UP: யூடியூப் பார்த்து 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில், 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது..!
உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா. இருவரும் மிர்சாபூரின் சந்தையில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை அதிகாரி, ``சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா, இருவரும் மினரல் வாட்டர் விளம்பரங்களை அச்சிடும் தொழிலில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர். இந்த நிலையில், யூடியூபில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் முறையைக் கற்றுக்கொண்டு ரூ.10 ஸ்டாம்ப் பேப்பர்களில் போலி ரூ.500 நோட்டுகளை அச்சிட்டிருக்கின்றனர். அனைத்து தாள்களிலும் ஒரே மாதிரி சீரியல் எண்கள் இருந்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுவரை 30,000 ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இருவரும் கைது செய்யப்பட்ட சோன்பத்ராவில் உள்ள ராம்கர் சந்தையில் 1000 ரூபாய் மதிப்புள்ள போலி ரூபாய் தாள்களை புழக்கத்தில் விட முயன்ற போது கைது செய்யப்பட்டிருகின்றனர். ரூபாய் தாள்களைப் பற்றிய அறிவு இருப்பவர்களால்தான் அது போலி என்பதை கண்டுபிடிக்க முடியும். அவ்வளவு துள்ளியமாக அந்த தாள்கள் அச்சிடப்பட்டிருக்கிறது. இவர்களிடமிருந்து போலி ரூபாய் நோட்டுகள் தவிர, ஆல்டோ கார், நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள், லேப்டாப், பிரிண்டர், 27 முத்திரைத் தாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்தார்.