உகாண்டாவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 40 வீடுகள்! 13 பேர் பலி
World Chess Championship : குகேஷின் வெற்றியை தீர்மானித்த அந்த ஒரு மூவ்; - தடுமாறிய லிரன்
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான மூன்றாவது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி. வெள்ளை காய்களுடன் ஆடிய குகேஷ் 37 வது நகர்வில் வென்றார். 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இருவரும் 1.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் உள்ளனர். நேற்றைய மூன்றாவது சுற்றின் சில முக்கியத் தருணங்கள் இங்கே.
3-வது சுற்றில் வெள்ளை காய்களைக் கொண்டு ஆடிய குகேஷ், குயின்ஸ் சிப்பாய் ஓப்பனிங் மூலம் ஆட்டத்தைத் தொடங்கினார். அதற்கு, தனது குதிரையை f6-ல் நகர்த்தினார் டிங்.
தனது சிறப்பான ஓப்பனிங் தயாரிப்பு மூலம் வேகமாக ஆடிய குகேஷ், இந்த ஆட்டத்தை குயின்ஸ் கேம்பிட் டிக்லைண்ட் (Queen’s Gambit Decliined) ஓப்பனிங்கில் எக்ஸ்சேன்ஞ் வேரியஷனில் ஆடினார்.
ஓப்பனிங்கில் அதிகமாக யோசித்து நேரத்தை இழந்த டிங் லிரன், ஆட்டத்தின் 10-வது மூவில் தனது மந்திரியை c2-க்கு கொண்டுச் சென்றார். அந்த மந்திரியே இறுதியில் டிங் லிரனிக்கு ஆபத்தாக அமைந்தது.
முதல் ஆட்டத்தில் குகேஷ் தனது நேரக்கட்டுபாட்டில் தவறவிட்டதால் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டத்தில் அவர் மிகச்சிறப்பாக நேரக்கட்டுபாட்டை மேற்கொண்டார். மற்றொரு பக்கத்தில் டிங் சிறப்பான நகர்வுகளை ஆடுவதற்காக அதிகமாக யோசித்து தனக்கான நேரத்தைக் குறைத்துக் கொண்டார்.
சமமாக சென்ற ஆட்டத்தில், டிங் சிறிய தவறு செய்ய குகேஷ் அதனை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். டிங் 18-வது மூவில் தனது யானையை h5 கட்டத்திற்கு நகர்த்தினார். அதற்கு குகேஷ் அட்வாண்டேஜ் பெறுவதற்கான ஒரே ஒரு மூவைச் சரியாக நகர்த்தி டிங் லிரன் மேல் பிரஷரை ஏற்றினார்.
ஆட்டத்தில் ஒரு நேரத்தில் குகேஷ் தொடர்ந்து சிறப்பான நகர்வுகளை ஆட டிங் லிரனிற்கு ஆட்டம் மோசமாக சென்றது. இத்தனை சிறப்பான நகர்வுகளை குகேஷ் செய்திருந்தாலும் 23-வது நகர்வில் குகேஷ் தனது குதிரையை e2-விற்கு நகர்த்தியதே, அவரின் வெற்றிப்பாதையை தீர்மானித்தது.
குகேஷிற்கு ஆட்டம் நன்றாக இருந்தாலும் அதை வெற்றியாக மாற்ற தொடர்ந்து மிகவும் சரியான நகர்வுகளை ஆட வேண்டிய நிலமை ஏற்பட்டது. இறுதி வரை டிங் லிரனும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினாலும், ஆட்டத்தின் தொடக்கத்தில் நேர கட்டுபாட்டை கோட்டைவிட்டதால் இறுதியில் டைம் பிரஷர் மூலம் தோல்வியை அடைந்தார். இந்த வெற்றி மூலம் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று கிடைத்த முன்னிலையை டிங் கோட்டைவிட்டார். தற்போது 3 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 1.5 புள்ளிகள் பெற்றுள்ளனர். மீதமுள்ள 11 போட்டிகளின் முடிவைப் பொருத்து உலக சாம்பியன் தேர்ந்தெடுக்கப்படுவார்.
'முதல் சுற்றின் போது கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அது இயல்பானதுதான் என நினைக்கிறேன். மேக்னஸ் கார்ல்சன் முதல் முறையாக சாம்பியன்ஷிப்பில் ஆடியபோது கூட ஆரம்பச் சுற்றுகளில் பதற்றமாகத்தான் இருந்தார். கடந்த இரண்டு நாட்களை விட இன்று என்னுடைய ஆட்டம் சிறப்பானதாக இருந்ததென நினைக்கிறேன். நான் ஆடியவிதத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.' என குகேஷ் நேற்றைய சுற்றுக்குப் பிறகு பேசியிருந்தார்.