செய்திகள் :

Suzhal 2 Review: நாட்டார் தெய்வங்களின் கனெக்ட் ஓகே; ஆனா இந்த ட்விஸ்ட்டுக்கு இவ்ளோவா இழுப்பீங்க?!

post image
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவான `சுழல்' வெப் சீரிஸின் முதல் சீசன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் வெளியாகியிருக்கிறது.

முதல் சீசனின் சக்கரை (கதிர்) , நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) போன்ற கதாபாத்திரங்களைத் தொடர்ச்சியாக வைத்து இந்த இரண்டாவது சீசனை விரித்திருக்கிறார்கள். முதல் சீசனில் தனது சித்தப்பாவைக் கொலை செய்ததாதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் நந்தினி. அவருக்கு விடுதலை வாங்கித் தரப் பல முயற்சிகளை எடுக்கிறார் சக்கரை. இந்த வழக்கை சக்கரையின் வளர்ப்புத் தந்தை ஸ்தானத்திலிருக்கும் வழக்கறிஞர் செல்லப்பா (லால்) எடுத்து நடத்துகிறார். திடீரென ஒரு நாள் செல்லப்பா அவருடைய பிரைவேட் காட்டேஜில் இறந்து கிடக்கிறார். அவரின் மரணம் கண்டு அதிர்ச்சியடையும் சக்கரை, இது கொலையா, தற்கொலையா எனத் தீவிர விசாரணையில் இறங்குகிறார்.

Suzhal 2 Review

செல்லப்பாவின் உடல் இருந்த அதே காட்டேஜில் முத்து (கெளரி கிஷன்) கையில் துப்பாக்கியுடன் மறைந்திருக்கிறார். இவர்தான் கொலை செய்திருக்கக்கூடும் என விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்தடுத்து அருகிலிருக்கும் வெவ்வேறு காவல் நிலையங்களில் 7 பெண்கள் செல்லப்பாவை தாங்களே கொலை செய்ததாகச் சொல்லிச் சரணடைகிறார்கள். இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாகச் செல்லப்பாவின் மரணத்திற்கான காரணங்களைத் தேடுகிறார் சக்கரை. யார் கொலை செய்தது, மொத்தமாகக் காவல் நிலையத்தில் இருக்கும் 8 பெண்களுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு என்பதை எட்டு எபிசோடுகளாக விரித்துக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குநர் பிரம்மாவும், சர்ஜுன் கே.எம்-மும் இரண்டாவது சீசனின் எபிசோடுகளை இயக்கியிருக்கிறார்கள்.

சக காவல் அதிகாரிகளுடனான ஈகோ, கட்டுக்கடங்காத கோபம் எனக் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் முதல் சீசனைத் தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் மிளிர்கிறார் கதிர். குற்றவுணர்ச்சியின் சுழலில் சிக்கித் தவிப்பவராக மனதில் பதியும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமூகத்தின் அக்கறை கொண்டு உழைப்பவராகவும், துணிந்து பல செயல்களை நிகழ்த்துபவராக மீண்டும் நடிப்பில் ஆழத்தைத் தொட்டிருக்கிறார் லால். சக்கரையுடன் பயணிக்கும் காவல் அதிகாரியாக மூர்த்தி கதாபாத்திரத்தில் சரவணன் சுனாமியில் நீந்தும் திமிங்கிலமாக அதிரடி காட்டியிருக்கிறார். சக்கரையுடனான ஈகோ சண்டை, அதனை மறந்து அடுத்த நிமிடமே எதுவுமே நடக்காதது போல வழக்கிற்குள் திரும்ப வருவது என இரண்டு பக்கங்களையும் எதார்த்தமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.

Suzhal 2 Review

செல்லப்பாவைக் கொலை செய்ததாக சிறையிலிருக்கும் எட்டுப் பெண்களும் நடிப்பில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். இதில் முத்துவாக கெளரி கிஷன், நாச்சியாக சம்யுக்தா, முப்பியாக மோனிஷா ப்ளஸி ஆகியோர் பழிவாங்கத் துடிப்பவர்களாக மிரட்டியிருக்கிறார்கள். அதுவும் க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளுக்கு பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கும் இந்த எட்டுப் பெண்களுக்கும் விசில் அடிக்கலாம்! சிறிது நேரம் வந்தாலும் பெர்ஃபாமராக தன்னை நிரூபித்திருக்கிறார் மஞ்சிமா மோகன். மற்றொரு பக்கம் கயல் சந்திரன், அமித் பார்கவ் ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை.

