``உங்கள் ஸ்டார்ட்நெட் முயற்சியின் தாக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் 2-3 வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?"
``டிவைன் ஃபுட்ஸ்: ஆரோக்கியமான சிற்றுண்டிகளை உற்பத்தி செய்யும் சேலத்தை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப். அவர்களின் ஆரம்பக்கால வளர்ச்சியில் ஸ்டார்ட்நெட்டின் வழிகாட்டுதலின் மூலம், அவர்கள் தங்கள் விநியோக வலையமைப்பை விரிவுபடுத்தி, தமிழ்நாடு அரசு மற்றும் நடிகை நயன்தாராவிடமிருந்து நிதியைப் பெற்றனர்.
தாமிராபோட்: சேலத்தைச் சேர்ந்த ஒரு மின்சார சார்ஜிங் இணைப்பான் புதிய தொழில்முனைவு நிறுவனம் . ஸ்டார்ட்நெட் அவர்களுக்கும் அவர்களின் ஆரம்பக்கட்டத்தில் வழிகாட்டுதலை வழங்கியது மற்றும் முதலீட்டாளர்களுடன் அவர்களை இணைத்தது, இது ஐஐடி மெட்ராஸ் உட்பட பல்வேறு இன்குபேஷனில் இருந்து ₹100 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டைப்பெற பெற வழிவகுத்தது என்றும் சொல்லலாம்.
இதுமட்டுமல்ல இன்னமும் பல நிறுவனங்களோடு இப்போது பணியாற்றிவருகின்றோம்.
ஜூம்லா என்ற CMSக்கு ஆரம்பக்கட்டத்தில் இருந்து பணியாற்றிய சசிவர்ணகுமார், டீல்ஆர்கா என்ற நிறுவனத்தை சேலத்திலிருந்து நடத்திவருகிறார். இங்கிருந்து பல நிறுவனங்களுக்கு மின் வணிகம் (eCommerce ) சார்ந்த பணிகளை செய்து வருகிறார். அவரும் எங்களோடு பயணித்துவருகிறார்.
நிறுவனங்களுக்கு முதலீடுகளை வாங்கித்தரும் பணியை சேலத்தை மையமாகக்கொண்டு இயங்கும் பிரேமானந்த் ( ஸ்டார் இன்சைட்ஸ்), ராசிபுரத்தில் மென்பொருள்நிறுவனத்தை நடத்திவரும் ஈஸ்வரன் இப்படி எல்லாமே சேலத்தைச்சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் வருபவர்கள்தான் எங்களோடு இணைந்துள்ளனர்."
இந்தியா மேலும் முன்னேற புதிய தொழில் முனைவு நிறுவனங்கள் மட்டும் போதாது. ஸ்டார்ட்நெட் போன்ற அமைப்புகளும் தேவை!