Union Budget: "வரி பயங்கரவாதம்... பாதிக்கும் நடுத்தர வர்க்கம்" - கெஜ்ரிவாலின் 7 பரிந்துரைகள் என்ன?
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மறுபக்கம், டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசுக்கு 7 அம்சங்களைப் பரிந்துரைத்திருக்கும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் வரி பயங்கரவாதத்தால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து, வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் ஆம் ஆத்மின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ``தேர்தல் சமயத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் பெரும்பாலும் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் தந்திரங்கள். சில கட்சிகள் சாதி, மதத்தின் பெயராலும், சில கட்சிகள் பிற்படுத்தப்பட்டோருக்காகவும், பணக்காரர்களுக்காகவும் வாக்குறுதிகள் அளிக்கின்றன. நோட்டு வங்கி, வாக்கு வங்கி ஆகிய இரு பிரிவினருக்குத்தான் வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால், இதற்கிடையில் நடுத்தர வர்க்கத்தினர் என்ற இன்னொரு பிரிவும் இருக்கிறது.
அவர்கள் எந்தப் பக்கமும் இல்லை. அவர்களைப் பற்றி நாட்டில் எந்தவொரு கட்சியும் கவலைப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தினர் அரசின் ஏடிஎம்-ஆக இருக்கின்றனர். தங்கள் பணத்தில் 50 சதவிகிதத்தை இவர்கள் வரியாகச் செலுத்துகின்றனர். உண்மையில், இந்தியாவின் வரிப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவார்கள் இவர்கள்தான்.
அதிக வரி விதிப்பால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள், நம் நாட்டுக்கான எதிர்காலமாக இருக்கவேண்டுமே தவிர, வேறு நாட்டுக்கு அல்ல. இது ஒரு பெரிய பிரச்னை, ஆனால் தீர்வு என்ன? வரும் பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினரைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு கெஜ்ரிவாலின் 7 பரிந்துரைகள்:
பட்ஜெட்டில் 10 சதவிகிதத்தைக் கல்விக்கு ஒதுக்க வேண்டும். தனியார் பள்ளிக் கட்டணங்களில் வரம்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
உயர் கல்வியை எளிதில் அணுகக் கூடிய வகையில் மானியங்கள், உதவித்தொகைகளை வழங்க வேண்டும்.
சுகாதார பட்ஜெட்டை 10 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். மேலும், சுகாதார காப்பீடு மீதான வரிகளை நீக்க வேண்டும்.
வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தவும்.
அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்.
முதியோர்களுக்கு வலுவான ஓய்வூதியத் திட்டங்கள், அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவ சேவைகள் கொண்டுவர வேண்டும்.
ரயில் பயணங்களில் முதியோர்களுக்கு 50 சதவிகிதம் சலுகை வழங்க வேண்டும்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...