திரைக்கதையாசிரியர்கள் புஷ்கர் - காயத்ரி பல காட்சிகளுக்குப் பல அடுக்குகளைக் காட்டி கடலளவு ஆழத்தைத் தொட்டியிருக்கிறார்கள். இறுதியில் நிகழும் திருப்பங்களுக்கு முந்தைய எபிசோடுகளில் சிறு சிறு குறியீடுகளை அமைத்த விதம், த்ரில்லருக்கான சில முடிச்சுகளை இறுக்கமாகப் போட்ட விதம் போன்றவை எழுத்தின் முதிர்ச்சிக்கான சான்றுகள். கதையின் போக்கிலேயே பெண்கள் சிறைகளில் சந்திக்கும் கொடுமைகள், திருநங்கைகள் அங்குச் சந்திக்கும் போராட்டங்கள் என அறிந்திடாத பல பக்கங்களைத் துருத்தலின்றி சொன்ன விதம் பாராட்டத்தக்கது. இவற்றை எல்லாம் தாண்டி கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை உவமைகளின் வழியே எடுத்துரைத்த மேட்டரும் அழகு! நாட்டர் தெய்வங்களின் கதைகளை சீரிஸின் காட்சிகளோடு கனெக்ட் செய்து கொண்டு சென்ற ரகமும் களத்திற்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறது.

Suzhal 2 Review

ஆனால், இப்படியான கதைசொல்லலில் முதல் சீசனில் இருந்த அந்தப் பரபரப்பும், திகிலும், அமானுஷ்ய உணர்வும் இதில் கடலின் காற்றோடு கலந்து மிஸ் ஆகியிருக்கிறது. அது போல முதல் சீசனோடு இரண்டாவது சீசனை கனெக்ட் செய்த ரகமும் வம்படியாகச் செய்தது போலச் செயற்கையான உணர்வையே தருகிறது. இடைப்பட்ட எபிசோடுகளில் மேம்போக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் எழுத்துப்பணிகள் சுவாரஸ்ய தன்மையைக் குறைத்து டல் மீட்டரின் விளிம்புக்குச் சென்று தத்தளிக்கிறது. தேவையைத் தாண்டி நீண்டு கொண்டே போகும் சிலவற்றை வேண்டுமென்றே எட்டு எபிசோடுகளுக்காக இழுத்தது போன்ற எண்ணத்தையே இது கொடுக்கிறது.

முக்கிய ட்விஸ்ட்டைப் பார்வையாளர்களுக்குச் சொன்ன விதமும் அது எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாத வகையில் நம்மைக் கடந்து சென்றதும் இந்த சீசனின் அடுத்த லெவல் சிக்கல்கள்! இப்படியான சில பிரச்னைகளால் இந்த சீசனே சுழலில் சிக்கித் தவிப்பதாய் தெரிகிறது.

எழுத்திற்குப் பக்கபலமாகத் துணை நின்று ஒளிப்பதிவு இலக்கணங்களைக் கொண்டு கதை சொல்கிறார் ஒளிப்பதிவாளர் அப்ரகாம் ஜோசப். ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு கலை இயக்குநரின் சிறை, திருவிழா செட் அப் போன்ற கட்டமைப்புகளும் அதிரடியாக தீனிபோட்டிருக்கின்றன. படத்தொகுப்பாளர் ரிச்சார்ட் கெவின் இடைப்பட்ட எபிசோடுகளில் நீளும் பிரச்னைகளைக் கறார் வாத்தியாராக இருந்து களைந்திருக்கலாம்.

Suzhal 2 Review

களத்திற்குத் தேவைப்படும் மீட்டரைச் சரியாகக் கணித்துப் பரபரப்பான திகிலூட்டும் இசையைக் கொடுத்து சீரிஸின் முக்கிய ஹீரோவாக மிளிர்கிறார் சாம்.சி.எஸ்! அதுவும் அந்த `ஆலங்கட்டி மழை' பாடல் செவிகளுக்கு இனிமையைக் கூட்டும் அழகான நம்பர்!

முதல் சீசனிலிருந்த அந்த சுவாரஸ்யம், தாக்கத்தை ஏற்படுத்தும் திருப்பங்கள் போன்ற வெற்றிக்கான கூறுகள் இதில் மிஸ்ஸாவதால், எதிர்நீச்சல் போட்டும் தப்பிக்க முடியாமல் கடலில் சிக்கித் தவிக்கிறது இந்த `சுழல் 2'.