`எம் புள்ளைகளுக்காக எடுத்த முடிவு' - நீலகிரியின் முதல் பெண் நடத்துநர் சுகன்யா
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சுகன்யாவின் கணவர் கருப்பசாமி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த ஊதியத்தின் மூலமே குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் இழப்பால் குடும்பமே நிலைகுலைந்து தவித்திருக்கிறது.
இரண்டு பெண் குழந்தைகளையும் எப்படியாவது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டிய பொறுப்பை ஏற்றிருந்தார் சுகன்யா. தொழில் வாய்ப்புகள் குறைந்த நீலகிரியில் வாழ்வாதாரத்தை உருவாக்குவது சிரமம் என்பதை உணர்ந்து, தன்னுடைய கணவரின் நடத்துநர் பணியை தனக்கு வழங்கி உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனைப் பரிசீலனை செய்த போக்குவரத்து கழகம், நடத்துநராக பணியாற்ற அனைத்து தகுதியும் உரிமையும் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மார்க்கமாக இயக்கப்படும் அரசு பேருந்தின் நடத்துநராக பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் என்ற புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறார்.
இது குறித்து தெரிவித்துள்ள நடத்துநர் சுகன்யா, " வறுமையை சமாளிக்க எனக்கு இது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்ற இந்த முடிவை துணிந்து எடுத்தேன். வாரிசு அடிப்படையில் என்னுடைய கணவரின் அரசு பணியை எனக்கே வழங்குமாறு கேட்டேன். எந்த தடையும் இன்றி அரசும் எனக்கு பணி ஆணை வழங்கியது. பயணிகள், சக பணியாளர்கள், உள்ளூர் மக்கள் என அனைவரும் மிகவும் அன்பாகவே நடந்து கொள்கிறார்கள். நிறைய பெண்கள் இந்த துறையில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி" என்றார்.