வயநாடு : `மத்திய அரசின் அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல்' - கேரள வருவாய்த் துறை அம...
Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
ஹைதராபாத் மாநகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல்துறையினருக்கு உதவும் வகையில் தன்னார்வமுள்ள திருநங்கைகளை பணியமர்த்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
திருநங்கை தன்னார்வளர்களுக்கு வழங்குவதற்கான உடைகளையும், சம்பளத் தொகையையும் இறுதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஊர்காவல் படையினர் போலவே சம்பளம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்த முயற்சி முதலில் சோதனை அடிப்படையில் தொடங்கப்படவிருக்கிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் தாவுவது, மற்ற போக்குவரத்து சிக்கல்கள் அதிகமிருக்கும் இடங்களில் திருநங்கைகளை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்கு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதே திட்டம். இது சரியாக செயல்படும்பட்சத்தில் விரிவுபடுத்தப்படும்.
முதல்வர் அலுவலக அறிவிப்பில் 'இந்தியாவின் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத்திட்டம்' இதுதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநங்கைகளுக்கு வேலை வழங்குவது மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கப்படுவதையும் அந்த அறிக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இந்த திட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிக்குப் பிறகு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இதற்கான ஆட்சேர்ப்பு முறைகள், வேலை வாய்ப்பு விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் குறித்த உங்களது கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்!